ஒன்றுக்கு ஒன்று அன்பளிப்பு – போர் விமானங்களை விற்க சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் புதிய தூது!

Facebook Cover V02

por_vimanamசிறிலங்காவுக்கு எட்டு ஜே.எவ்-17 ஜெட் போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான புதிய முயற்சிகளை பாகிஸ்தான் முன்னெடுத்திருப்பதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா விமானப்படை கொள்வனவு செய்யும் ஒவ்வொரு ஜே.எவ்-17 போர் விமானத்துக்கும், எவ்-7 ரக ஜெட் போர் விமானம் ஒன்றை அன்பளிப்பாக வழங்குவதற்கு இஸ்லாமாபாத் திட்டமிட்டிருப்பதாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மூன்றாவது தலைமுறை சுப்பர்சொனிக் போர் விமானமான எவ்-7, சீனாவில் தயாரிக்கப்பட்டதாகும். இந்தப் போர் விமானங்கள் 1992ஆம் ஆண்டில் இருந்து சிறிலங்கா விமானப்படையின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

சிறிலங்காவுக்கு ஜே.எவ்-17 போர் விமானங்களை விற்பனை செய்வது தொடர்பான பரப்புரைகளை மேற்கொள்வதற்கு, சிங்கப்பூரைச் சேர்ந்த ஆலோசனை குழுவொன்றை பாகிஸ்தான் பணியில் அமர்த்தியுள்ளது.

முக்கியமான அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை இரண்டு முக்கியமான நிறுவனங்களின் ஊடாக அணுகுவதற்கு பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதில் ஒரு நிறுவனம், பாகிஸ்தான் விமானப்படையின் முன்னணி நிறுவனமாகும். இந்தக் குழுவுக்கு கொழும்பில் பாகிஸ்தானின் தூதுவராகப் பணியாற்றியவர் உதவி வருகிறார்.

இந்த தகவல் இன்னமும் உறுதிப்படுத்தப்படாத போதிலும், பாகிஸ்தான், சிறிலங்கா ஆகிய நாடுகளால் மறுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா விமானப்படை பாகிஸ்தானிடம் இருந்து ஜே.எவ்-17 போர் விமானங்களை வாங்குவதற்கான முயற்சிகளை கடந்த ஆண்டு மேற்கொண்டிருந்த நிலையில், இந்தியா அதனைத் தடுத்திருந்தது.

அதற்குப் பதிலாக தனது நாட்டுத் தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை வழங்கத் தயார் என்று இந்தியா கூறியதாகத் தகவல்கள் வெளியாகின.

சிறிலங்கா விமானப்படைக்கு 8 தொடக்கம் 12 போர் விமானங்களை வாங்குவதற்காக அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும், எந்த நாட்டு விமானத்தை கொள்வனவு செய்வது என்று முடிவெடுக்க முடியாத நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment