அமைச்சர்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ள கமல்ஹாசன் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு

Facebook Cover V02

kamal house._L_styvpfதமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட அதிக அளவில் ஊழல்கள் நடப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

இதற்கு அ.தி.மு.க. அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சர்கள் கூறுகையில், “கமல்ஹாசன் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா? சும்மா பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. எது பேசுவதாக இருந்தாலும், அரசியலுக்கு வந்து ஆதாரத்துடன் பேச வேண்டும்” என்று சவால் விட்டனர்.

இந்த சவாலை நடிகர் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டார். தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் நடக்கும் ஊழல்கள் தொடர்பான ஆதாரத்தை அந்தந்த துறை அமைச்சர்களின் இணைய தள இ.மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

கமல்ஹாசனின் கோரிக்கையை ஏற்று அவரது ஆதரவாளர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஊழல்கள் குறித்து ஆதாரங்களை திரட்டினார்கள். ஆனால் அமைச்சர்களின் இணைய தள முகவரிகள் மற்றும் இ.மெயில் தகவல் தொடர்புகள் அனைத்தும் திடீரென முடக்கப்பட்டதால் புகார்களை அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ஊழல் புகார்களை லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அனுப்புங்கள் என்று கமல்ஹாசன் புதிய வேண்டுகோள் விடுத்துள்ளார். அதோடு ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தை எப்படி தொடர்பு கொள்வது என்ற விபரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து தமிழக அமைச்சர்களுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையிலான கருத்து மோதல் அதிகரித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் மீது அமைச்சர்களின் கண்டனம் தொடர்ந்தபடி உள்ளது. இன்று காலையிலும் அமைச்சர் சி.வி.சண்முகம் சில கருத்துக்களை வெளியிட்டார்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனின் தொடர் வேண்டுகோள்கள் தமிழக அரசுக்கு எதிராக மக்களை தூண்டி விடுவது போல இருப்பதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் கருதுகிறார்கள். எனவே அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளால் கமல்ஹாசனுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று உளவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டை சிக்னல் சந்திப்புப் பகுதியில் அதாவது டி.டி.கே. ரோடும், எல்டாம்ஸ் சாலையும் இணையும் பகுதியில் உள்ளது.

தேனாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குள் அவர் வீடு பகுதி வருகிறது. ஆனால் தி.நகர் மற்றும் மயிலை போலீஸ் சரகத்தின் மையப் பகுதியாக அவர் வீடு அமைந்துள்ளது. எனவே மயிலாப்பூர் போலீஸ் துணைக் கமி‌ஷனர் சரவணன், தி.நகர் போலீஸ் துணைக் கமி‌ஷனர் அரவிந்தன் ஆகிய இருவர் தலைமையிலும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கமல்ஹாசனின் வீடு முன்பு தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் கிரி மேற்பார்வையில் மொத்தம் 13 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கமல்ஹாசன் வீடு முன்பு இருப்பார்கள்.

கமல்ஹாசன் வீடு அருகில் வந்து செல்லும் அனைவரையும் அவர்கள் கண்காணிப்பார்கள். சந்தேகப்படும்படி வரும் நபர்களிடம் உரிய விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னையில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் கமல்ஹாசன் வீடு பகுதிக்கு செல்வதைத் தடுக்க முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான கண்காணிப்பு பணியில் சுமர் 50 போலீசார் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. கமல்ஹாசன், தனக்கு அதிக பாதுகாப்பு தேவை என்று எந்தவித கோரிக்கையும் விடுக்கவில்லை.

எனவே அவருடன் போலீசார் யாரும் பாதுகாப்புக்கு செல்ல மாட்டார்கள். என்றாலும் விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, சென்னை போலீசார் தாமாக முன் வந்து அவர் வீட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அவர் செல்லும் விழாக்கள் பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment