செயற்கை மழையை பெற்றுக்கொள்ள புதிய திணைக்களம் உருவாக்கம்

Facebook Cover V02

tain26இலங்கையின் சக்தி, மின்சக்தி அமைச்சு, புதிதாக செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான திணைக்களம் ஒன்றை உருவாக்கவுள்ளது.

சக்தி, மின்சக்தி பிரதி அமைச்சராக இருந்த அஜித் பெரேராவை மேற்கொள்காட்டி இந்த தகவல் வெளியிட்டுள்ளது.

நீர்மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை பேணுவதற்காகவும், வரட்சியின் போது விவசாயத்துறைக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவுமே இந்த செயற்கை மழைக்கான திணைக்களம் உருவாக்கப்படவுள்ளது.

இலங்கை விமானப்படை, வளிமண்டலவியல் திணைக்களம், இலங்கை மின்சார சபை, நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அதிகாரசபை ஆகியவற்றின் அதிகாரிகள் அடுத்த மாதம் தாய்லாந்துக்குச் சென்று, செயற்கை மழையை பொழிவிப்பது தொடர்பான பயிற்சிகளை பெறவுள்ளனர்.

“ஆண்டுக்கு சராசரி 2000 மி.மீ மழைவீழ்ச்சி நீர் மின் உற்பத்திக்கு போதுமானதாக இல்லை. எங்களுக்கு அதிக மழை தேவை. எனவே தான் செயற்கை மழையை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஆராய்கிறோம்” என்று மின்சார சபை பணிப்பாளர் சுலக்சன ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் போதுமான மழை பெய்யாததால், பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் அதன் கொள்ளளவில் அரைப்பகுதியே நிரம்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அனல் மின்சாரத்தில் தங்கியிருக்க வேண்டியிருக்கும். அதற்கு செலவு அதிகம். அனல்மின்சாரத்தை தனியாரிடம் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே தான்செயற்கை மழையை பொழிவிப்பதற்காக தாய்லாந்தின் உதவியை கோரியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அலகு ஒன்றுக்கு 2 ரூபாவே செலவு ஏற்படும் என்றும் அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு ஒரு அலகிற்கு 25 ரூபா செலவு ஏற்படும் என்றும் இலங்கை மின்சாரசபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

1980களில் செயற்கை மழையை பொழிவிக்கும் செயற்பாடுகள் முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டது. அது வெற்றிகரமாக அமைந்தது.

இப்போது இதற்கான முதற்கட்ட சாத்திய ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன. அடுத்து இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான குழு அமைக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share This Post

Post Comment