அஜித் சபாரட்ணம் என்ற ஒரு தனிநபரின் முகத்திற்காகத் தான் பல லட்சம் அனுசரணையா ? – அஜித் சபாரத்தினம் பதில்

1980 களில் இலங்கையில் தோன்றிய இன மோதல்கள் சிறுபான்மை தமிழ் சமூகத்தை அவர்களின் சொந்த நிலத்தில் இருந்து வேர் பிடுங்கி வீசத் தொடங்கியது. யுத்தம் தின்ற நிலத்தில் இருந்து கலைந்து போகாத இலட்சியங்களை கனவுகளாக சுமந்தபடி வெளியேறிய தமிழினம் தாம் வந்து வீழ்ந்த மண்ணில் வீரியம் கொண்ட இனமாக எழுச்சி பெற்றது வரலாறு.
குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளில் கனேடிய மண்ணில் தமிழர்களின் சாதனைப் பயணம் இங்குள்ள ஏனைய பலம்பெயர் சமூகத்தின் வளர்ச்சி வேகத்தை விட பலமங்காக பெருகிப் பரவியதை காலம் எடுத்துக் கூறி நிற்கின்றது.
தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகாக இருவர் பாராளுமன்றம் சென்றுள்ளார்கள் பல்லாயிரக்கணக்கான துறைசார் நிபுணர்கள் உருவாகி வெற்றிகரமான மனிதர்களாக திகழ்கின்றார்கள், ஆயிரக்கணக்கான வர்த்தக முயற்சிகள், பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் என தமிழர்களின் சாதனைப் பயணம் பல்லின சமூகங்களால் பெருமையோடும் பொறாமையோடும் நோக்கப்படுகின்றது.
கனடாவில் தமிழர்களின் வர்த்தக முயற்சிகளின் வளர்ச்சி இவ்வாறு இருக்கும் என்பதை 25 ajithஆண்டுகளுக்கு முன்னரே உய்த்துணர்ந்தவர்கள் நீண்டகால நோக்கோடு ஆரம்பித்த கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனம் இந்த வருடம் வெள்ளி விழா காண்கின்றது.
25 ஆண்டுகள் பல தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பினால் வளர்ச்சி பெற்ற கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனம் முழு நிறைவு பெற்ற ஒன்றாக தனது அடுத்த கட்டப் பாச்சலுக்கு தன்னை தயார்ப் படுத்திக் கொள்கின்றது.
25 வருடங்களில் பல தலைவர்கள் பல நூறு செயற்குழு உறுபினர்களை கண்ட ஒரு ஒரு தமிழ் அமைப்பு என்றபெருமையும் , தனியே ஒரு இருவரின் தனிப்பட்ட தேவைகளுக்கு கட்டுப்படாது , ஒரு சமூகம் சார்ந்து கால ஓட்டத்தில் புது புது தலைவர்கள , உறுப்பினர்களின் தேர்ந்தெடுத்து வளர்ந்து வரும் அமைப்பாகும் .
25 வருடங்களில் நடத்திக் காட்டாத எதனை இவர்கள் இனி செய்யப் போகின்றார்கள் என்ற ஏளனப் பேச்சுக்களை ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு தமக்கான வேலைகளை பார்க்கத் தொடங்கியிருக்கின்றார்கள் அஜித் சபாரட்ணம் தலைமையிலான வர்த்தக சம்மேளத்தினர்;.
கனடாவில் வாழும் தமிழர்களுக்கான முழுமையான ஒரு அடையாளமாக கனேடிய வர்த்தக சம்மேளனத்தை அடையாளப்படுத்தக் கூடிய பல அம்சங்களையும் தனித்துவங்களையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை அதன் மீது விமர்சனங்களை முன்வைப்பர்கள் எப்போதும் கருத்திலும் கணக்கிலும் எடுப்பதில்லை.
கனேடிய வர்த்தக சம்மேளனத்தில் எவரும் உறுப்பினராக இணைய முடியும் என்பதே மிக மிக முக்கியமானது. கனடாவில் உள்ள தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு அமைப்பிலும் இது இல்லை . சில தமிழ் அமைப்பில் உறுப்பினராக இணைவதற்கு விண்ணப்பித்த பலரும்வருடக்கணக்கில் அவர்களின் பதிலுக்காக காத்திருக்கின்றார்கள் என்பது மிகவும் கசப்பான உண்மை
இந்நிலையில் கனடாவில் கடந்த 25 ஆண்டுகளாக யாரும் இணையவும் தகுதியுள்ளவர்கள் வாக்களிப்பின் மூலம்தலைவர்களாகவும் பணிப்பாளர்களாகவும் வரக் கூடிய ஜனநாயகச் சூழலை கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனம் கொண்டிருப்பது மிக முக்கியமானது என்பதை எவரும் நிராகரிக்க முடியாது.
இன்று வர்த்தக சாவடி நிகழ்வுகளாகட்டும், ஆளும் கட்சி எதிர் கட்சி தலைவர்கள் கலந்து சிறப்பிக்கும் “ பிரம்மாண்ட”இரவு விருந்துகளாகட்டும், வைத்தியசாலைகளுக்கான நிதி சேர் நடைபவனிகளாகட்டும் தமிழர்களுக்கு அறிமுகம் செய்த பெருமை கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்திற்கே சொந்தமானது.
தாங்கள் ஆரம்பித்த நிகழ்வுகளை ஏனையவர்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கும் போது அவர்களோடு முட்டி மோதி போட்டி போடாமல் வழிவிட்டு ஒதுங்கி நிற்பதை வர்த்தக சம்மேளனத்தின் தோல்வியாக நோக்குவதும் மிகத் தவறானது.
ஆனாலும் இன்னும் பலவிடயங்களை கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனம் தமிழ் சமூகத்திற்கு செய்திருக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை என்ற போதிலும் அதில் இணைந்து கொள்ளாமல் வெளியில் இருந்தவாறு அதனை விமர்சிப்பதாலும் அது குறித்து குற்றம் குறை கண்டுபிடிப்பதாலும் எவருக்கும் நன்மைகள் ஏற்படாது என்பதையும் நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்
ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர் இது என்பதால் இனியாவது அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்கின்றார் கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளத்தின் தலைவர் அஜித் சபாரட்ணம்.
ஆனால் அவரைச் சுற்றி உள்ள அவருக்கு விசுவாசமான ஒரு சிலரின் கருத்துக்களை மட்டுமே அஜித் கேட்டு நடக்கின்றார், என்ற விமர்சனம் குறித்து அவர் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
கனடாவில் வாழும் மூன்று இலடச்சத்திற்கும் அதிகமான தமிழர்களை பல்லின கலாசார சமூகத்தின் மத்தியில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முக்கிய அமைப்பின் தலைவர் மற்றவர்களின் கருத்துகளுக்கும் செவிசாய்க்க வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலிக்கின்றன.
அவ்வாறான குரல்களையும் மாற்றுச் சிந்தனைகளையும் அஜித் சபாரட்டணம் கவனத்தில் கொள்ள வேண்டியதும் அதில் உள்ள நன்மை தீமைகளை தீவிரமாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டியதும் பொறுப்பு வாய்ந்த ஒரு தலைவரின் பண்பாகும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
மாறாக தன்னை கேள்வி கேட்காத அல்லது தான் சொல்பவற்றிற்கு தலையை ஆட்டும் நலன் விரும்பிகளின் வட்டத்தை விட்டு அவர் வெளியில் வரவேண்டும்.
பலரது கருத்துக்களை உள்வாங்கி , தமிழ் வர்த்தகர்களை ஒன்றிணைக்கும் போது அஜித் காலத்தால் மறக்க முடியாத தலைவராக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் தன்னை நிலை நிறுத்தலாம்.

இதுவரை வர்தக சம்மேளனத்தின் தலைவர்களாக இருந்தவர்களுக்கும் அஜித் சபாரட்ணத்திற்கும் இடையில் மிகப் பெரிய வேறுபாடாக அவரின் தனித்துவமான ஆளுமைத் திறன் கருதப்படுகின்றது இதனை சிலர் ஆளுமை என்றும் வேறு சிலர் சர்வாதிகாரப் போக்கு என்றும் குறிப்பிடுகின்றார்கள்.
இதில் எது சரி எது தவறு என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.
கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் அடுத்த கட்டப் பாச்சலுக்கு அஜித் போன்று முடிவெடுக்கும் அதிகாரங்களை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காத அதே நேரம் தான் எடுக்கும் முடிவுகளுக்கான பொறுப்புகளை ஏற்கும் துணிச்சல் மிக்க ஒரு தலைவரே அவசியம் என்பதை அஜித் சபாரட்ணம் நிருபிக்க வேண்டிய தேவை அவர் முன் எழுந்துள்ளது.
பனிக்காலத்தை இடையிடையே ஞாபகப்படுத்தும் இலேசான பனிச்சாரல் அடிக்கும் மாலையில் சூடான தேனீருடன் அதைவிடச் சூடான கேள்விகளுடன் அஜித் சபாரட்டணத்தை சந்தித்தோம்.
பல இலட்சங்களை செலவு செய்து இரண்டு நாட்கள் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களை கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்வது குறித்த விமர்சனங்களை தனக்கே உரிய பாணியில் அஜித் சபாரட்டணம் எதிர் கொண்டார்.
பெருமளவு பணம் செலவிடப்படவுள்ளது என்பது உண்மை தான் ஆனால் அது ஏன் அவசியமாகின்றது என்ற கேள்வியும் அதனோடு இணைக்கப்பட வேண்டும். மூன்று தசாப்தங்களை தாண்டும் தமிழர்களின் கனேடிய இருப்பு ஏற்படுத்தியுள்ள சாதனைகளை கனடாவில் வாழும் மாற்றின சமூகங்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு தமிழர்களுக்கு கிடைத்துள்ள ஒரு வாய்ப்பு.
இந்த நாட்டில் தமிழர்கள் 25 ஆண்டுகளாக ஏற்படுத்திய வர்த்தக சாதனைகளை மற்றயை சமூகங்களுக்கு கொண்டு சேர்ப்பது இந்த சந்தரப்பத்தில் தமிழ் சமூகத்திற்கு இன்றியமையாதது.
மறுபுறம் கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் ஒரு இலாப நோக்கமற்ற தொண்டரமைப்பு அல்ல அது போல் அது தமிழர்களின் அரசியலுக்காக குரல் கொடுக்கும் அரசியல் அமைப்பும் அல்ல. மாறாக தமிழர்களின் வர்த்தக சம்மேளனம். இது தமிழ் மக்கள் இந்த நாட்டில் ஏற்படுத்தியுள்ள வர்த்தக சாதனைகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதற்கும் அதன் மூலமாக புதிய வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்தி தமிழர்களின் வர்த்தக முயற்சிகளை மேம்படுத்துவதற்கான ஒரு அமைப்பு. எனவே நாங்கள் எங்கள் வெற்றிகளின் பிரம்மாண்டத்தை உரிய வகையில் வெளிப்படுத்துவது மிக அவசியமானது.
25 வருடகால சாதனைப் பயணத்தை சில நூறு பேர் அமரும் சிறிய மண்டபத்தில் நடத்தி முடித்துவிட்டுச் செல்வது பொருத்தமாக இருக்காது என்பதால் தான் இந்த ஏற்பாடுகளை மேற்கொள்ள நாம் தீர்மானித்தோம்.
மாற்றின சமூகங்களுக்கும் கனேடிய மையநிரோட்ட வர்த்தக முனைப்புகளுக்கு இணையாக நாம் வளர்ந்திருக்கின்றோம் என்பதை வெளிக்காட்டும் ஒரு சந்தர்ப்பமாக இந்த வெள்ளி விழா நிகழ்வுகள் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
எனவே இது தேவையான நேரத்தில் முன்னெடுக்கப்படும் அவசியமான ஒரு நிகழ்வு என்பதில் எமக்கு மாறுபட்ட சிந்தனைகள் எதுவும் இல்லை.
இது புதிய புதிய வாசல்களை தமிழ் வர்த்த முயற்சிகளுக்கும் வர்தகர்களுக்கும் ஏற்படுத்தி தரும் என்று நாங்கள் திடமாக நம்புகின்றோம்.
ஒரு வெற்றி பெற்ற இனமாக எங்களை அடையாளப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் மீதும் அவர்களின் தொழில் முயற்சிகள் மீதும் மாற்றினத்தவர்கள் நம்பிக்கை கொள்வதற்கான வாய்ப்பினை இந்த இரண்டு நாள் நிகழ்சிகள் மூலம் ஏற்படுத்த முடியும்.
இதில் கனடாவில் உள்ள பல்வேறு சமூகங்களின் வர்த்த முன்னோடிகள், பெரு ஊடக நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். அவர்கள் மூலமாக எங்கள் சமூகம் சார்ந்த ஒரு பெருமதிப்பு கட்டியெழுப்பப்படும்.இது எமது சமமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு இன்றியமையாதது.
எமது திறமைகளையும் தகமைகளையம் நாங்கள் தான் மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் அதற்கான ஒரு வாய்ப்பாக கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளத்தின் வெள்ளி விழா நிகழ்வுகளை நான் பார்க்கின்றேன்
வெள்ளி விழா நிகழ்வுகளை பிரம்மாண்டமான முறையில் நடத்துவது குறித்து எமது பணிப்பாளர்களுக்கு முதல் தடiவாயக தெளிவு படுத்திய போது அதற்கு எதிராக எவரும் குரல் எழுப்பவில்லை அல்லது அது குறித்து விமர்சிக்கவில்லை என்பதே எனது நோக்கம் சரியானது என்பதை எனக்கு உணர்த்தியது.
ஆனாலும் பெருமெடுப்பிலான இந்த நிகழ்விற்கான அனுசரணையாளர்கள் அஜித் சபாரட்ணம் என்ற ஒரு தனிநபரின் முகத்திற்காகத் தான் அனுசரணை வழங்குகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன என்றோம்?
ஆம் அது உண்மை தான் ஆனால் அஜித் சபாரட்ணம் என்ற தனி நபருக்காக அல்ல கனேடிய வர்த்தக சம்மேளத்தின் தலைவர் அஜித் சபாரட்டணத்திற்காகத் தான் அவர்கள் வழங்குகின்றார்கள்.
நான் கனேடியவர்த்தக சம்மேளனத்தினை பொறுப் பேற்ற போது பணிப்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வினை நடத்தினேன். அதில் மிக முக்கியமான கேள்வியாக கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளத்திற்கு உங்களின் பங்களிப்பு என்ன என்பதே அமைந்திருந்தது.
அதற்கு நியாயமான பதில் அளித்தவர்களும் முழுமையான அர்பணிப்போடு இயங்கத் தயாராக இருப்பவர்களும் தான் இந்தப் பயணத்தில் என்னோடு இணைந்திருக்கின்றார்கள். கனேடிய வர்த்தக சம்மேளனம் எனக்கு என்ன செய்யும் என்று கேட்பவர்களுக்கான இடம் இங்கு இல்லாமல் போயுள்ளது. அவர்கள்தான் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றவர்களில் முக்கியமானவர்கள் என்று எனக்கு தெரியும்.
என்னைப் பொறுத்தவரையில் எனக்கு முன்னால் இருந்த மிகப் பெரிய சவால் வர்த்தக சம்மேளனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்காக தன்னலமற்று அர்ப்பணிப்புடன் செயல்படக் கூடிய அணி ஒன்றை உருவாக்குவதாகவே இருந்தது. ஆனால் நான் எதிர்பார்த்ததை விட சிறப்பான ஆளுமை மிக்கவர்கள் கொண்ட ஒரு அணி என்னோடு இணைந்திருக்கின்றது. இதுவே பாதி வெற்றி என்று நான் எண்ணுகின்றேன்.
அதேசமயம் பணத்தால் மட்டுமே எதனையும் சாதித்துவிடலாம் என்று எண்ணுகின்றவர்களையும் கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் தள்ளியே வைத்திருக்கின்றது. இதற்கு ஒரு உதாரணத்தை சொல்லலாம் நாங்கள் இந்த நிகழ்வு குறித்த அறிவித்தலை வெளியிட்ட உடனே ஒரு நிறுவனம் ஒரு இலட்சம் டொலர்களுக்கு பிரதான அனுசரணை வழங்கப் போவதாக எங்களை அணுகினார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கை இதுவரை வர்த்தக சம்மேளத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இது தான் வர்த்தக சம்மேளளம் 25 ஆண்டுகளாக தமிழர்களின் தனித்துவம் மிக்க ஒரு அமைப்பாக விளங்குவதற்கு பிரதான காரணம் என்று நான் நினைக்கின்றேன்
பெரும் நிதிப் பங்களிப்பை வழங்கும் தனிநபர்களோ நிறுவனங்களோ அந்த அமைப்பை மொத்தமாக வளைத்துப் போட்டு தமது இலக்குகளை அடைவதற்கும் இலாபங்களை ஈட்டுவதற்கும் அதனை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கும் வர்த்தக சம்மேளனத்தில் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதை தான், இது எடுத்துக் காட்டுகின்றது.
கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் வெள்ளி விழா தொடர்பிலான எமது பதிவுகளில் இது தான் முதல் சந்திப்பு இன்னும் பல விடயங்களை இனி வரும் இதழ்களில் விரிவாக eகுருவி பேசும் !


Related News

 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *