எலப்புள்ளி தந்த இசைப்புள்ளி – ஆடலுடன் பாடலைக் கேட்டு……..(6)

Bon jour!

இந்தத் தொடரை வாசிக்க நேர்ந்த அன்பர்களே…..
கடந்த வருடம் அக்டோபர் மாதம் எனது மதிப்பிற்குரிய மெல்லிசை மன்னர்
எம். எஸ். வி. ஐயா அவர்களின் மறைவைப்பற்றி என்றுமே மறைந்து போகாத,
போகக்கூடாத நினைவுகளை பதிவிட்டிருந்தேன். பிரசுர அவசரங்களில் அதில் பாதி
பிரசவமாகாமல் போனது. ”ஈ குருவி” ஆசிரியரின் பெருமனதால் மீண்டும் ஒரு முறை
முழுக் கட்டுரையும் வெளிவருகிறது.  நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்…… இந்த
இசைஞானி இசையமைத்த பாடல்களில்  ஒரு வரியாவது அதி காலைகளில் உங்கள்
அந்தரங்க அன்றாடங்களில்….. பின்னணியில்…… தலையணைக்குள் இருந்து ஒலிக்கவில்லையா?
அந்த மாபெரும் கலைஞருக்கு எமது அஞ்சலிகள்.

மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் மறைந்துபோய் மூன்று மாதங்கள் ஆகிக்கொண்டிருக்கிறது.

maxresdefault‘அ’…வில் ஆரம்பித்து ‘ஃ’…..இல் உயிர்கள் முடிந்தவுடன் மெய்கள் சடலமாகிவிடுகிறது.

வாழ்க்கை வட்டம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இந்த

வட்டத்திற்குள் மெய் பயணிக்கும் போதில் என்ன செய்கிறார்கள் என்பதைப்பொறுத்தே

வட்டம் முழுமை பெற்ற பின்னர் உயிர் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளுதல் சாத்தியப்

படுகிறது. மெய் உலகிற்கு விட்டுச் செல்பவைகளிலிருந்து உயிர் மீளவும் தன்னை

உயிர்ப்பித்துக் கொள்கிறது. இந்த நாட்களில் ஒருநாள் பழைய தமிழ்த் திரைப்படம் ஒன்று

பார்க்க விரும்பிய நான் கைபோன போக்கில் ஷெல்ஃவ் இலிருந்து ஒரு டி.வி.டி. யை உருவினால்

”நெஞ்சில் ஓர் ஆலயம்”. பாதிப் படத்திற்கு மேல் கண்களின் நீர்த்திரைகளால் விம்பங்களில் தெளிவில்லை.

இசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

நாலரை வயதிலேயே தாயாருடன் தற்கொலை முயற்சியில் குளத்தில் மூழ்கிச் செத்துப்போய்

விட்டிருக்கவேண்டிய சிறுவன்…….எண்பத்தி எட்டு வருடங்கள் சங்கீதத்தைத் தவிரவும் வேறொன்றையுமே

அறியாது எளிமை வாழ்வு வாழ்ந்து வட்டத்தை முடித்து இசை உலகிற்கு விட்டுச் சென்றவைகள்தான் எத்தனை…… எத்தனை?

”எங்கிருந்தாலும் வாழ்க……” எம்.எஸ்.வி. ஐயாவின் கண்டுபிடிப்பான ஏ.எல். ராகவனுடன் புதிய வரவாகக்

குளத்துத் தவளையாரும் தமிழ்த் திரையிசையுலகுக்கு அறிமுகமாகிறார்!!! தொடர்ந்தும் ஐயாவோடு பணியாற்றி

”நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே…….” ”கடவுளமைத்துவைத்த மேடை இணைக்கும்

கல்யாண மாலை…..” போன்ற பல வெற்றிப் பாடல்களைத் தந்தவர் திரு. தவளையார்.

கிளி, குயில், நாய், யானை இவர்களோடு எஸ்.ஜானகி, கே.ஜே. யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்ரமண்யம், வாணி ஜெயராம்,

ஜெயச்சந்திரன், ராஜ்குமார் பாரதி…….ஏன்…..? காலம்சென்ற பிரபல பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதாவை பதின்நான்கு வயதில்

முதன்முதலில் பாடவைத்தவர் எம்.எஸ்.வி. ஐயா. ”எங்கிருந்தாலும் வாழ்க……” பாடலின் மெட்டும் பின்னணியிசையும்

இரவுநேரத்தின் அழகையும் அமைதியையும் பிடித்துக் கொண்டு வந்து மனக்கண்ணின் முன்னே திரையிடும்!

படம் பார்க்கவே தேவையில்லை.

 

ஓசைகளால் திரைக்கதை எழுதியவர் விஸ்வநாதன் ஐயாவும் ராமமூர்த்தி ஐயாவும்.

இருவருமே இன்றில்லை. ஆனால் விட்டுச் சென்றவைகள்…….? இருக்கவே இருக்கிறார்கள்

என்பதாகக் கட்டியம் கூறிக்கொண்டிருக்கிறதே!!! வறுமைக்கோட்டிலிருந்து வெகுதூரம் கீழிறங்கி

இருந்த பாலபருவத்தில் இசைகேட்பதற்காகவே திரையரங்கொன்றில் இடைவேளைகளில்

சம்பளம் வாங்காமல் முறுக்கு விற்றுக் கொண்டிருந்தவர் எம்.எஸ்.வி. ஐயா என்றால் இன்றைய

தலைமுறை இதன் வலிகளைப் புரிந்து கொள்ளுமா?

 

சங்கீதம் கற்றுக்கொள்ள பாட்டுப்பாட மட்டுமே அளவுகடந்த ஆசை. பள்ளிப் படிப்பில் பிரியமில்லை.

பாடசாலைக்குத் தலையைக் காட்டிவிட்டு ”உள்ளேன் ஐயா…..” சொல்லிவிட்டு மாயமாகி நீலகண்ட பாகவதர் வீட்டு

மூலையில் அவரின் இசை வகுப்புகளை ஒட்டுக்கேட்டு வளர்த்துக் கொண்ட ஞானம் என்றால்…..வெறுமனே பம்மாத்துக்கு

”ம்யூஸிக் க்ளாஸ்” இல் ஜாயின்ட் செய்து பணத்தை இறைக்கும் இன்றைய தலைமுறை……

எண்பத்தெட்டு வயதுவரை இசையில் இமையத்தைத் தொட்ட இந்த மாகலைஞன் இன்றும் இளமைக்காலத்து

அவலங்களை பகிரங்கமாக வாய்விட்டு மீடியாக்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்த நேர்மையை, தன்னடக்கத்தை,

எளிமையை பழசை மறக்காத பாங்கை உணர்ந்து கொள்ளத்தான் இயலுமா?

 

ஏதோ ஒன்றிரண்டு படங்களுக்கு இணைய தளங்களிலிருந்து திருடிய இசைக் கோர்ப்புகளை ஒட்டி…..

வாயைத்திறந்தே பாட முடியாத ”ஜிஞ்ஜினுக்கா…..ஜிஞ்ஜினுக்கா….. ஜினுக்கு”களை…. ஸொய்….ஸொய்….. பபபம்…. களை

மெட்டுக்கள் என்றுசொல்லி விற்றுக்கொண்டிருக்கும் பேமானிகளே நிறைந்த இன்றைய திரையிசை

அவலங்களில் இன்றைய தலைமுறையும் வாய்விட்டு, மனம் விட்டுப் பாடிக்கொண்டிருக்கும்

காலங்கள் கடந்தும் வாழும்…..வாழ்ந்துகொண்டிருக்கப்போகும் இவனது ஜீவனுள்ள மெட்டுக்களின்

ஸ்திரத்தன்மையை மேற்படி பேமானிகளால் இந்த மனிதனின் மேதமையின் உச்சத்தை எட்டுவதை எண்ணத்தான் இயலுமா?

”இனியது இனியது உலகம்……” என்ற பாடலில் சிவாஜி கணேசன் காலால் உதைத்துத் தள்ளிய தகர டப்பா

உருண்டோடும் ஓசையைக்கூட இடிகரை முருகேசுவை வைத்து இசையாக்கியவர் எம். எஸ். வி. ஐயா.

கேரளக் கிராமத்திற்கு வந்த கழைக்கூத்தாட்ட குழுவில் மேளம் வாசிப்பவரது மேளத்தை வாங்கி வாசித்துப் பார்க்க

அவரும் ”நல்லா வாசிக்கிறியே தம்பி….” என்று புகழ்ந்துவிட உற்சாக மிகுதியால் அடித்த அடியில் மேளம்

கிழிந்துவிட கோபித்துக்கொண்ட தாயாரிடம் அடிவாங்கிய மனத்தாங்கலில் பஸ்ஸில் ஏறிச்சென்னை வந்துவிட்டார்.

உறவினர் ஒருவர் உதவியால் மாதம் மூன்று ரூபாய் சம்பளத்தில்

ஜுப்பிட்டர் பிலிம்ஸ் கம்பனியில் ஆபீஸ் பாயாக வேலைக்குச் சேர்ந்தார். நடிப்பதில்தான் பெரிதும் ஆர்வமிருந்தது.

சிறு சிறு வேடங்களில் பால கோவலனாக பால முருகனாக அவ்வப்போது திரையில் தலையைக் காட்டினாலும்

நடிகனாக அங்கீகரிக்கப்படவில்லை. பின்னர் அப்போது புகழ்பெற்றிருந்த இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு

(சிங்கார வேலனே தேவா….. வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்…… ”நீ எங்கே என் நினைவுகள் அங்கே…..”

போன்ற காலத்தால் அழியாத பாடல்களைத் தந்தவர்) அவர்களிடம் உதவியாளரானார். அவரிடம் நிறைய நுட்பங்களைக் கற்றறிந்தார்.

எஸ்.எம். சுப்பையா நாயுடு நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் அவர் இறக்கும் வரையிலும் அதன் பின்னர் அவரது துணைவியார்

இறக்கும் வரையிலும் எம். எஸ். வி. ஐயா அவர்கள் தனது குருவுக்கு பணம் கொடுத்து உதவிக்கொண்டே இருந்தார்.

அப்படியொரு நன்றி மறவாத மென்மனதுக்காரன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு அடிவாங்கி முன்னேறி வந்தவர்களிடம் மட்டும் தான்

இவ்வாறான நன்றி மறவாமையும் அடுத்தவன் கஷ்டப்படும் போது கைகொடுக்கும் மனப்பான்மையும் அமைந்திருக்கும்.

 

நடிகையர்களில் மிகச் சிறந்தவர்களெனக் குறிப்பிடக்கூடிய மிகச்சிலரில் ஒருவரான……

அவர்களுக்குள்ளேயும் இயல்பான நடிப்பால் முன்னணியில் இறந்த பின்னும் இன்றுவரை திகழும்

நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் சொந்த வாழ்க்கையில் நடிக்கத் தெரியாமல் தோற்றுப் போய்

கடைசியில் கையிலிருந்த மிச்சச் சில்லறைகளையும் திரட்டி ”ப்ராப்தம்” (பேரைப்பார்….!!!) என்றொரு படம் தயாரிக்க

பணமே வாங்காமல் எம். எஸ். வி. ஐயா அவர்கள் இசையமைத்துக் கொடுத்தார். அத்தனை பாடல்களும் முத்துக்கள்.

”சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்…..”

”தாலாட்டுப்பாடி தாயாகவேண்டும்………”

”நேற்றுப் பறிச்ச ரோஜா……”

லாபமில்லையே என்று ஏனோ தானோவென்று இசையமைக்கவில்லை. செய்யும் தொழிலில் நேர்மை இருந்தது.

பெரிய பட்ஜெட் படங்களுக்கு பெரிய இசை……. அல்ப பட்ஜெட் படங்களுக்கு அற்ப இசை……

என்பதான மலிவான வியாபாரம் செய்யவில்லை.

 

இதே உயர்ந்த குணம் இளையராஜாவுக்கும் இருந்தது. பாருங்களேன்……ரஜனிகாந்த்துக்கு

இவர் போட்ட பாட்டுகளும் இந்த ‘லிப்ஸ்டிக் வாயன்’ ராமராஜனுக்கு போட்ட பாட்டுகளும்

ஒன்றுக்கொன்று தரத்திலோ சுவையிலோ குறையாது. நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களுக்குச் செய்ததுபோல

”நுணலும் தன் வாயாற் கெடும்” என்ற முதுமொழிக்கிணங்க தனது வாயால் கெட்ட நடிகர் சந்திரபாபு தன்னிடம் எஞ்சிய

சில்லறைகளைப் பொறுக்கி ”தட்டுங்கள் திறக்கப்படும்” என்றொரு படம் தயாரிக்க அவருக்கும்…….எம். எஸ். வி. ஐயா அவர்களே

வளர்த்துவிட்டபின்னணிப் பாடகர் ஏ.எல். ராகவன் கஷ்டத்திலிருக்கும் போது டி.எம்.செளந்தரராஜன் அவர்களோடு

இணைந்து தயாரித்த ”கல்லும் கனியாகும்” திரைப்படத்திற்கும் அதே தாராள மனப்பான்மையோடு உதவியாய் இசைக்கரம்

கொடுத்தார் எம். எஸ். வி. ஐயா அவர்கள்.

நான் பிறக்கமுன்பு

M.K.T…   S.G.K…   P.U.C… C.R.S…   G.R.N…   G.N.B…  M.L.V…  M.S.S…

K.V.M…  T.R.R…   T.G.L…  M.S.V…  T.M.S…  P.B.S…  A.M.R…

இப்படியாக மூன்றெழுத்துகளின் ஞானத்தை கிரகித்து இன்றளவும்….. நானும்…..

ஒரு இசையாசிரியனென்று குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன்.

இந்தப்பட்டியலில் கடைசியாக விட்டு விடுதலையாகிப் போனவர்

M.S.V. ஐயா….

எத்தனையோ விதமாக என் மன உணர்வுகளை அலைக்கழித்தீர்கள்

தங்கள் இசையால்.      

அன்றாடம் என் வாழ்வில் நவரசங்களில்

ஏதொன்றும் இடறும்போது

இதம் தந்தது…. தருவது… தரப்போவதும்…நீங்களே.

 

நீங்கள் இருந்து ஆட்சி செலுத்திவிட்டுப்போன சிம்ஹாஸனத்திற்கு அருகில் அரியனையில் அமர்ந்து

ராக ராஜாங்கத்தைத் தொடர்ந்த இளையராஜா அவர்கள் பகிரங்கமாக ஆயிரக் கணக்கான பார்வையாளர்களின் முன்னே

நீங்களும், ராமமூர்த்தி ஐயாவும் துப்பிய எச்சிலை வைத்துக்கொண்டுதான் நாங்கள் பிழைத்துக்கொண்டிருக்கிறோம் என்று

வெளிப்படையாகவே சொன்னார். தானோ, கமலஹாஸனோ இன்று இந்த இடத்தில் இருப்பதற்கு நீங்களேதான் காரணம் என்று

உங்எள் இசையின் பெருமையை ஊரறியச் சொன்னார். கலைஞர்கள் போற்றும் கலைஞர் நீங்கள்.

ஐயா……நீங்கள் மருத்துவ மனையில் அநுமதிக்கப் பட்டிருந்த வேளையிலும் தங்கள்

இறுதி மூச்சும் இசையோடுதானே வெளியேறியது…..இறுதிவரைக்கும் பாடிக்கொண்டுதானே இருந்தீர்கள்?

சொர்க்கத்திலும் நீங்கள் பாடிக்கொண்டும்….. பாட்டுக்கட்டிக்கொண்டும் தான் இருப்பீர்கள் என்பதில் எந்தவொரு

அபிப்பிராய பேதங்களும் கிடையாது. ஆயினும் இன்றைய தலைமுறையின் சார்பாக ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

தயவுசெய்து திரும்பி வாருங்களேன்…….இத்தத் தலைமுறைக்கு இசையென்ற பேரில் என்னெல்லாமோ சகிக்க முடியாத

கூச்சல்களும், ஆர்ப்பாட்டங்களும், சந்தடிகளும் அறிமுகப்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது. இவர்களுடைய பிஞ்சுக் காதுகளால்

இரத்தமும், சீளும் வழிந்து கொண்டிருக்கிறது.

இப்படியே போனால் இந்தக் குழந்தைகள் இரைச்சலையே ஓசைகள்

என்று பொருள் கொண்டுவிடுவார்கள். இறுதியில் ஓசைகள் எதுவுமே கேட்காத அளவுக்கு அன்னியப்பட்டு விடுவார்கள்.

இன்றும் இந்தக் குழந்தைகள் நீங்கள் விட்டுச் சென்ற பாடல்களையே உருகி உருகி…..ரசித்து ரசித்துப் பாடிக்கொண்டிருக்கின்றன.

ஆயினும் இரைச்சல்களின் மேலாதிக்கம் இவர்களை செவிடுகளாக்கிக் கொண்டிருக்கின்றன.

”முத்தான முத்தல்லவோ…….”

”செல்லக்கிளிகளாம் பள்ளியிலே…….”

”அத்தை மடி மெத்தையடி………”

”நீரோடும் வைகையிலே……..”

இவைகளெல்லாம் இவர்களுக்காகத்தானே விட்டுச் சென்றீர்கள்?

”இந்தப் பச்சைக்கிளிகளுக்கு ஒரு செவ்வந்திப் பூவில்

தொட்டிலைக் கட்டிவிட்டுப்” போனீர்கள்?

சொர்க்கம் உங்களை விடாது…….ஆயினும்……..

மாறுவேடத்திலாவது வந்துவிட்டுப் போங்களேன்……ஐயா…….please!!! please!!! please!!!


Related News

 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *