அ.தி.மு.க. அரசு மிகப்பெரிய மர்மமான நிலையில் தான் இருக்கிறது – மு.க.ஸ்டாலின்

Facebook Cover V02

Stalin_05சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இரு கப்பல்கள் மோதிய விபத்தில் டீசல் கடலில் கொட்டியது. எண்ணூர் பாரதியார் நகர் அருகே கடல் பகுதியில் அதிகளவு டீசல் படிந்து காணப்படுகிறது. அவற்றை தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது மு.க.ஸ்டாலினிடம் அப்பகுதி மீனவ பெண்கள் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறி கண்ணீர் விட்டு அழுதனர். அதன் பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: சனிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் கடல் நீரில் ஏராளமான எண்ணெய் கலந்தது குறித்து பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் என்ன சொல்கிறார்கள்?

மு.க.ஸ்டாலின்: கச்சா எண்ணெய் கடல் நீரில் கலந்து இருப்பதால், கடந்த ஒரு வாரகாலமாக நீர் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்ல, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு இருக்கக்கூடிய மீனவ மக்களுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மீன்பிடி தொழில் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, கடல் நீரில் கலந்துள்ள எண்ணெயை பிரித்தெடுக்க செய்யப்பட்டு கொண்டு இருக்கக்கூடிய பணிகளுக்கு ஆகக்கூடிய செலவு உள்ளிட்ட அனைத்தையும் கப்பல் நிறுவனங்களிடம் இருந்து வசூல் செய்யக்கூடிய விதத்தில் இதற்குரிய வழக்கை நடத்திட வேண்டும்.

அவர்களிடம் இருந்து இழப்பீட்டுத்தொகையை பெறும் வரை மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்டு இருக்கக் கூடிய மக்களுக்கு முதலில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். மீனவர்களுக்கான பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கக்கூடிய நிலையில், ஒரு மோசமான சூழ்நிலை உருவாகும் என்ற அச்சம் இதனால் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், தமிழகத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் நேற்று தான் வந்திருக்கிறார் என்பது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது.

ஆகவே, தமிழக அரசினைப் பொறுத்தவரையில், இது மத்திய அரசின் பொறுப்பு என்று தட்டிக்கழித்து விடாமல், மத்திய அரசை வலியுறுத்தி, வற்புறுத்தி, அவர்களோடு இணைந்து, இந்த நிவாரணப் பணிகளில் மாநில அரசு ஈடுபட வேண்டும். மீனவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை உடனடியாக களைய தீவிரமான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

இதனால் பாதிக்கப்பட்டு உள்ள, மீன்பிடி தொழிலை நம்பியுள்ள மீனவர்களையும், தாய்மார்களையும், சகோதரர்களையும் நான் இப்போது சந்தித்தேன். அவர்கள், “வர்தா புயல் தொடங்கி தொடர்ந்து நாங்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டு வருகிறோம், எனவே, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இந்த அரசிடம் வலியுறுத்தி, வற்புறுத்தி ஒரு நல்ல வாழ்வை எங்களுக்கு அமைத்துத் தரவேண்டும், உடனடியாக நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி, எங்களுக்கு வழங்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்”, என்று வருத்தப்பட்டு, கண்கலங்கி, அழுத நிலையில் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்.

சட்டமன்றத்தில் மட்டுமல்ல, பாராளுமன்றத்திலும் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் இந்தப் பிரச்சினையை சுட்டிக்காட்டி இருக்கிறார். எனவே, மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்று நான் வலி யுறுத்தி, கேட்டுக் கொள்கிறேன்.

போராட்டம்

கேள்வி: இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தி.மு.க.வை சேர்ந்தவர் இருக்கிறார். எனவே நிவாரணத்தொகை முறையாக வழங்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கையாக முதல்வரை சந்திப்பது, போராட்டம் நடத்துவது போன்ற வேறு ஏதாவது நடவடிக்கையில் ஈடுபடுவீர்களா?

மு.க.ஸ்டாலின்: நிச்சயமாக. இப்போது நாங்கள் இங்கு வந்து நேரில் பார்த்து இருக்கிறோம். எங்களுடைய எம்.எல்.ஏ. இங்கேயே தங்கி இருந்து எல்லா பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தேவைப்பட்டால் நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பணிகளிலும் ஈடுபடுவோம்.

மர்மமான நிலை

கேள்வி: ஷீலா பாலகிருஷ்ணன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறதே?

மு.க.ஸ்டாலின்: அரசு தரப்பில் இருந்து எதுவும் சொல்லப்படவில்லை. ராஜினாமா செய்ததாக சொல்லப்படும் அந்த செய்தியும் வரவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்ல விரும்புவது, ஓய்வுபெற்று இருக்கக் கூடியவர்களுக்கு தான் அரசு பணியில் இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே பணி மூப்பு அடிப்படையில் சில பதவிகளை உருவாக்கித் தர வேண்டிய இந்த அரசு, இதுவரை அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை. இதனால் பணியில் இருக்கக்கூடிய அதிகாரிகள் உரிய பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர். இந்த அரசைப் பொறுத்தவரையில் ஒரு மிகப்பெரிய மர்மமான நிலையில் தான் இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் என்ன என்பதும் மர்மமாக இருக்கிறது. அவரது மரணம் எப்படி நடந்தது என்பதும் மர்மமாக இருக்கிறது. அதுபோலவே, இப்போது அதிகாரிகள் ராஜினாமாவா?, இல்லையா? என்பதும் மர்மமாக இருக்கிறது.  இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Share This Post

Post Comment