வங்கிகளில் ரூ.2,672 கோடி கடன் வாங்கி மோசடி: நகைக்கடை அதிபர் கைது

ekuruvi-aiya8-X3

CBI_09வங்கிகளில் இருந்து ரூ.2,672 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக நகைக்கடை அதிபரை மும்பை விமான நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்திய வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ள பெரும் செல்வந்தர்கள் சிலர், அவற்றை திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் வங்கிகளின் வராக்கடன் அதிகரித்து வருகிறது. இது வங்கிகளின் கடன் வழங்கும் திறனை பாதிப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதனால் வங்கிகளில் அதிக அளவு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் மீது வங்கிகளும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளன. அந்தவகையில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இதைப்போல கொல்கத்தாவை மையமாக கொண்டு இயங்கி வரும் ஸ்ரீகணேஷ் ஜூவல்லரியின் அதிபரான நில்லேஷ் பரேக் என்பவர் வங்கிகளில் இருந்து ரூ.2,672 கோடி அளவுக்கு கடன் பெற்றுள்ளார். இதில் பாரத ஸ்டேட் வங்கியை தலைமையாக கொண்ட கூட்டமைப்பை சேர்ந்த 25 வங்கிகளில் மட்டும் ரூ.2,223 கோடி கடன் வாங்கியுள்ளார்.

இந்த கடனை திருப்பி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள நில்லேஷ் பரேக், இந்த பணத்தை வேறு வழிகளில் திருப்பி விட்டுள்ளார். மேலும் ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்கு ஓடு ஏற்றுமதி என்ற பெயரிலும் மோசடியில் ஈடுபட்டு வந்தார்.

வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட அவர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த பரேக்கை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடங்கினர். இதற்காக பரேக்குக்கு எதிராக சி.பி.ஐ. நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது.

நில்லேஷ் பரேக் துபாயில் இருந்து மும்பை வருவதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. எனவே மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் காத்து இருந்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்து இறங்கிய நில்லேஷ் பரேக்கை, அதிகாரிகள் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Share This Post

Post Comment