அரசாங்கத்துடன் சேர்ந்து கூட்டமைப்பும் நாடகமாடுகின்றது!

Facebook Cover V02

TamilGuardian3காணாமல்போனோர் விடயத்தில் அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாடகமாடுவதாக போரினால் மோசமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சிறீலங்கா அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் அலுவலகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றைய தினம் (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தியதுடன் இந்தக் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர்.

மேலும், நேற்றைய தினம் முல்லைத்தீவிலமைந்துள்ள இராயப்பர் தேவாலயத்தில் ஒன்றுதிரண்ட இம்மக்கள் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அத்துடன், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் கைது செய்து காணாமல் ஆக்கப்பட்டோரும், இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோரினதும் உறவுகள் இணைந்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தைக் கேட்டறிந்தபின்னரே காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளபோதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படாமலேயே அலுவலகம் அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.

அத்துடன், சர்வதேச பங்களிப்பின்றி இந்த அலுவலகம் அமைக்கப்படுவதால் தமக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்குமானால் சர்வதேச நிபுணர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்களும் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு உள்வாங்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தினர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை கைகளில் ஏந்தியிருந்த இந்த மக்கள், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அதிகமாக வசித்துவரும் முல்லைத்தீவு அல்லது கிளிநொச்சி மாவட்டத்திலேயே குறித்த அலுவலகம் அமைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Share This Post

Post Comment