வசந்தபாலன் காட்டும் வெளி : அரவான்
Apr 09 2012 23:21:10
‘அங்காடித்தெரு’வின் வெற்றியைத் தொடர்ந்து அரவான் படத்தை வசந்தபாலன் அறிவித்தபோதே ஒரு பெரும் எதிர்பார்ப்பு அவரைச் சூழ்ந்திருந்தது. ஒரு திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கையில் அதை நிறைவேற்றுவது மலையைத் தாண்டுவது போன்றது. தமிழில் தனக்காகவே பார்வையாளர்களை வரவைக்கும் இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் வசந்தபாலன். அரவான் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாதாரண மக்களின் கதை என்ற தகவல் வந்தபோது எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியது.
வரலாறு படமாக்கப்படுகிறபோது வருகிற இடர்கள் அதிகமானவை. அண்மையில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஒரு வரலாற்றுக்களத்தைக் கொண்டிருந்தாலும் பல படிகளில் இடறியிருந்தது. அந்தவகையில் யதார்த்த இயக்குனர் என அறியப்படுகிற வசந்தபாலனின் அரவான் அவருக்கு இன்னமும் பளுவை அதிகரித்திருக்கும்.
அரவான் திரைப்படத்தினுடைய கதை சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் நாவலின் ஒரு பகுதி. நாவல்கள் திரைப்படமாகும்போது பல சிக்கல்கள் வருகின்றன. ஒரு நாவல் வாசகனின் மனதில் சில காட்சிகளை வரைந்துவிடுகிறது. நாவல் மாந்தருக்கு உருவகங்களை உருவாக்கிவிடுகிறது. அந்த நாவலை மையப்படுத்தி வருகிற திரைப்படம் அந்தக்களத்தை மீளக் கொண்டுவரவேண்டும். வாசிக்கும்போது வாசகன் உருவகப்படுத்திய மாந்தர்கள், பின்னணி, ஆடைகள், வர்ணங்கள், காலநிலை, கட்டடங்கள், மொழி அனைத்துமே திரைப்படத்தில் வந்தாகவேண்டும். நாவல் தருகிற அனுபவத்தை திரைப்படம் தன்னுடைய மொழியில் தந்தாகவேண்டும்.
காவல்கோட்டம் ஆயிரம் பக்கங்களுக்கு மேலான ஒரு நாவல். தமிழின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது. சாகித்திய அகடமியின் விருதும் கனடா இயல் விருதும் இந்த நாவலுக்குக் கிடைத்திருக்கின்றன. நாவலில் வரும் திருட்டைத் தொழிலாகக்கொண்ட ஒரு சமூகத்தின் கதையை மையமாகக்கொண்டதே அரவானின் கதை. நாவலில் வரும் மாயாண்டி, சின்னான் கதையையே வசந்தபாலன் எடுத்தாண்டிருக்கிறார். மாயாண்டி, சின்னான் கதை பல நேர்த்தியான மாற்றங்களைக் கண்டிருக்கிறது. பாத்திரங்களின் தன்மைகள்கூட சிறிதளவு மாறிப்போகின்றன. சினிமாவுக்கான திரைக்கதையை உருவாக்குவதில் வசந்தபாலன் வெற்றிகண்டிருக்கிறார். நாவல் தருகிற அதே அனுபவத்தை சினிமா தருகிறது. ஆனால் அதே கதையினூடாக அல்ல.
வரிப்புலியாக மாறியிருக்கும் சின்னானின் பாத்திரத்தில் பல மாற்றங்கள். குமணாண்டியும், மாயாண்டியும் இங்கு கொம்பூதியாகிவிடுகின்றனர். செல்லாயி வனப்பேச்சியாகவும், சிமிட்டியாகவும் பிரிந்துவிடுகின்றாள். நாவலில் ஆங்காங்கே வரும் காக்குவீரன், சின்னராசு கதை, கனகலிங்கம் வீட்டில் திருடப்போன மொண்டி கதை போன்ற பலவும் சுவையாக இணைகின்றன. அரவானின் முழுமையை உணரவேண்டுமென்றால் நாவலைப்படிக்கவேண்டியிருக்கிறது. ‘ஆந்தை கத்தாம அருவா படாம’ என்ற பாடல் வரிகளாகட்டும், மொண்டி உத்தரவு தருவதாகட்டும், வரிப்புலி களவுக்குப்போன இடத்தில் பூனையை உசுப்பிவிடுவதாகட்டும், இவ்வாறு பல இடங்கள், நாவலை வாசிக்கும்போதுதான் திறந்துகொள்கின்றன. நாவல் திரைக்கதையின் அத்திவாரமாகவே பயணிக்கிறது.
திரைப்படத்தில் மலைக்கவைப்பது கலை இயக்கம். வரலாறுகளை அரச கதைகளினூடாகவும், அதே வகையான திரைப்படங்களினூடாகவும் பார்த்த ரசிகர்களுக்கு அரவான் காண்பிக்கும் அச்சு அசலான வரலாற்று மாந்தர்கள் அதிர்ச்சியைத்தான் தரமுடியும். வலைப்பூக்களில் உலாவிய ‘தமிழர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களா?’ ‘ஏன் எல்லோரும் கறுப்பாயிருக்கிறார்கள்’, ‘களவைத் தொழிலாகக்கொண்ட ஒரு சமூகம் இருந்திருக்குமா’, ‘அப்படி இருந்திருந்தாலும் நாம் அதைக் காட்டித்தான் ஆகவேண்டுமா’ போன்ற கருத்துக்கள் இந்த அதிர்ச்சியைத்தான் காண்பிக்கின்றன. ஆனால் வரலாற்றை உண்மையாகக் காண்பிக்கும்போது இப்படித்தான் நேரும். அது தமிழ்சினிமா உருவாக்கிவைத்திருக்கும் பொய்மைப் பிம்பங்களிலிருந்து வருகிறது.
கதை மாந்தர் அணிந்திருக்கிற ஆடைகளிலிருந்து, வீடுகள், வண்டில்கள் என ஒவ்வொன்றும் 18ம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்கின்றன. கொம்பூதியும், சிமிட்டியும் வெற்றிலை போடும் பழக்கமுடையவர்கள். அவர்கள் பற்களில் படிந்திருக்கும் காவியே இந்தக்கதையைச் சொல்லிவிடுகிறது. அவர்கள் கைகளிலும், கால்களிலும் படிந்திருக்கும் அழுக்கிலாகட்டும், கைகளிலிருக்கும் கம்புகளிலாகட்டும், பராமரிக்கப்படாத முடியிலாகட்டும் கலைஇயக்கத்தின் நேர்த்தி தெரிகிறது. ஆரம்பத்தில் கொம்பூதி கொத்து களவாடப்போகும்போது காண்பிக்கப்படும் நுணுக்கங்களிலிருந்து, ஒவ்வொரு காட்சியமைப்பும் செம்மையானது. நாவலின் அனுபவத்தைக் கொணர்வதில் பெரும்பங்காற்றியிருப்பது இந்தக் கலைஇயக்கம்தான். இருளுக்கு இத்தனை வர்ணங்களா என காவல்கோட்டம் வியக்க வைத்தது. அதைத் திரையில் கொணர்ந்த கலை இயக்குநர் விஜய்முருகன் பராட்டுக்குரியவர்.
பசுபதி, வசந்தபாலனின் வெயில் திரைப்படத்தில் நடித்தவர். தமிழின் வசூல்ராஜா எனப்படுகிற ரஜினியின் குசேலன் திரைப்படத்தில் கூட தன்னையே பார்த்து அதிசயிக்க வைத்தவர் பசுபதி. அவருடைய திறமைக்குத் தீனிபோடப் படங்கள் இதுவரை பெருமளவில் வந்ததில்லை. அரவான் அவருடைய திறமையைத் தன்னுடைய தலையில் சூடிக்கொண்டிருக்கிறது. 18ம் நூற்றாண்டில் களவுத்தொழிலைச் செய்த மனிதன், அடிப்படையில் நேர்மையான, பாசமான ஒரு ஊர்த்தலைவன் எப்படியிருந்திருப்பான் என்பதை பசுபதியின் நடிப்பிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
கதாநாயகன் ஆதிக்கு இது ஐந்தாவது படமாம். வசந்தபாலனின் படங்களில் சாதாரண நடிகர்கள்கூட திறமையானவர்கள் ஆகிவிடுகிறார்கள். அதற்கு ஆதி ஒரு உதாரணம். நடித்திருக்கிறார் என்பதைவிட படத்திற்காக அவர் பட்டிருக்கும் பாடுகள் அதிகம். புகைக்கூண்டு வழியே இறங்குவதிலிருந்து, பெருமரக்குற்றியைத் தூக்கிக்கொண்டு நடப்பது வரை அவரது அர்ப்பணிப்பு தெரிகிறது. நீண்டநாளைக்குப்பிறகு தெளிவாகத் தமிழ் பேசத்தெரிந்த ஒரு நாயகி. தன்ஷிகா ஆங்கிலம் கலக்காத 18ம் நூற்றாண்டுத்தமிழை தனது சொந்தக்குரலில் பேசியிருக்கிறார். பல இடங்களில் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். சிமிட்டியாக வரும் அர்ச்சனா ஜோஸ் கவி இன்னொரு ஆச்சரியம். தங்களை அழகாகக்(?) காண்பிக்க விரும்பும் சினிமாக் கதாநாயகிகள் மத்தியில் வாரப்படாத தலைமுடி, வெற்றிலை குதப்பிய உதடுகள், நைந்துபோன சேலை என உலாவரும் அர்ச்சனா கவருகிறார். ‘கட்டையில் போறவனே’ என ஆதியைத்திட்டும் இடத்தில் நடிப்பிலும் கூடத்தான்.
படத்தில் சாதாரணமாக வந்துபோகும் பலரும் திறமையாக நடித்திருக்கிறார்கள். வீரணனின் மனைவியாக வருபவர், வீரணனின் மரணத்திற்குப்பிறகு சின்னானை சந்திக்கும் காட்சியில் பார்வையிலேயே வியக்க வைக்கிறார். சிங்கம்புலி, மாத்தூர் வில்லன், கிராமத்துப் பெரியாம்பிளை, தாடிக்காரக்கிழவர், ராசா, சின்னராணி, பாலியல்தொழிலாளி என எல்லோருமே வசந்தபாலனின் நெறியாள்கையில் அந்தந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டிருக்கிறார்கள்.
பகலை அழகாகக்காண்பிக்க அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. இரவை செயற்கை வெளிச்சங்களோடு அழகாக்கிவிடலாம். ஆனால் இரவை அதன் இயற்கை வனப்போடு அழகாக்க அதீத திறமை தேவை. இருளின் வர்ணங்களை அதன் நேர்த்தியோடு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சித்தார்த். இது பாலை மக்களின் கதை என்பதை ஒளிப்பதிவே சொல்கிறது. பூனை போலப்போகும் களவாணியின் பார்வையில் அந்த வீட்டையாகட்டும், கோட்டையூரின் மதில்களில் ஏறிச்செல்லும் கள்வர்களையாகட்டும், நிலா நிலா பாடலிலாகட்டும் ஒளிப்பதிவு எங்களைக் களவு செய்கிறது. தமிழ்திரைப்படங்களில் Fisheye lens ஓர் அர்த்தத்தோடு பாவிக்கப்பட்டது இங்குதான் என நினைக்கிறேன். ‘காவல் கோட்டம்’ நாவல் வாசகனுக்கு மனதில் வரைந்ததை, திரையில் காட்டுவதில் ஒளிப்பதிவாளர் பெருவெற்றியடைந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
வரலாற்றுப் படமொன்றில் ஒரு நடனத்தை வடிவமைப்பது கடினமானது. பாரம்பரிய நடனங்களின் கூறுகள், அசைவுகள் வந்துவிடக்கூடாது. அதே நேரம் பார்வையாளர்களை ஈர்க்கவும் வேண்டும். ‘ஊரே ஊரே’ என்ற பாடலுக்கான நடன அமைப்பில் அந்த நேர்த்தி தெரிந்தது. அந்தப்பாடலுடன் கதையும் நகரும்விதம் சிறப்பு. ‘நிலா நிலா’ பாடல் பல சிற்பங்களையும், ஓவியங்களையும் கோர்த்தது போலிருந்தது.
பாடகர் கார்த்திக்கின் முதல் இசையமைப்பு முயற்சி. பாடல்கள் நன்றாகவேயிருக்கின்றன. மீண்டும் முணுமுணுக்க வைக்கின்றன. ஆனால் படத்தோடு ஒட்டி அந்தக்காலத்துக்கு எங்களை இழுத்துச்செல்வதில் பாடல்கள் எங்கோ இடறுகின்றன. பின்னணி இசையும் கூடத்தான்.
படத்தைப் பார்த்து முடிந்ததும் படம் என்னை வேறெங்கோ இழுத்துச்சென்றது. எமது தாயகக் கதையை இது மீளச்சொன்னது போல் உணர்ந்தேன். அதிகாரத்தில் இருப்பவர்களே தவறிழைக்கிறார்கள். அவர்களே தீர்ப்பிடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அப்பாவிகள் மீது தீர்ப்பிடுகிறார்கள். குற்றவாளி யாரெனத் தெரிந்தும் அப்பாவிகளே கொல்லப்படுகிறார்கள். உலகம் ஏதும் செய்யமுடியாது கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது. தங்கள் உயிரைத் தந்த தியாகிகள் நடுகற்களிலும், அந்த மக்களின் இதயங்களிலும் வாழ்கிறார்கள். வசந்தபாலனின் மரணதண்டனைக்கெதிரான திரைப்படம் இந்தவகையிலான படிமத்தையும் தன்னகத்தே புதைத்து வைத்திருக்கிறது.
படத்தின் சில இடங்கள் நெருடத்தான் செய்தன. நிலா நிலா பாடலில் வரும் வரைகலை(கிராபிக்ஸ்). நிலவைத் தள்ளிவிடுவதைப்போன்ற சிறுபிள்ளைத்தனமான காட்சிகளை இத்தனை யதார்த்தமான படத்தில் ஏன் சேர்த்தார்கள்? சின்னிவீரன்பட்டிக்கு தனது மகன் இறந்துபோனதைப் பார்க்கவரும் தாய், அங்கு முன்னிலையில் இருக்கும் சின்னானை மறந்துபோய் தனது வீடடிற்குள் அழைப்பது எப்படி? அத்தனை காவல்காரர்கள் இருந்தும் ஒரு பாளையத்து ராசாவை அத்தனை இலகுவாகவா கடத்திவரமுடிகிறது? இவையெல்லாம் வெறும் கேள்விகளே. வசந்தபாலனிடம் இவற்றுக்கெல்லாம் பதில் இருக்கக்கூடும். படத்தில் பிரமாண்டமாய் விரிந்திருக்கும் யதார்த்தத்துக்கு முன்னால் இவற்றையெல்லாம் விட்டுவிடலாம்.
ரொறன்ரோவில்(Toronto) திரைப்படம் பார்த்தபோது மிகக்குறைந்த பார்வையாளர்களே இருந்தார்கள். நல்ல திரைப்படங்களுக்கான ரசனை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குறைவுபோலும். படம் ரசிகர்களை ஈர்க்காததற்கு என்ன காரணம் என்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். சிறப்பான கதையுடன் கூடிய படம், விறுவிறுப்பாகப் போகிறது, சண்டைக்காட்சிகளெல்லாம் வந்து போகின்றன, சொன்னால் நம்பமாட்டீர்கள் ஏனைய திரைப்படங்களை விட ‘இறுக்கமான’ காதல் காட்சிகள் கூட படத்திலிருக்கின்றன. ஏன் பார்வையாளர்களை அதிகம் காணவில்லையென்றபோது நண்பர் கூறினார் ‘அதுதான் நல்ல படமென்று எல்லா இடத்திலேயும் எழுதிவிட்டார்களே’ என்று.
Apocalypto பார்த்தபோது தமிழில் இவ்வாறான திரைப்படங்கள் வராதா என்று தோன்றியது. வசந்தபாலன் தமிழரை அடையாளப்படுத்தும் சினிமாவை மீண்டுமொருமுறை தந்திருக்கிறார். அவர் காண்பிக்கும் வெளி அற்புதமானது. அது தமிழ்சினிமாவின் பார்வையாளனை உயரே அழைத்துச்செல்கிறது. தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் பயணிக்க இதுபோன்ற சினிமாக்கள் அவசியம்.
by Karuna Vincent