ஆடலுடன் பாடலைக் கேட்டு……(7)

Bon jour.

”சங்கீதமானது நிருத்த, கீத, வாத்யம் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மூன்றின் சேர்க்கையே சங்கீதம் என்று ‘இரத்தினாகரம்’ முதலிய நூல்கள் கூறுகின்றன.”
”காற்று, அக்னி இவையிரண்டின் சேர்க்கையே நாதம் எனப்படும். இந்த நாதம் ப்ரணவ ஸ்வரூபமானது. ப்ரணவம் ஓங்கார வடிவமானது. அகர, உகர,மகரம் சேர்ந்தது. இதுவே திரிமூர்த்தி ஸ்வரூபம். அதாவது அகரம் விஷ்னு, உகரம் ப்ரம்மா, மகரம் சிவன்.”

இப்படியெல்லாம் என்னுடைய பத்தாவது வயதிலேயே மூளைக்குள் திணிக்கப்பட்டது. பரீட்சைகளின் போது சப்பித் துப்பினேன். சத்தியமாக எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை. ப்ரணவப் பொருளை முருகப் பெருமானே நேரில் வந்து விளக்க நான் என்ன தந்தை சிவனா? பத்து வயதில் சுத்தமாய்ப் புரியவில்லை. இருபத்தைந்து வயதில் காற்றும், அக்னியும் சேர்ந்தால் இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை….ennio-morricone. என்கிற ‘ப்ரிஸ்டல் சிகரெட்’ டின் விளம்பர வாசகங்களை அனுபவித்த போது ஏற்பட்ட ‘கிக்’ மட்டுமே புலனாகியது. இப்போது ஏதோ கொஞ்சம் தெரிவதுபோல் தோன்றுகிறது.

இதையே இப்போது கொஞ்சம் biological ஆகப் போட்டுப் பார்ப்போம். உடல் இயங்க வேண்டுமாயின் தசைகளுக்குள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அடினோசீன் மூபொஸ்பேற் (ATP) இந்தப் பிராணனை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆக்ஸிஜன் மூலம் எரிக்கப்பட்டு அடினோசீன் இருபொஸ்பேற் (ADP) ஆக்கப்படல் வேண்டும்.இந்த இரசாயன மாற்றத்தின் பின்னரே சக்தி உண்டாகிறது. எனவே சக்தி என்பது காற்று, அக்னி காம்பினேஷன். ஆகவே நாதம் ஒரு output. ந்ருத்தம், கீதம், வாத்யம் என்கிறதான கலைவடிவங்கள்பரிபூரணமான சக்தியின் வெளிப்பாட்டு ஊடகங்கள் output devices.

இணைந்து இல் வாழ்க்கை நடத்தும் இருவருக்கிடையே பரஸ்பரம் புரிந்துணர்வோடு ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தாம்பத்திய வாழ்க்கையை rythmic life என்போம் இல்லையா? ”இசைபட வாழ்தல்” என்கிறார் வள்ளுவர். மனமொருமித்த தாம்பத்ய வாழ்க்கையை harmony in life என்கிறார்கள். Pleasing agreement of sounds in music. ஒப்பந்தம் செய்துகொண்ட ஒலிகளின் இசைவு. ‘பணப் பந்தல்களின்’ கீழே மணமுடித்துக் கொள்வோர்கள் எவரும் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று இந்த harmony, இசைவு. லயத்துடன் பொருந்திய இல்லறம்.

இப்போது நாம் ஒரு முடிவுக்கு வரலாம். ஐந்து புலன்களின் தனித்தனியான சக்திகளை ஒருமுகப்படுத்தி நெஞ்சு நிறைய மூச்சை நிறைத்து ப்ராணனிலிருந்து சங்கீதம் வெளிப்படும் போது கலை நமக்குள் அனுபவமாகிறது. அரங்கு நிறைந்துவிடுகிறது.
நாத வெள்ளத்தால் பார்ப்போரும், கேட்போரும் வசியமாகி விடுகிறார்கள். இத்தகைய ஆழுமையுள்ள கலைஞர்கள் தான் பிரகாசிக்கிறார்கள்.உன்னதமான கலைஞர்கள். மற்றவர்கள் எல்லாம்……
”நெஞ்சில் முட்செடிகளை வைத்துக் கொண்டு நாக்கில் மட்டும் எப்படி
நந்தவனம் வளர்க்கிறீர்கள்…..?”
(உபயம்>வைரமுத்து)
நாட்டிய சாஸ்திரத்தில் பரத முனிவர் பின்வருமாறு கூறுகிறார்.
”யதோ ஹஸ்தஸ் ததோ த்ருஷ்டி
யதோ த்ருஷ்டித் ததோ மனஹ
யதோ மனஹஸ் ததோ பாவ
யதோ பாவஸ் ததோ ரசக”
கைகள் எங்கெங்கெல்லாம் அசைகிறதோ கண்ணும் அதையே தொடர வேண்டும்.
கண் எங்கே பார்க்கிறதோ மனதும் அதன் வழியே செல்லவேண்டும். மனது எவ்வழி செல்கிறதோ பாவமும் அதனோடு ஒருமித்துப் போகும்போது தான் பண்ணுகிற
கலையில் அழகியல் வெளிப்பாடு உண்டாகும். Aesthetic pleasure.

இன்று பெரும்பாலும் அப்படி இல்லை. ஏதோ ஹஸ்தம்…..ஏதோ த்ருஷ்டி…..எங்கேயோ மனது…… எங்கேயோ பாவம்……ஐயோ பாவம்!!! அதனால் தான் ஆலைகள் நிறைந்து கிடந்த ஊருக்குளே இலுப்பம் பூக்களெல்லாம் சர்க்கரைகளாகிக் கொண்டிருக்கிறது. அதுதான் கமலஹாஸன் சொன்னாரே…….
”உன் கண்ணு பார்வையாளர்கள் மேல…..காது
அவங்க அடிக்கப்போற அப்ளாஸ் மேல…. ” என்று.

நல்ல அப்பியாசமும், மனப்பூர்வமான ஈடுபாடும், அர்ப்பணிப்பும் இன்றி எந்த ஒரு
கலைப்படைப்பையும் வெற்றிகரமாக மேடை ஏற்றிவிட முடியாது.

இந்த வருடத்து ஆஸ்கார் விருது வழங்கும் வைபவத்தைப் பகிஷ்கரிப்பதெனக் கறுபிப்பினக் கலைஞர்கள் முடிவெடுத்துள்ளனர். காரணம் என்னவெனில் வெளுப்பினக்

கலைஞர்களே பெரும்பான்மையான விருதுகளுக்கு வேட்பாளர்களானதே. இத்தனைக்கும் ஒரு கறுப்பினப் பெண்மணி தேர்வுக்குழுவின் தலைவியாக இருந்தும் கூட!!! எது எப்படியெனினு8ம் ”ஆஸ்கார் விருது” என்பது ஒரு வெகுஜன மாயையே. சினிமாவே ஒரு ”ஸெல்லுலொய்ட்” மாயை. இன்று ”டிஜிட்டல் + க்ராஃவிக்ஸ்” மாயமான் வேட்டை. பண வசூலில் வெற்றி பெறாத திரைப்படங்களை அதிகம் கண்டு கொள்வதில்லை……. ஒரு சில விதிவிலக்குகள் இருந்தும் கூட. வங்கிக் கணக்கினுள் அகப்படாது…… சந்திக்கு வராத திரைக் கலைஞர்களுக்கு அவர்கள் தளர்ந்து மூப்படைந்த பின் வாழ் நாள் சாதனை விருதை வழங்குவார்கள். சத்யஜித் ராய்க்கு கூட மரணப்படுக்கையில் விருது வழங்கி தன்னை கெளரவப்படுத்திக் கொண்டது ”அக்காடமி”.

நான் பழங்கதை பேசவில்லை. ம்ருணாள் சென், க்ரீஷ் கர்னாட், ராமு காரியத், லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ், சுகதபால சேனரத் யாப்பா, மஜீத் மஜீதிஸ், அடூர் கோபாலக்ருஷ்ணன், ருத்ரைய்யா, ஸ்பைக் லீ, ஸாங்க் யிமோ, அகிரோ குரசோவா போன்ற எத்தனையோ கலைஞர்கள் பொருளாதர வலிவின்றி அவர்கள் வாழ்ந்த காலங்களின் அவலங்களை

திரைக்கதைகளாய்ப் பதிந்தனர். இவர்களைப் போல எத்தனையோ ஆயிரக்கணக்கானவர்களின் உழைப்பும், பங்களிப்பும் உதாசீனப்படுத்தப்பட்டு…..

கலைப் படங்கள் அல்லது Art film என்கிற வரையறைக்குள் ”ஆர்ட்” படுத்தப் பட்டுவிட்டன. இவ்வாறான கலைப் படங்களை ஒரு காலத்தில் ”கான்ஸ்” திரைப்பட விழாக்களில் காண முடிந்தது. இன்றோ காணாமலேயே போய்விட்டது. ”கான்ஸ்” திரைப்பட விழா இன்று கறுப்புப் பணத்தை வெள்ளைப்பணமாக்கும் கள்ள மார்க்கெட்டில் சங்கமித்துவிட்டது.

”பாம் தி யோர்” விருதின் அந்தஸ்து அஸ்தமித்து விட்டது.

எனக்குத் தெரிந்து திரையிலும், தரையிலும் கதாநாயகனாகத் திகழ்ந்த ஒரேயொரு கலைஞர் மார்லன் ப்ராண்டோ அவர்களே. மூன்றாவது தடவையாகத் தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நடிப்பிற்கான ஆஸ்கார் விருதை அமெரிக்க ஆதிகுடியினரான செவ்விந்தியர் மீது இழைக்கப்படும் அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று நிராகரித்த ஆத்மார்த்தமான கலைஞன்.

hateful-eight-posterஅமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தும் கூட இன்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான காவல்துறையின் எதேச்சாதிகாரம் எத்தனை இளசுகளைப் பலி வாங்கியிருக்கிறது? நிறவெறியின் நிறம் என்ன வெளுத்துவிட்டதா? நிறம், மதம், இனம், மொழி, ஜாதி இத்யாதி வெறிகள் 100% Alcahole. ஒரு மிடறு பருகினாலே சும்மா ‘ஜிவ்’ வென்று ஏறிவிடும். அதன் பிறகு முறியவே முறியாது. கறுப்பினக் கலைஞர்கள் ஆஸ்காரைப் பகிஷ்கரிக்கும் இவ் வேளையில் அமெரிக்க நிற நிலைப்பாடுகளின் முகத்தில் காறியுமிழும் வகையில் கேலியும், கிண்டலுமாக The Hateful Eight என்றொரு திரைப்படம் வெளி வந்திருக்கிறது. இதனை எழுதி இயக்கியவர் Quentin Jerome Tarantino. ஹாலிவூட் படங்களின் திரைக்கதை அமைப்பில் ஒரு கனதியான பாதிப்பை ஏற்படுத்தி அதன் போக்கையே மாற்றிவிட்ட Pulp Fiction என்ற திரைப்படத்தின் படைப்பாளி.

இந்தத் திரைப்படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கோர்ப்பிற்கான ‘கோல்டன் க்ளோப்’ விருது அண்மையில் கிடைத்திருக்கிறது. இசை அமைத்தவர் யார் தெரியுமா? கடந்த மாதம் இத் தொடரில் 88 வயதிலும் பாடிக்கொண்டே எம்மை விட்டு மறைந்த எம்.எஸ். வி. ஐயாவைப் பற்றி எழுதினேனல்லவா? இவரைப் போலவே 87 வயதில் இன்னமும் விருது வாங்கிக்கொண்டிருக்கும் இத்தாலியின் ரோம் நகரைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற இசை மேதை Ennio Morricone. அறுபதுகளில் எனது சின்னஞ்சிறிய வயதில்…..

அதுவரையில் சினிமாவின் பாடல்களை மட்டுமே பாடிக்கொண்டிருந்த என் வயதொத்த

மிகப் பலரை……. ஒரு திரைப்படத்தின் ‘தீம் ம்யூஸிக்’ கை அதன் வாத்தியங்களின் இசையை வாயாலேயே இசைத்து ஊளையிட்ட வண்ணம் ஈருருளிப் புரவிகளில் தாவிப் பாய்ந்து ஏறி மிதித்து……. யாழ்ப்பாணத்துத் தெருக்களில் அலையவிட்ட அநியாயமான கலைஞன். அந்தத் திரைப்படம் “The Good, the Bad and the Ugly” . இவரைப்பற்றி அடுத்த மாதம் எழுதுகிறேன்


Related News

 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *