56 ஆண்டு கால ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது

Facebook Cover V02

myanmar_prமியான்மர் நாட்டில் 56 ஆண்டு காலமாக ராணுவ ஆட்சி நடந்து வந்தது. அங்கு மக்களாட்சி மலர்வதற்காக அரும்பாடு பட்டவர், சூ கி.

அங்கு கடந்த நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும் மியான்மரின் அரசியல் சட்டத்தின்படி, வெளிநாட்டு பிரஜைகளை குடும்ப உறுப்பினர்களாக கொண்டவர்கள், அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. சூ கியின் மறைந்த கணவரும், 2 மகன்களும் இங்கிலாந்து நாட்டு குடிமக்கள் என்பது, சூ கி அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.

இதனால் அவர், தனது முன்னாள் டிரைவரும், பள்ளிக்கூட தோழரும், நம்பிக்கைக்குரியவருமான யூ கதின் கியாவ் (வயது 69) என்பவரை அதிபர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தினார். சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் அபார வெற்றி பெற்றார். இதன்மூலம் கடந்த 56 ஆண்டு கால மியான்மர் வரலாற்றில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெயரை அவர் பெற்றார்.

நேற்று அவர் பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் மியான்மரின் புதிய அதிபராக முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சூ கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அங்கு 56 ஆண்டு காலமாக இருந்து வந்த ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது.

பதவி ஏற்ற பின்னர் யூ கதின் கியாவ் பேசும்போது, “மியான்மர் மக்களுக்கு நம்பிக்கைக்குரியவனாக இருப்பேன்” என உறுதி அளித்தார்.

துணை அதிபர்களாக ஹென்றி வான் தியோ, மியிண்ட் ஸ்வே ஆகியோர் பதவி ஏற்றனர். சூ கி உள்ளிட்ட பிற மந்திரிகளும் பதவி ஏற்றனர்.

சூ கி வெளியுறவு, அதிபர் அலுவலகம், கல்வி, எரிசக்தி, மின்சக்தி துறைகளை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment