அன்புடன் தமிழ் மக்களுக்கு, அன்புடன் வி.ஆனந்தசங்கரி

அன்புடன் தமிழ் மக்களுக்கு,

15170945_379729392371139_6788198188076224499_nதமிழ் தேசிய கூட்டமைப்பை கலைக்க வேண்டிய காலம் கனிந்துவிட்டது.
நான் பழையவற்றை கிளறுகிறேன் என எவரும் என்மீது குற்றஞ் சுமத்த முடியாது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி பற்றியதும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள பெரும் அனர்த்தத்தை பற்றியும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்காக கட்சிக்காக அயராது உழைத்த பெரியார்கள் பற்றியும் வரிசை கிரமமாக கடந்தகால சம்பவங்களை சரியாக பதிய வேண்டிய புனிதமான கடமை என்மீது சுமத்தப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி;, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவை பற்றிய விடயங்களின் எல்லைக்குள் என்னை வரையறுத்துக்கொள்வேன். இன்றைய தலைமுறையினர் எமது கடந்தகாலத்தைப் பற்றி அரைகுறையாக தெரிந்தும் பூரணமாக தெரியாமலும் இருப்பதால் எனது முயற்சி பெரிதாக பாராட்டப்படுமென எண்ணுகிறேன். சரித்திரத்தை பல கோணங்களிலும் ஆராயும் பக்குவத்தை கொண்டவனல்ல நான். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆரம்பகால உறுப்பினர் என்பதால் அவற்றினதும் அவற்றின் தலைவர்கள் பற்றிய வரலாற்றை கூறக்கூடிய தகுதிபெற்ற தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மிகச்சிலரில் நானும் ஒருவன். நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் இனப்பிரச்சினை தீர்வுக்காக பெறுமதிமிக்க பங்களிப்பையும் தியாகங்களையும் வழங்கிய தலைவர்கள் அனைவரையும் இளம் தலைவர்கள் பலரையும் நான் அறிவேன். இனியும் நான் மௌனமாக இருந்தால் அவர்களின் தியாகங்கள், உயிராபத்தின் மத்தியில் அயராது உழைத்தமை, உயிரை கொடுத்து உழைத்தமை அத்தனையும் அவர்களின் எலும்புக்கூட்டோடு புதைக்கப்பட்டுவிடும்.
இன்று ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் வரலாறு பற்றி ஆராய முற்படுவது இலகுவான காரியமல்ல. மேலும் நிலைமையை குழப்பமடையச் செய்வது எனது நோக்கமல்ல ஆனால்; இவைகளோடு தொடர்புள்ள தெரிவு செய்யப்பட்ட, சில முற்றாக மறைக்கப்பட்டிருந்த அல்லது மிகைப்படுத்தப்பட்டிருந்த அல்லது பிழையான வியாக்கியானம் கொடுக்கப்பட்ட அல்லது மக்களின் நினைவுகளிலிருந்து முற்றாக நீக்கப்பட்ட சம்பவங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அவற்றுக்கு விளக்கம்; கொடுப்பதே எனது முழுநோக்கமாகும். மிக ஆழமாக செல்லாது எனது கவனத்தை கௌரவ.ஜீ.ஜீ.பொன்னம்பலம் கியூ.சி கௌரவ எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கியூ.சி ஆகியோரின் தலைமையில் இயங்கிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழரசு கட்சி ஆகியன இணைந்து செயற்பட்ட காலத்திலிருந்து ஆரம்பிக்க உள்ளேன். இலங்கையின் புதிய குடியரசு அரசியல் சாசனம் 1972ம் ஆண்டு பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கியவேளை கௌரவ.எஸ்.ஜே.வி செல்வநாயகம் கியூ.சி அவர்களின் வேண்டுகோளுக்கமைய தனது கட்சியாகிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை இலங்கை தமிழரசு கட்சியுடன் இணைக்க கௌரவ பொன்னம்பலம் அவர்கள் சம்மதம் தெரிவித்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற புதிய கட்சியை ஆரம்பித்து பின்னர் ஒரு மாநாட்டில்; தமிழர் விடுதலைக் கூட்டணி என்று பெயர் மாற்றம் பெற்றது. இக்கட்சியின் நிர்வாகத்தில் கௌரவ எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைவராகவும் தமிழரசு, தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் திருவாளர்கள்.அ.அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம் ஆகியோர் இணை செயலாளர்களாகவும் இரு கட்சிகளையும் சேர்ந்த திருவாளர்கள் மு. ஆலாலசுந்தரம், வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் பிரச்சார செயலாளர்களாகவும், திருவாளர்கள் வீ.தர்மலிங்கம், தா. திருநாவுக்கரசு ஆகியோர் இணை பொருளாளர்களாகவும் இரு சாராரையும் சார்ந்த பல சிரேஷ்ட சட்டத்தரணிகள் திருவாளர்கள் மாஜி மேல்சபை உறுப்பினர் எஸ்.ஆர்.கனகநாயகம், ஆ.சங்கரப்பிள்ளை, இ.விசுவநாதன், வெ.யோகேஸ்வரன் க.செல்வராசா எஸ்.ராஜநாயகம். எஸ்.நடராஜா ஆகியோருடன் மூத்த தலைவர்கள் பலர் இணைந்து கொண்டனர். திரு. எஸ்.சி. சந்திரஹாசன் சட்டத்துறை செயலாளராக செயற்பட்டார்.
கிளிநொச்சித் தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவபடுத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினர் ஆவேன். திரு.ஆர்.சம்பந்தன் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியில் சேரவில்லை. அதேபோல் திரு. சேனாதிராஜா அவ்வேளையில் குடியரசு அரசு எதிர்ப்பு சுலோகங்கள் எழுதியமையால் தற்காலிகமாக சிறையில் வைக்கப்பட்டிருந்தார். 1972ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் நாங்கள் 18 பேர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டோம். நியமன சபை தலைவராக செயற்பட்ட கௌரவ. தலைவர் எஸ்.தொண்டமான் அவர்கள் திருவாளர் சம்பந்தன் அவர்களை திருகோணமலை தொகுதி வேட்பாளராகவும் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களை காங்கேசன்துறை தொகுதிக்கும் நியமித்து இருவரும் வெற்றி பெற்றிருந்தார்கள் வட்டுக்கோட்டைக்குரிய திரு.அ.அமிர்தலிங்கம் அவர்கள் எவ்வாறு காங்கேசன்துறைக்கும் திரு.எஸ் நடராஜா அவர்கள் ஏன் காங்கேசன்துறைக்கு நியமிக்கப்படவில்லை என்பதையும் திரு. மாவை சேனாதிராஜா நன்கு அறிந்திருந்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி 1972ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கட்சி அவ்வப்போது எடுக்கின்ற தீர்மானங்களுக்கமைய பல்வேறு போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. எமது தலைவர்கள்; பலர் சிறைக்கும் சென்றனர். அவ்வாறே நானும் ஒரு தடவை சிறை சென்றிருக்கின்றேன். கைது செய்யப்பட்ட எமது இளைஞர்கள் சிலர் சித்திரவதை செய்யப்பட்டும், மற்றும் சிலர் சித்திரவதை செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்டனர். தலைவர்களும் தொண்டர்களும் பலவிதமான துன்பங்களை அனுபவித்தனர். பாராளுமன்ற கால எல்லையை நீட்டிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பொதுஜன வாக்கெடுப்பை ஆட்சேபித்து 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தமை ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு இலங்கையிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ இத்தகைய பெரும்பங்களிப்பு செய்யவில்லை. 1983ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நாம் பாராளுமன்றத்தை விட்டு விலகிய வேளையில் பாராளுமன்றம் ஆறாவது திருத்தத்தை அமுல்ப்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கைகளை ஆதரிக்கின்ற எவரும் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு ஒரு சத்திய பிரமானம் செய்யும் சரத்தை சட்டத்தில் திணித்திருந்தது. அடுத்த ஆறு ஆண்டுகளும் எமது பாராளுமன்ற பதவிகள் காலியாகவே இருந்தன. எங்கள் ஒவ்வொருவரிடமும் இன்றைய தலைமுறைக்கு புரியாத அல்லது கேள்விப்படாத நீண்ட சோகக்கதைகள் நிறைய உண்டு. அத்தகைய பெருந்துன்பங்களை அனுபவித்த ஆயிரக்கணக்கானோர் இருக்கும் போது திரு.மாவை சேனாதிராஜா போன்ற இரண்டொருவர்தான் பெரும் தியாகங்களை செய்தார்கள் என இன்றைய தலைமுறையினர் நினைக்கின்றார்கள். இந்தக்காலத்தில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. 1983ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம், தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் பாராளுமன்ற இராஜினாமா, இந்தியாவில் சிலரின் தற்காலிக குடியேற்றம் திருவாளர்கள் ஆலாலசுந்தரம், தருமலிங்கம் ஆகியோரின் படுகொலைகள், இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஆகியவற்றுடன் இன்னும் பல
நீண்டவொரு இடவெளிக்குப் பின் 1989ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்டு நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற நிலைமை காரணமாகவும் சில ஆயுதம் தாங்கிய குழுக்களின் செயற்பாடுகள் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தேசிய பட்டியலில் மாத்திரம் கிடைத்த ஒரேயொரு ஆசனத்தை முன்னாள் எதிர்கட்சித்தலைவர் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதேநேரம் அந்த ஆசனத்தில் வேறும் சிலர் அக்கறை காட்டினர். நியமனம் பெற்று ஆறு மாதங்களில் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களுடன் மிக நெருங்கி பழகியவர்களும் சம்பவம் நடந்த இடத்தில் பிரசன்னமாக இருந்தவர்கள் சிலர் இருந்தும் சாட்சியமளிக்க எவரும் முன்வரவில்லை. அவர்களுள் திரு. மாவை சேனாதிராஜா அவர்களும் ஒருவராவார்.
திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களின் வெற்றிடத்துக்கு அக்கறை காட்டியவர்கள் பலர் இருந்தனர். அவ் வெற்றிடத்துக்கு ஒருவரை நியமிப்பது சம்பந்தமாக 16-09-1989 அன்று கூட்டப்பட்ட கூட்டத்திற்கு நானே தலைமை தாங்கி திரு. மாவை சேனாதிராஜா அவர்களை நானே பிரேரித்தேன். பல நாட்களுக்குப் பின்பு கட்சித் தலைவர் பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் தனக்கே வழங்குமாறு திரு. மாவை சேனாதிராஜா கேட்டதாக நான் அறிந்தேன். இதனை திரு.அ.அமிர்தலிங்கம் குடும்பத்தினர் அனைவரும் அறிந்திருந்தனர். கூட்டத்தில் சமூகமளித்தவர்களில் வேறு சிலரும் அப்பதவியை எதிர்பார்த்து வந்திருந்தனர். இதே நோக்கத்துடன் இந்தியாவிலிருந்து திரு.ஆர்.சம்பந்தனும் உறுப்பினர் தேர்வை அடுத்தக் கூட்டத்தில் நடத்தலாமென பிரேரித்த கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களும் அடங்குவார். அதற்கமைய 05-10-1989ம் அன்று எனது தலைமையில் கூட்டப்பட்ட கூட்டத்தில் திரு.மாவை சேனாதிராஜாவின் பெயரை நான் பிரேரித்ததும் அவா தெரிவு செய்யப்பட்டார். திரு. மாவை சேனாதிராஜாவின் நியமனத்தை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையாளரை சம்மதிக்க வைக்க நாம் பெரும் சிரமப்பட்டோம் என்பதை திருவாளர்கள் ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் நன்கு அறிவார்கள். காரணம் தேர்தல் ஆணையாளரிடம் உள்ள ஆவணங்களில் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளராக குறிக்கப்பட்டிருந்தமையே. நடவடிக்கை குழு (பொலிட் பீரோ) உறுப்பினர் என நாம் மூவரும் கொடுத்த வேண்டுகோளுக்கமையவே திரு.மாவை சேனாதிராஜாவின் நியமனம் தேர்தல் ஆணையாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை திரு. மாவை சேனாதிராஜாவும், திரு.ஆர்.சம்பந்தன் அவர்களே அதனை உறுதி செய்வார் என நம்புகிறேன். அப்படி செய்யாதிருந்தால் திரு. மாவை சேனாதிராஜா அவர்கள் அப்பதவிக்கு கனவிலும் வந்திருக்க முடியாது. எது எப்படியிருந்தாலும் மிக சொற்ப உறுப்பினர்களே இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் அவர்களில் அநேகர் கட்சி உறுப்பினர்கள் அல்ல கட்சி ஆதரவாளர்களே என்பதுதான் உண்மை. திரு. அ.அமிர்தலிங்கம் அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து முக்கிய கட்சி உறுப்பினர்கள்கூட நீண்டகாலமாக எமது காரியாலயத்துக்கு வருவதில்லை. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் இருவர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் மாவட்டசபை உறுப்பிரான திரு.நடேசு என்பவராகும்.
பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட திரு.மாவை சேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கின்ற வாகனம் உட்பட சகல சலுகைகளையும் அனுபவித்தார். ஆனால் இலவசமாக பெற்றுக்கொள்ளக்கூடிய பிரதி இயந்திரத்தை இவரிடம் 25,000 பணம் கொடுத்தே பெற்றோம். இதுவரை அவருடைய தெரிவின் போது மௌனமாக இருந்து செயற்பட்ட சிலரின் பெருந்தன்மைக்கு நன்றி தெரிவித்தது கிடையாது. நிதி பற்றாக்குறையால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த கட்சிக்கு வரி விலக்களிக்கப்பட்ட வாகனத்தை விற்று கிடைத்த பணத்தில் ஒரு சதமேனும் அவர் கட்சிக்கு வழங்கவில்லை. துரதிஸ்டவசமாக இதுபோன்ற விடயங்களை பேசுவது மனதுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் இது அவராக தேடிக் கொண்டதாகும். இன்னும் பல விடயங்கள் தொடரலாம்.
08-08-1994 இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கூட சில குழுக்களின் தலையீட்டால் வடக்கில் ஒரு ஆசனத்தையேனும் தமிழர் விடுதலைக் கூட்டணியால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் கிழக்கு மாகாணத்தில் தேசிய பட்டியலில் கிடைத்த ஒரு ஆசனத்துடன் மொத்தம் ஐந்து ஆசனங்களை கூட்டணி கைப்பற்றியிருந்தது. திகாமடுல்ல தொகுதியில் போட்டியிட்ட திரு.மாவை சேனாதிராஜா அவர்களும் திருகோணமலை தொகுதியில் போட்டியிட்ட திரு.ஆர்.சம்பந்தன் அவர்களும் தேசிய பட்டியலில் கிடைத்த ஆசனத்தை தங்களுக்கே தரும்படி அடம் பிடித்தனர். ஆனால் கட்சியின் தலைவர் திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் அப்பதவியை திரு.நீலன் திருச்செல்வம் அவர்களுக்கு வழங்கினார். தேர்தலில் தோல்வியுற்ற பல வேட்பாளர்கள் இருந்தும் இப்பதவிக்காக போராடியவாகள் இவர்கள் இருவருமே. ஆகையால் கட்சியால் எதனையும் செய்ய முடியவில்லை. இந்தவேளையில் திருகோணமலை பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டிருந்த நண்பன் திரு.அ.தங்கதுரை படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காலியான அவ்விடத்துக்கு திரு.ஆர்.சம்பந்தன் அவர்கள் நியமிக்கப்பட்டார். ஆனால் திரு.மாவை சேனாதிராஜா அவர்களும் அவரால் தூண்டப்பட்ட ஆதரவாளர்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் உடல் நலம் குன்றி இந்தியாவில் இருந்தமையால் இப்பொறுப்பு எனது ஆகியது.
31-05-1999 அன்று கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களுக்கு ஐந்து பக்கத்தில் நிலைமைமைய விளக்கி நீண்டவொரு கடிதம் எழுதி அவருடைய பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்து அவ்விடத்துக்கு திரு.மாவை செனாதிராஜாவை நியமிக்குமாறு கேட்டிருந்தேன். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். அகதி அந்தஸ்த்து கோருவோர் விடயமாக அவசரமாக ஜேர்மெனிக்கு செல்ல வேண்டியிருந்ததால் கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களுக்கு 05-07-1999 அன்று அனுப்பிய கடிதத்தில் நான் திரும்பி வரும்வரை காத்திராமல் அவ்விடத்துக்கு திரு.மாவை சேனாதிராஜாவை நியமிக்குமாறு கேட்டிருந்தேன். துரதிஷ்டவசமாக கலாநிதி நீலன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டமையால் அவரின் ஈமக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காக உடனடியாக கொழும்புக்கு திரும்ப வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டது. இரு நாட்கள் கழித்து இந்த உறுப்பினர் நியமனம் சம்பந்தமாக பேசுவதற்கு கட்சியின் செயலாளர் நாயகம் திரு.ஆர்.சம்பந்தன் அவர்களின் அழைப்பின் பேரில் பாராளுமன்ற கௌரவ உறுப்பினர்களான ஜோசப்பரராஜசிங்கம், பி.செல்வராஜா, எஸ்.துரைராஜசிங்கம் ஆகியோரும் மற்றும் மாவை சேனாதிராஜா, எஸ்.தியாகராஜா நான் ஆகியோர் கலந்து கொண்டோம். இப்பதவிக்கு யாரை நியமிப்பது என்ற திரு.ஆர்.சம்பந்தனின் கேள்விக்கு நான் கலாநிதி நீலனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டவற்றையும் தெரிவித்து எனது ஆதரவையும் திரு.மாவை சேனாதிராஜாவுக்காக தெரிவித்திருந்தேன். அதன்படி திரு.மாவை சேனாதிராஜாவை நியமிப்பதாக அறிவித்ததும் பாராளுமன்ற ஓய்வூதியம் பெற தனக்கு தகைமை கிடைத்துவிட்டதென அவர் மகிழ்ச்சியடைந்தார். அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அனைவரும் எனது தீர்மானத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். பின்பு அவர்களில் சிலர் இரண்டாவது தடவையாகவும் ஒரே நபருக்கு நியமன உறுப்பினர் பதவியை வழங்கியது தொடர்பாக குற்றம் சுமத்தினர். என்னைப் பொறுத்தவரையில் கட்சியின் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காக இதனையொரு தியாகமாக கருதி செயற்பட்டேன். நான் அதனை விரும்பியிருந்தாலும் மிக இலகுவாக அப்பதவி கிடைத்திருக்கும். அன்று நான் விட்ட தவறினால் இப்பதவியை வேறு ஒருவருக்கு கொடுக்காமல் விட்டதையிட்டு சில கட்சி உறுப்பினர்கள் என் மீது கோபம் கொண்டிருந்தனர். அடுத்த பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 10-10-2000 பிரச்சினைகள் எதுவுமின்றி நடைபெற்று முடிந்தது. ஒரு வருடத்தின் பின்னர் பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் 05-12-2001 இல்; நடைபெற்றது. வேட்பாளர்கள் நியமனத்துக்கு முன்பு கட்சியில் அக்கறை கொண்ட முக்கிய பிரமுகர்களான திருவாளர்கள் வீ.கைலாயபிள்ளை, கந்தையா நீலகண்டன், வீ.ஆர்.வடிவேற்கரசன், நிர்மலன் கார்த்திகேயன்,எஸ்.தியாகராஜா, எஸ்.ஜெயபாலசிங்கம் ஆகியோர் அழைப்பின் பேரில் தமிழ் அரசியல் கட்சிகளாகிய தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக கூடியபோது அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் திரு. மாவை சேனாதிராஜா அவர்கள் யாழ் தேர்தல் மாவட்டத்தில் தானே முதன்மை வேட்பாளராக போட்டியிட வேண்டுமென கோரிக்கை விடுத்தார். நியமனக் குழுவிலிருந்த உறுப்பினர்கள் மிக வெறுப்புடனும் கோபத்துடனும் இக்கோரிக்கையை பொருட்படுத்தாமல் விட்டனர்.
இத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் இரு பலமான வேட்பாளர்களை தெரிவு செய்து தம் மூவருக்கும் வாக்குக் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இச் செயல் நேர்மையற்ற செயலெனவும் சுயநல நோக்கம் கொண்டதெனவும் அனைவராலும் கண்டிக்கப்பட்டது. இத் தேர்தலில் திரு.மாவை சேனாதிராஜா அவர்களகு;கு 33,000 வாக்குகளும் எனக்கு 36,000 வாக்குகளும் கிடைத்தன. திரு மாவை சேனாதிராஜாவின் சுயரூபம் இத் தேர்தலுடன் வெளிப்பட்டு கூட்டணியை முற்றுமுழுதாக அழிப்பதற்கு வழிவகுத்தது. 2001ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் திரு. பிரபாகரன் வேண்டுகோளுக்கிணங்க புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தபோது தரமான உணவுகளுடன் பகலும் இரவும் உபசரிக்கப்பட்டோம். சில நாட்களுக்குப் பின்பு விடுதலைப் புலிகள் தாங்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் கோரிக்கை விடுத்தது. அதை நான் ஏற்றுக்கொள்ள மறுத்தேன். ஏனெனில் அவர்கள் அப்படியில்லை என்றும் அத்தகைய கோரிக்கை எதிர்பார்த்த பலனை தராது என்றும் கூறியிருந்தேன். 2003-03-26ம் திகதி ‘தி ஐலண்ட்’ பத்திரிகை பின்வருமாறு செய்தி வெளியிட்டிருந்தது. “தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் தனது கட்சி விடுதலைப்புலிகளின் மேலாதிக்கத்தை ஏற்கவில்லையென்று கூறியிருந்தார். விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தைகளில் அரசாங்கத்துடன் ஈடுபடுவதற்கும் அது போன்ற வேறு விடயங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஏக பிரதிநிதித்துவ அந்தஸ்து வழங்கத் தயார் என்று கூறியிருந்தார்”
அனைவரும் இந்த நிலைமையை கடைபிடித்திருந்தால் பல கொலைகள் தடுக்கப்பட்டு பிரபாகரன் உட்பட ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்.
மிக்க பாசத்தோடு ஈழத்து காந்தி என அழைக்கப்படுகின்ற கௌரவ எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுடைய அகிம்சை கொள்கையின் அடிப்படையில் அவர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். படிப்படியாக திரு.மாவை சேனாதிராஜா அவர்களுடைய நடவடிக்கைகள் அதிர்ச்சியை கொடுக்க ஆரம்பித்தன. அவர் இரு தடவைகள் எனது முயற்சியால் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு மூன்றாவது தடவையாக எமது சகல உதவிகளையும் பெற்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் பாராளுமன்றம் சென்றவர். இலங்கை தமிழரசு கட்சியை மீள இயங்க வைக்க அவர் மேற்கொண்ட முயற்சி, திருவாளர்கள் தந்தை செல்வநாயகம். அ.அமிர்தலிங்கம் ஆகியோர் அவர்மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்வதாக அமைந்துள்ளது. இந்த பாராளுமன்ற உறுப்பினர் திரு. மாவை சேனாதிராஜா அவர்களின் நேர்மை பற்றி ஊடகங்களில் வந்த பின்வரும் செய்தி பொதுமக்களின் சிந்தனையில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமதி அமிர்தலிங்கம் அவர்கள் தனது அறிக்கையொன்றில்,
“எனது கணவர் விரும்பத்தகாத சக்திகள் எவையும் தமிழரசு கட்சியின் சின்னத்தையும் அதன் பெயரையும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே எனது கணவர் தமிழரசு கட்சியின் பதிவை பாதுகாத்து வந்தார். தமிழரசு கட்சியை அவர் ஒருபோதும் புனரமைக்க எண்ணவில்லை. அவரால் வளர்க்கப்பட்ட சிலர் தமிழரசு கட்சியின் பெயரை துஷ்பிரயோகம் செய்யயும், அதனை புனரமைக்கவும் முயல்வது கவலைக்குரியது. இவர்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையையே இவர்கள் முறியடித்திருக்கிறார்கள். எனவே தமிழரசு கட்சியின் புனரமைப்புக்கு நான் அங்கீகாரமோ அல்லது ஆதரவோ அளிக்கவில்லை என்பதை எல்லோருக்கும் திட்டவட்டமாக தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். அத்துடன் இது எமது பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒழித்துவிடும் ஒரு தந்திரோபாயம் என்ற கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்”.
இதற்கு பதிலளித்த திரு.மாவை சேனாதிராஜா 03-11-2003 வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழரசு கட்சியும் அதன் இலட்சியமும் எம்மிடம் பாதுகாப்பாகவே இருக்கின்றன”. என ஆரம்பித்து முன்னுக்குப் பின் முரணாக உண்மைக்கு புறம்பான விடயங்களை உள்ளடக்கி நீண்டவொரு அறிக்கை வெளியிட்டுள்ளார். பின்வரும் செய்தி இவரின் கூற்றில் உள்ள நேர்மையற்ற தன்மையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. 14-10-2003 அதாவது 18 நாட்களுக்கு முன்பு மாவை கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளை சந்திக்கிறார் என்ற தலைப்பில் வெளிவந்த செய்தி பின்வருமாறு தமிழரசு கட்சியின் புனரமைப்பில் ஈடுபட்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறை உதவி பொறுப்பாளர் தங்கனை சந்தித்து கூட்டங்களை நடத்தினார். தமிழரசு கட்சியின் புனரமைப்பு விடுதலைப் புலிகளின் பணிப்புரைக்கேற்ப மேற்கொள்ளப்பட்டது. இவரின் திருகுதாளங்களை மேலும் உறுதிப்படுத்த 19-10-2003 அன்று ஆங்கில பத்திரிகையில் வெளியாகிய இவரின் பேட்டி இவரின் சுயரூபத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அப்பேட்டியில் விடுதலைப் புலிகளின் பணிப்பின்பேரில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயற்சிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு அக்கருத்தை தான் நிராகரிப்பதாக கூறி தமிழரசு கட்சி பிரமுகர்கள் வேண்டுகோளுக்கமையவே மாநாட்டை கூட்ட முயற்சிப்பதாக தெரிவித்தார். ஆனால் 1972 இலிருந்து 2004 பெப்ரவரி மாதம் வரை அதாவது 32 ஆண்டுகளில் யாராவது ஒருவர் தமிழரசு கட்சியில் அங்கத்தவராக சேர்ந்ததாக வரலாறு இல்லை. பொய்க்கும் புரட்டுக்கும் கூட எல்லை இருக்க வேண்டும்.
இன்னுமொரு முக்கிய விடயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இலங்கை தமிழரசு கட்சியை தனது கணவர் ஏன் பதிந்து வைத்திருந்தார் என்ற காரணத்தை திருமதி அமிர்தலிங்கம் அவர்கள் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியிருந்தார். அதே காரணத்தினால்தான் 2004ம் ஆண்டு தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்த திரு. க.சின்னத்துரை அவர்கள் 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழரசு கட்சியின் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் துர்ப்பிரயோகம் செய்த முயற்சித்தபோது அதனை ஆட்சேபித்து வழக்கு தொடுக்க போவதாகவும் இந்த முயற்சியை அனுமதிக்க வேண்டாமென தேர்தல் ஆணையாளரையும் கேட்டிருந்தார். ஆனால் திரு. மாவை சேனாதிராஜா அவர்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் திரு.சு.ப.தமிழ்ச்செல்வனின் அதிகாரத்தை பாவித்து திரு.க.சின்னத்துரை அவர்களையும் மௌனிக்க செய்த பெருமை அவருக்கே உண்டு. இன்றும்கூட தமிழரசு கட்சியின் தலைவர், செயலாளர் பதவியை வகிக்கின்ற தகுதி எவருக்கும் இல்லை. ஏனெனில் கட்சி முறையாக புனரமைக்கப்படவில்லை.
நாம் மிகவும் கௌரவம் பேணுகின்ற தலைவர்களாகிய திருவாளர்கள் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம் போன்றவர்களை இவரின் இச்செயல்கள் அவமதிப்பதோடு உண்மையாகவும் விசுவாசமாகவும் செயற்படுகின்ற தமிழர் விடுதலைக் கூட்டணி தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் அவமதிக்கின்றது. பெரும் தலைவரை ஈழத்து காந்தி என பாசத்தோடு மதிப்பது போல் பாசாங்கு செய்பவர்கள் தமது நன்மைக்காகவே அவரின் பெயரை பயன்படுத்துகின்றனர். இதற்கு தலைமை தாங்குகின்றவர் திரு. மாவை சேனாதிராஜா அவர்களேயாகும்.
தமிழர் விடுதலைக் கூட்டணி மரியாதை நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அவர்களை கொண்டு இலங்கை தமிழரசு கட்சியின் வெள்ளிவிழா 18-12-1974 இல் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ணா மண்டபத்தில் கொண்டாடப்பட்ட போது ‘மூதறிஞர்’ பட்டம் வழங்கப்பட்டது. அவ்விழாவில் மக்கள் சார்பாக அன்னாருக்கு பொன்னாடை போர்த்துகின்ற கௌரவம் எனக்கு வழங்கப்பட்டது. தந்தை செல்வா அவர்கள் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் கலந்து கொண்ட இறுதி நிகழ்ச்சி இதுவேயாகும். அது மட்டுமல்ல இதன் பின்னர் 2004ம் ஆண்டு தமிழரசு கட்சியின் பெயர் துஸ்பிரயோகம் செய்யப்படும்வரை 30 ஆண்டுகள் நடைபெற்றத் தேர்தல்கள், வகிக்கப்பட்ட பதவிகள் அத்தனையும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பானதே.
இலங்கை தமிழரசு கட்சியின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் பின் அவர் இலங்கை தமிழரசு கட்சியை புனரமைக்க கனவில் கூட எண்ணியதில்லை. அனைத்துத் தேவைகளுக்கும் தமிழ் மக்களின் சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியே இருக்க வேண்டுமென விரும்பியிருந்தார். இதற்கு முன்னோடியாக தன் உயிருள்ள காலத்திலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை பதவியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு.எஸ்.தொண்டமான் அவர்களுடனும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இம் மூன்று தலைவர்களும் அமரர்களாகி விட்டார்கள் என்பதால் வேறு யாரும் குறுக்கு வழியில் அந்த ஆசனத்தில் அமர முடியாது.
1972ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் 2001ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோதும் அதன் பின்பும் 2004ம் ஆண்டு பொதுத் தேர்தல் வரை தமிழர் விடுதலைக் கூட்டணியே தொடர்ந்து இயங்கி வந்தது. சிலருடைய சுயநலம் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மாறாக செயற்பட்டவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்த கட்சிகளுக்கும் அறிவிக்காமல் தமிழர் விடுதலைக் கூட்டணியை நீக்கிவிட்டு இலங்கை தமிழரசு கட்சியை முறையற்ற வகையில் திரு.மாவை சேனாதிராஜா தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டார். தந்தை செல்வா அவர்களால் உருவாக்கப்பட்டு நீண்டகாலமாக முடக்கி வைக்கப்பட்டிருந்த தமிழரசு கட்சிக்கும் முறையற்ற வகையில் திரு. மாவை சேனாதிராஜா அவர்களால் எவரோ ஒருவரின் தூண்டுதலுக்கிணங்கி மீண்டும் மீள்புனரமைப்பு செய்த தமிழரசு கட்சிக்கும் சட்டரீதியாக எதுவித தொடர்பும் இருக்கவில்லை. அப்படியிருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியை நீக்கியதோ அன்றேல் அதனிடத்தில் தமிழரசு கட்சியை இணைத்துக் கொண்டதோ நியாயப்படுத்த முடியாத செயலாகும் என்பது மட்டுமல்ல தமிழ் இனத்தையே பாதிக்கக்கூடிய பாரதூரமான விளைவுகளை உருவாக்கியதும் இந்த சம்பவமே.
2004 ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலே நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான அரசியல் பேரழிவை உண்டாக்கி நாட்டில் என்றும் நடக்காத வகையில் ஜனநாயகத்தை தடம்புரள வைத்தமைக்கு திருவாளர்கள் மாவை சேனாதிராஜா, ஆர்.சம்பந்தன் அவர்களே பொறுப்பேற்க வேண்டும். இதற்கு முக்கிய காரணம் 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்றும் அவர்களே தமிழ் மக்களின் தேசிய தலைமை என்றும் தமிழ் மக்கள் தமிழரசு கட்சிக்கே வாக்களிக்குமாறு கோரப்பட்டது. இக்காலத்தில் யுத்தம் முடியும் வரைக்குமான விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அனைத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியது. தேர்தல் அதிகாரிகளின் பணியை இத்
தேர்தலில் விடுதலைப் புலிகளே கையாண்டனர். அவர்களுடைய செயற்பாட்டால் தேர்தலில் வென்ற 22 ஆசனங்களில் இரண்டு திரு. மாவை சேனாதிராஜா, திரு ஆர்;.சம்பந்தன் அவர்களுக்கும் கிடைத்தது. இந்த வெற்றி பலாத்காரமாக திணிக்கப்பட்டமையால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக தமது பாராளுமன்ற பதவிகளை இராஜினாமா செய்திருக்க வேண்டும். தேர்தல் கண்காணிப்புக்குழு வடக்கு கிழக்கு மாகாணத்தில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதற்கு சட்டத்தில் இடமில்லையென ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது.
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றில் அவர்கள் நீக்கப்பட்டிருக்க வேண்டும் அன்றேல் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். இதில் எதனையும் அரசு மேற்கொள்ளவில்லை. 225 அங்கத்தவர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில்; 10 வீதமாகவுள்ள இவர்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் செயற்பட்டு பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை ஆறு ஆண்டுகள் செயற்பட்டமை சட்ட விரோதமான முறையாகும். இவர்கள் அடுத்தத் தேர்தலிலும் வெறும் 10 வீதமான வாக்குகளை மட்டும் பெற்று 14 ஆசனங்களை கைப்பற்றினர். இத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் அத்தனை பேரும் தோல்வியை அடைந்தனர். இவர்களிடமிருந்த பாராளுமன்ற உறுப்பினாகளின் எண்ணிக்கை 18 ஆகும். அவர்கள் தோற்கவில்லை எதுவித தேர்தல் வேலைகளிலும் ஈடுபட விடாது பல்வேறு தந்திரங்களை கையாண்டு தோற்கடிக்கப்பட்டனர். இதுவரை இச் சீர்கேட்டை சரிப்படுத்த அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் வேடிக்கையாதெனில்; காலையில் தோல்வியுற்ற திரு. மாவை சேனாதிராஜா மாலையில் வெற்றிபெற்றமையாகும். எல்லாவற்றக்கும் மேலாக இந்த இடைப்பட்ட காலத்தில் திருவாளர்கள் கிங்ஸ்லி ராசநாயகம். என்.ரவிராஜ், தி.மகேஸ்வரன், அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், ராஜன் சத்தியமூர்த்தி ஆகியவருடன் 500 இற்கு மேற்பட்ட அப்பாவிகளின் படுகொலைக்கும் 1500 இற்கும் மேற்பட்ட காயமுற்றவர்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பை தவறாக வழிநடத்திய திருவாளர்கள் ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகிய இருவருமே பொறுப்பேற்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஏனைய அங்கத்துவ கட்சிகள் வெறும் அப்பாவிகளும் அனுதாபத்துக்குரியவர்களுமாவர். இவர்களுக்கு பதவியை பெற்றுக்கொடுத்த விடுதலைப் புலிகளையே போர்குற்ற விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தனது ஆரம்பகாலம் தொடக்கம் எத்தகைய முக்கியமான பங்களிப்பை செய்திருக்கிறது என்பதை உலகுக்கு காட்ட அவைகளின் சுருக்கமான வரலாற்றை இங்கே குறிப்பிட்டுள்ளேன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்பம் சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம் போன்ற தலைவர்களுக்கு அடுத்ததாக கணிக்கப்படக் கூடிய இருவரால் செய்யப்பட்ட பெரும் தியாகத்தால் உருவானதாகும். அவ்விரு தலைவர்களாகிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களும் தமிழ் மக்களின் நன்மை கருதி தமது சின்னஞ்சிறு பிரச்சினைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ் பேசும் மக்களுக்காக உழைக்கவும் ஒற்றுமையை நிலைநாட்டவும் ஒன்றுபட்ட அமைப்பாக உருவாக்கப்பட்டதே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். காந்திய வழியை பின்பற்றும் ஈழத்து காந்தியெனவும் தந்தை செல்வா எனவும் பிரபல்யமாக அழைக்கப்படும் தந்தை செல்வா உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினர்கள் பலரில் நானும் ஒருவனாவேன். தந்தை செல்வா அவர்களால் உருவாக்கப்பட்டு செயலிழக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்குப்பின் ஒரு சிலரின் நலன்களுக்காக சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவு எதுவுமின்றி இலங்கை தமிழரசு கட்சியை மீண்டும்; புனரமைத்தமையானது இந்த நூற்றாண்டில் தமிழ் மக்களுக்கு நடந்தேறிய மிகப்பெரும் அரசியல் துரோகம் மட்டுமல்ல தமிழரசு கட்சியின் மீள்உருவாக்கம் ஏற்கக்கூடியதுமல்ல.
80 அடி உயரமான உச்சியில் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட நினைவு தூண் அன்னார் தகனக்கிரியைகள் செய்யப்பட்ட யாழ் முற்றவெளி மைதானத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது மட்டுமல்ல நிரந்தரமாக அதே இடத்தில் சில சமயம் உலகம் அழியும் வரை நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு அருகாமையில் அன்னாரின் அஸ்தியை கொண்டிருக்கும் கல்லறை தூணுக்கு துணையாக அமைந்துள்ளது.
இப்பெரியாரின்; வரலாற்றில் சில பகுதிகள் மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் அன்னாரின் விருப்பப்படி செயலிழக்கச் செய்யப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியை புனரமைப்பு செய்ய முற்பட்டதால் ஏற்பட்ட குழப்பமாகும். அவரால் உருவாக்கப்பட்ட இலங்கை தமிழரசு கட்சிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் என்ன நடந்தது என உலகுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய புனித கடமை எனக்குண்டு. பொது மக்களுக்கும் உலகளாவியளவில் பரந்துவாழும் சம்பந்தப்பட்ட எம் மக்களுக்கு இத்தால் அறியத்தருவது யாதெனில் தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்து இன்றும் இயங்குகின்றது என்பதையும் இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கியவர் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக தகனக் கிரியைகள் செய்யப்பட்டு அவரின் ஞாபகார்த்தமாக நன்றியுள்ள இலங்கை மக்களால் நினைவு தூபி நிறுவப்பட்டுள்ளது. 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை தமிழரசு கட்சியை புனரமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னேற்றம் விஷமத்தனமாக தடுக்கப்பட்டு ஸ்தாபகரும் அவமதிக்கப்பட்டுள்ளார்.
எமது பெருந்தலைவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமானால் தற்போதைய இயங்குகின்ற தமிழரசு கட்சி முடக்கப்பட வேண்டும் என்பதோடு சம்பந்தப்பட்டவர்கள் அதை கலைத்துவிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைய வேண்டுமென்றும் அதற்கேற்ப விசுவாசமாகவும் அன்போடும் தந்தை செல்வாவை நேசிக்கின்றவர்கள் வருகைக்காக கூட்டணியின் கதவு திறந்தேயிருக்கும்.

அன்புடன் வி.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம் – த.வி.கூ


Related News

 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • ஜஸ்ரின் ரூடோ தடுமாறுகின்றாரா? ரதன்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *