5 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் அக்னி–5 ஏவுகணை சோதனை வெற்றி

Agni5ராணுவத்தின் பயன்பாட்டுக்காக ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து அவற்றை பரிசோதித்து வருகிறது. குறிப்பாக நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி ரக ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதித்து ராணுவத்தில் இணைத்தும் இருக்கிறது.

தற்போது அக்னி–1 (700 கி.மீ. இலக்கு), அக்னி–2 (2 ஆயிரம் கி.மீ. இலக்கு) அக்னி–3 மற்றும் அக்னி–4 (2,500 கி.மீ. முதல் 3,500 கி.மீ. வரையிலான இலக்கு) ஆகிய ஏவுகணைகள் இந்திய ராணுவத்திடம் உள்ளன.

இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி–5 ரக ஏவுகணையை தயாரித்து சோதனையில் ஈடுபடுத்தும் பணி கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது. நேற்று 4–வது மற்றும் நிறைவு கட்ட சோதனை ஒடிசா மாநிலம் பலாசோர் கடற்கரை அருகே உள்ள அப்துல்கலாம் தீவில் நடத்தப்பட்டது.

இந்த ஏவுகணை முழுவதும் உள்நாட்டு தொழில் நுட்பத்திலேயே தயாரானது ஆகும். இதனால் இந்த ஏவுகணை செலுத்துவதை காண்பதற்காக அப்துல்கலாம் தீவுக்கு ஐதராபாத்தில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு ராணுவ ஆய்வகங்களின் 100–க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் வந்திருந்தனர்.

அவர்களின் முன்னிலையில் நேற்று காலை 11.05 மணி அளவில் அங்குள்ள ஒருங்கிணைந்த ஏவுதள மையத்தில் இருந்து நடமாடும் லாஞ்சர் மூலம் அக்னி–5 ஏவுகணை சோதனை செலுத்தப்பட்டது.

இந்த ஏவுகணை செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடல் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. அப்போது ராணுவ விஞ்ஞானிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர்.

முன்னதாக சோதனைக்காக ஏவுகணை செல்லும் பாதையில் உள்ள பல நாடுகள் உஷார்படுத்தப்பட்டன.

அக்னி–5 ஏவுகணை 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலம், 50 டன் எடையும் கொண்டது. இதில் சுமார் ஒரு டன் அளவிற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இது தரையில் இருந்து கிளம்பிச் சென்று தரைவழி இலக்கைத் தாக்கும் ஏவுகணை ஆகும்.

இந்த ஏவுகணையில் தேவைக்கு அதிகமான வழிகாட்டுதல் அமைப்பு, சக்திவாய்ந்த என்ஜின்கள், மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கி அழிக்கும் முறை, விரைந்து செல்லும்போது கோளாறு ஏற்பட்டால் அதை கம்ப்யூட்டர் உதவியுடன் கண்டுபிடித்து தானாகவே சரி செய்து கொள்ளுதல் ஆகிய அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளன.

இத்தகைய நவீன தொழில் நுட்பமும் மற்றும் 5 ஆயிரம் கி.மீ. தூர இலக்கை தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளிடம் தான் உள்ளன.

3–வது கட்ட பரிசோதனையின் போதே இந்த நாடுகளின் வரிசையில் இந்தியா 4–வது நாடாக இணைந்து விட்டாலும் தற்போது இன்னும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை அக்னி–5 ஏவுகணை கூடுதலாக பெற்றிருப்பது சிறப்பம்சம் ஆகும்.

அக்னி–5 ஏவுகணையின் மூலம் சீனாவின் வடமேற்கு எல்லைப் பகுதியையும், ஐரோப்பா கண்டத்தின் பெரும்பகுதியையும் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி–5 ஏவுகணையின் நிறைவுகட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டி உள்ளனர்.

ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில், ‘‘அக்னி–5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். இது நமது ராணுவ வலிமைக்கும், ஒடுக்கும் திறனுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது’’ என்றார்.

பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில், ‘‘நமது விஞ்ஞானிகள் இதற்காக கடும்பணி ஆற்றி இருக்கின்றனர். இதற்காக ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்யும் சாதனை. இதனால் நமது ராணுவத்தின் திறன் இன்னும் வலுப்பட்டு இருக்கிறது’’ என்று கூறி இருக்கிறார்.


Related News

 • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
 • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
 • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
 • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
 • சபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு
 • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
 • கஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
 • கஜா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நாளை ஆலோசனை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *