பண்டாரநாயக்க-ராஜபக்ஷ-விக்கிரமசிங்க-சிறிசேன!

 

கடந்த காலத்தை கீறிக்கிளறிப் பார்த்தால், சந்திரிகா ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இரண்டாம் நிலை மாற்றுத் திட்டம் வைத்திருந்தது பட்டென்று வெளிச்சத்திற்கு வரும். முதன்முதல் பதவியேற்றபோது, யுத்தமா? ஐயையோ.. பொண்ணாப் பிறந்த மென்மையானவள் எனக்கு, யுத்தமென்றாலே நடுக்கம் வரும், நான் புலிகளின் தலைவரோடு நேரடியாகப் பேசி, நிரந்தர சமாதானம் செய்வதற்காக மட்டுமே, ஜனாதிபதி பதவியை எடுக்க ஆசைப்படுகிறேன் என்றார். பெரும்பான்மை இனம் மட்டுமல்ல, பாவம் நம்ம தமிழினமும் அம்மாவை நம்பி, சந்திரிகா காப்பும் சந்திரிகா சேலையும் வாங்கிப் பாவித்தது உண்மைதான். ஏன், சந்திரிகா தொதோலும், சந்திரிகா வடையும், சந்திரிகா ஊத்தப்பமும் கூட ஈழத்தில் ஓஹோ என்று விற்பனையானது என்றால், அம்மாவின் சாதுரியத்தை யோசித்துப் பாருங்கள்.

அத்தனை அதிகாரங்களும் கொண்ட அந்தக் கதிரையில் ஏறிய பின்னர், 12 வருடங்களாக ஒரு நேர்மையான சமாதான முயற்சியில் அவர் இறங்கியதாக வரலாறு இல்லை. விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு அவர் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்பது ஒருபுறம் இருக்க, விடுதலைப் புலிகளுக்கு எதிரான உதிரி அமைப்புக்களையெல்லாம், இரகசியமாக பராமரித்து, பாலூட்டி சீராட்டி வளர்த்தெடுத்த பெருமையும் அம்மையாரையே சாரும்.

யுத்தத்திற்கான வியூகங்கள், யுத்த ஒப்பந்தங்கள், யுத்த நிலையில் படைகள், யுத்தத்திற்கான நிதித்திட்டமிடல்கள், யுத்த உணர்வைத் தூண்டும் இனவாதப் பேச்சுக்கள், யுத்த உணர்வுகொண்ட தளபதிகள், அதிகாரிகள், அமைச்சர்கள் என்று இன்னோரன்ன எல்லாவற்றையுமே, யுத்தத்திற்கான ஆயத்த நிலையிலேயே வைத்துக்கொண்டு, பேச்சுத்தடை, எழுத்துத்தடை, பிரயாணத்தடை, போக்குவரத்துத்தடை, உணவுத்தடை, கல்வித்தடை, மருந்துத்தடை என்று யுத்த மேகத்திற்கு உந்துசக்தி கொடுக்கும் வைட்டமின்களையும் ஏவிவிட்டபடி, 12 வருடங்களையும், இருமுகம் கொண்ட இரும்பு மனிதையாகச் செலவழித்த பெருமைக்குரியவர் அம்மையார்.

சில வருடங்கள் பின்னோக்கிச் சென்று, கண்ணை மூடிக்கொண்டு 2002ல் சிறீலங்கா தீவகத்தை நினைவில் கொண்டுவந்தால், பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். கொழும்பு நகர்ப்பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும், நாட்டின் ஏனைய அனைத்து முக்கிய பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த வீதித்தடைகள், இராணுவ அரண்கள், பாதுகாப்பு வேலிகள், கெடுபிடிகள், கைதுகள், இவை தவிர, தினம்தினம் வந்திறங்கிய இராணுவ உடல்கள், அழுகுரல்கள், வேதனைகள், கொலைகள், கற்பழிப்புக்கள், ஊழல்கள் என்று நாடே குட்டிச்சுவராகி, மீளாக் கடனில் மூழ்கியிருந்தது. அப்போதுதான் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்று, ஆட்சியமைத்தார்.

1994ல் பதவியேற்ற ஜனாதிபதி, 2000ம் ஆண்டுவரை பதவியிலிருக்க வாய்ப்பிருந்தும், ஜெயசுக்குறு போரில், முழுமையான ஊடகத்தடையை விதித்து, விடுதலைப் புலிகளை அரச படைகள் வேகமாக வெற்றிகண்டு வருவதாக அரச ஊடகங்களுடாக பரப்புரை செய்த சந்திரிகா, அந்தப் புகழ் மங்குவதற்கு முன்னதாக, ஜனாதிபதித் தேர்தலை முன்னோக்கி நகர்த்தி, 1999 டிசம்பரில் தேர்தலை நடாத்தினார். வடக்கிலும் கிழக்கிலும் கடும் யுத்த சூழல் இருந்ததால், இதை சாதகமாகப் பயன்படுத்தி, தெற்கில் திட்டமிட்டு வெற்றி பெற்றார் சந்திரிகா. திட்டமிட்டு வெற்றிபெற்றார் என்று சொல்வதற்கும் ஒரு காரணம் உண்டு. தேர்தல் பிரச்சாரத்தில், சந்திரிகா எதிர்பார்த்த மக்கள் செல்வாக்கு அவருக்குக் கிடைக்கவில்லை. யுத்தத்தை முற்றாக நிறுத்தி சமாதானத்தைக் கொண்டுவருவதாக வாக்களித்த ரணிலின் செல்வாக்கும் சரிக்குச்சரி போட்டிபோட்டது. ஜே.வி.பி. கட்சியும், தனது சார்பில் நந்தன குணதிலக்கவை தனி ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியிருந்தது. இந்நிலையில் அவசர மாற்றுத் திட்டம் தீட்டினார் சந்திரிகா. உடனே வெடித்தது குண்டு.

அவரது இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தின் முடிவில் வெடித்த குண்டு, அவரது இடது கண்ணைத் தாக்கியதாகக்கூறி, அதைப் பூதாகாரப்படுத்தி, கண்ணை முற்றாக மூடி பெரிய அளவில் மருந்து கட்டி, வெள்ளைத் துணியால் மூடிக்கொண்டு, நாட்டு மக்களிடம் வாக்கு வரம் கேட்டு மன்றாடினார் சந்திரிகா. எனது உயிரையும் துச்சமென மதித்து நாட்டைப் பாதுகாக்கப் போராடுவேன் என்று சபதமிட்டார். வெற்றி நிட்சயம் என்ற இராணுவ நகர்வில் வெற்றி கிடைக்காவிட்டாலும், அரசியல் நகர்வில் வெற்றி பெற்றார் சந்திரிகா.

டிசம்பர் 22ம் திகதி, நாட்டின் தலைமை நீதிபதியான சரத் என்.சில்வா முன்னிலையில் பகிரங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்ட சந்திரிகா, நாட்டின் எதிரிகளான விடுதலைப் புலிகளையும், பிரதம எதிரியான வேலுப்பிள்ளை பிரபாகரனையும், இல்லாதொழிக்கும்வரை தான் ஓயப்போவதில்லை என்று சூளுரைத்தார். ஜனாதிபதிக் கதிரையில் உட்கார்ந்திருந்த சந்திரிகா, பிரதமர் கதிரையில் தனக்குப் பிடிக்காத ரணில் உட்கார்வரை பெரிதாக விரும்பியிருக்கவில்லை.

ஜனாதிபதிக் கதிரையில் அனைத்து அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு சந்திரிகா அம்மையார் உட்கார்ந்திருக்க, எந்தவித அதிகாரமுமற்ற பிரதமர் பதவியிலிருந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் அவசரஅவசரமாக ஒருதலைப்பட்சமாய் சமாதான ஒப்பந்தத்திற்கு அனுமதி பெற்றுக்கொண்டு, விடுதலைப் புலிகளை சம்மதிக்க வைத்த நோர்வே தரப்பும், அதன் தலைமையிலான இணைத்தலைமை நாடுகளின் குழுமமும், சிறீலங்காவின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஜனாதிபதி மட்டுமே இத்தகைய முடிவுகளை எடுக்கலாம் என்பதை அறியாமல் தங்கள் நகர்வுகளை மேற்கொண்டார்களா? அப்படி எந்த அடிப்படை ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல், ‘ஹோம்வேர்க்’ செய்யாமல் மேற்குலகப் பிரதிநிதிகள் நகர்வதற்கு வாய்ப்பிருக்கிறதா? மிகவும் பலமான தொடர்புகளை பல வருடங்களாக ஜனாதிபதி சந்திரிகாவுடன் பேணிக்கொண்டிருந்த மேற்குலக பிரதிநிதிகள், எந்தவித அனுமதியையும் அவரிடம் பெறாமல், அந்நாட்டின் பிரதமருடன் நேரடியாக ஒப்பந்தம் கைச்சாத்திட முனைந்ததும், சிறீலங்காவின் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமரின் அதிகாரம் அதற்கு இடமளிக்கிறதா, அதை ஜனாதிபதியின் உத்தரவின்றி பிரதமர் முன்னெடுக்கலாமா என்றெல்லாம் இவர்கள் ஆராயாமல் விட்டது எப்படி? அல்லது இவையெல்லாம் தெரிந்திருந்தும், பிறிதொரு நிகழ்ச்சி நிரலுக்காக, மேற்குலகமும் சந்திரிகாவும் இணைந்து ஆடிய ஒரு கூட்டு நாடகமா?

அவசர அவசரமாக யுத்த நிறுத்த ஒப்பந்தமொன்றை ரணிலுடன் கைச்சாத்திட்ட நோர்வே தலைமையிலான குழுமம், அதை ஏற்றுக்கொள்ளும்படி தமிழர் தரப்பிடம் அழுத்தம் கொடுத்ததாகத் தெரிகிறது.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நடந்த சம்பவமொன்றை இங்கே நினைவுகூர்வது நல்லது. வன்னியில் நோய்வாய்ப்பட்டிருந்த திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்களை அங்கிருந்து வெளியேற்றி, உரிய மருத்துவ வசதி வழங்கப்பட வேண்டுமென நோர்வேயிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்தனர். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், மிக உயர்மட்ட இராஜதந்திரப் பேச்சுக்களை நடாத்தி, அன்ரன் பாலசிங்கத்தை வெளிநாட்டிற்கு அழைத்துவர நோர்வே பல்வேறு முயற்சிகளை எடுத்தது. சிறீலங்கா அரசிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. பகிரங்கமாக அப்படி ஒரு நடவடிக்கையை எடுப்பது, சந்திரிகா அரசு விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக உதவியதான பழியை தன்மீது கொண்டுவந்து விடும் என அவர அஞ்சியிருக்கலாம். இந்த நிலையில், இரகசியமாக அன்ரன் பாலசிங்கத்தை வெளியேற்றும் திட்டமிடல் ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு இரகசிய பேச்சுவார்த்தைகளுக்கும் பேரம்பேசல்களுக்கும் மத்தியில், அன்ரன் பாலசிங்கம் இரகசியமாக வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்டு, தாய்லாந்து ஊடாக ஐரோப்பாவிற்கு கொண்டுசெல்லப்பட்டார். நோர்வேயில் அவருக்கு கிட்னி சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.

இந்தப் பாரிய உதவியை விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய நோர்வே தரப்பினர், மிகுந்த மரியாதையையும் கனத்தையும் கௌரவத்தையும் புலிகளிடம் கொண்டிருந்தனர். அத்தகைய உறவைப் பயன்படுத்தி, வேகவேகமாக ஒரு யுத்தநிறுத்தத்தையும் பேச்சுவார்த்தையையும் கொண்டுவர நோர்வே ஊடாக மேற்குலகம் காய்நகர்த்தியது. அப்போது சந்திரிகாவுக்கும் ரணிலுக்கும் இடையில் இருந்த மிக மோசமான முறுகல் நிலையைக் காரணம் காட்டி, ரணில் விக்கிரமசிங்க ஊடாக யுத்தநிறுத்தத்திற்கு அனுமதி பெறப்பட்டது. அதுவரை மேற்குலகுடன் சந்திரிகாவுக்கு இருந்த நெருக்கமான உறவை ஆராய்ந்தால், சந்திரிகாவுக்கு இந்த நகர்வுகள் தெரியாதிருந்திருக்க வாய்ப்பில்லை. அத்துடன் முப்படைகளின் தளபதி, பாதுகாப்பு அமைச்சர் போன்ற அதிகாரங்கள் உட்பட, அதிஉச்ச அதிகாரம் பொருந்திய ஜனாதிபதியிடம் எதையும் கேட்காமல் இப்படியொரு உயர்மட்ட யுத்தநிறுத்தத்தை அந்நாட்டில் கைச்சாத்திட வாய்ப்பில்லை என்ற யதார்த்தத்தைக் கருத்தில் எடுத்தால், அனைத்துமே எதையோ நோக்கிய திட்டமிட்ட காய்நகர்த்தல் என்பது இலகுவில் புரிந்துவிடும்.

இதன்பின்னர், வேகவேகமாக வெளிநாட்டுக்குப் பிரதிநிதிகளை அழைத்துச்சென்று, வகுப்பு நடாத்தி, பேச்சு நடாத்தி, உல்லாசப்பயணங்களையும் சிறப்பாக ஏற்படுத்திக் கொடுத்த அதேவேளை, உள்நாட்டில் இலங்கை அரசு, தொடர்ந்தும் தனது இராணுவப் பலப்படுத்தலைத் தொடர்வதற்கு மேற்குலகம் வழியேற்படுத்திக் கொடுத்தது. ஆக, ஒரு பக்கத்தில் யுத்தநிறுத்தம் என்ற பெயரில் தமிழர் தரப்பை எந்தவித மேலதிக இராணுவ நடவடிக்கையோ, இராணுவத் தளபாடக் கொள்வனவோ, பயிற்சியோ இல்லாது தடுத்து நிறுத்திய மேற்குலகம், மறுபக்கத்தில் சிறீலங்கா அரசுக்கு தங்குதடையற்ற அனுமதியை வழங்கியிருந்தது.

2001 டிசம்பரில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் போதே, தனக்கென இரகசிய மாற்றுத் திட்டம் தீட்டிக்கொண்டவர் சந்திரிகா. பதவியேற்று ஒரு வருடத்திற்கு ஆட்சிக் கலைப்பு இல்லை என்பதால், அந்த ஒரு வருடமளவும், ரணில் விக்கிரமசிங்க எடுத்த சமாதான முயற்சிகளையெல்லாம் ஒருபக்கம் ஏற்றுக்கொள்பவர் போன்று காட்டிக்கொண்டு, மறுபக்கம் ஜே.வி.பி. போன்ற ஐ.தே.க. எதிரணிக் கட்சிகளைக் கூட்டுச் சேர்ப்பதில் இரகசிய முயற்சிகளை மேற்கொண்டார். ரணிலைச் சந்தித்த போதெல்லாம், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் தனக்கில்லை என்று அடித்துச் சொல்லி, அவர் புதிய மாற்றுத் திட்டமெதுவும் தீட்டாதிருக்க ஆவன செய்தார். ஒரு வருடம் முடியும்வரை, ரணில் எடுத்த அத்தனை முயற்சிக்கும் முட்டுக்கட்டை போடாத சந்திரிகா, திடீரென அமைச்சுப் பறிப்பை மேற்கொண்டார்.

அம்மாவின் குணத்தை அறிந்து வைத்திருந்த ரணில், ஒரு தற்பாதுகாப்புக்காக, ஜப்பானிலிருந்து விசேடமாக யசூசி அகாசி ஐயாவை கொழும்புக்கு அழைத்து, பார்லிமென்ட் கலைப்பு நடக்காது என்ற அம்மாவின் சத்தியத்திற்கு சாட்சியாக வைத்தார். அகாசியை, ஜனாதிபதி மாளிகையில் வைத்து சந்தித்த சந்திரிகா அம்மையார், ரணில் அமெரிக்கா சென்று திரும்பும்வரை, நாடாளுமன்றக் கலைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதி கூறினார். இருந்தும் என்ன, பிரதம மந்திரியாக அமெரிக்கா பறந்த ரணில், வெறும் கட்சித் தலைவராக நாடு திரும்பினார். நாடாளுமன்றத்தை முடக்கினார், அடுத்து நாடாளுமன்றத்தையே கலைத்தார். ஒரு வருடமாக அவர் அமைத்து வைத்திருந்த மாற்றுத் திட்டம் அரங்கேறியது.

இதற்கும் ஒரு படி மேலே போய், கொள்கைகள் ஒத்துப்போகாததால், இணைவதற்கு வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட ஜே.வி.பி.யுடன், அங்கும் இங்கும் வெட்டித்திருத்திய நொண்டி ஒப்பந்தமொன்றை செய்துகொண்டு, கூட்டணி அமைத்து, தேர்தலிலும் தன் கட்சியையே வெற்றி பெற வைத்தார். ஒரு சந்தர்ப்பத்தில், சுதந்திரக்கட்சிக்கு கூடுதல் அழுத்தங்களை ஜே.வி.பி. பிரயோகிப்பதை அவதானித்த அவர், திடீரென அந்தக் கட்சியின் தலைமையையே மாற்றியமைத்து, சுதந்திரக் கட்சியின் தலைவராக ரத்னசிறீ விக்கிரமநாயக்கவை நியமித்து, தனது ஜனாதிபதி கதிரையைத் தக்க வைத்துக் கொண்டவர் சந்திரிகா.

நாட்டின் உச்சக்கட்ட அதிகாரமுள்ள ஜனாதிபதியாகக் கோலோச்சிய சந்திரிகாவுக்கு, புதிய தலையிடியாக உருவெடுத்தவர் மகிந்த ராஜபக்ச. ஒரு பக்கத்தில் தன்னை ஒரு சகாவாகக் காட்ட முற்பட்ட மகிந்த, மற்றப்பக்கத்தில் பண்டா குடும்ப அரசியலுக்கு முழுக்குப்போட திட்டம் தீட்டினார். மிக நாசூக்காகக் காய் நகர்த்தி, பிரதமர் கதிரையில் அமர்ந்துவிட வியூகம் அமைத்தார். இணங்கி வருவதுபோல் சைகை காட்டிய சந்திரிகா, தனக்கு எதிர்காலத்தில் மகிந்த ஒரு போட்டியாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறதா என்பதை இரகசியமாக மைபோட்டுப் பார்த்தார். நிலமை சவாலாக மாறலாம் என்பதை ஊகித்துக்கொண்டு, தனக்கு ஒட்டுமொத்த விசுவாசியாக வலம்வந்த லக்ஸ்மன் கதிர்காமரை பிரதமர் கதிரையில் அமர்த்தி விடலாம் என்று திட்டம் தீட்டினார். திட்டங்கள் சீராக முன்னேறிச் சென்றன. கதிர்காமரும் தனது பிரதமர் கதிரை விருப்பத்தை மெதுவாக வெளிப்படுத்த ஆரம்பித்தார். ஐ.நா. பிரதிநிதிக்கான தேர்தலில் கதிர்காமருக்கான வாய்ப்பு நழுவிப் போயிருந்ததால், பிரதமர் கதிரை ஒன்றே அவருக்கான அடுத்தகட்ட நகர்வாக இருந்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

மகிந்த ராஜபக்ச, நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து ஏதாவது ஒரு வகையில் ஆட்சிப் பொறுப்பைத் தக்க வைத்திருக்கும் பண்டாரநாயக்க வம்சத்திடமிருந்து, ராஜபக்ச பரம்பரைக்கு ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் திட்டத்தில் வேகமாகப் பயணிக்க ஆரம்பித்தார். மாற்றான் பரம்பரைக்கு ஆட்சிப்பொறுப்பை தாரை வார்த்துக் கொடுக்க, அம்மையார் அத்தனை இலகுவாக வழியேற்படுத்திக் கொடுக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டதுடன், கதிர்காமர் பிரதமர் கதிரையில் அமர்ந்தால், பண்டாரநாயக்க ஆட்சிப் பீடம் மேலும் பலமடையும் என்பதையும் சூசகமாகக் கணக்கிட்டு, மாற்று யுக்திக்கு தன் தாதாக்களுடன் திட்டமிட்டார்.

அதிகாலையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அழுது வடித்தது. இலங்கையின் வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி, உலக அளவில் பரபரப்பான செய்தியாக வலம்வந்தது. சமாதானப் பேச்சுக்கள் நடைபெறும்போது, ஒரு நாட்டின் வெளிநாட்டமைச்சரைக் கொன்றுவிட்டனர் என்ற பழி விடுதலைப் புலிகள் மீது விழுந்தது. ஒரே கல்லில் பல மாங்காய்களை விழுத்திய பெருமையில் மகிந்த ராஜபக்ச எக்காளமாய்ச் சிரித்து மகிழ்ந்தார். இருப்பினும் தனக்கான தருணம் வரும்வரை, அமைதி காத்தார் மகிந்த.

பேச்சுவார்த்தை நடைபெறும் காலத்திலேயே ரணிலின் பதவி பறிக்கப்பட்டதும், ஜப்பானுக்கு பிரதமர் பதவியுடன் சென்ற ரணில், வெறும் கட்சித் தலைவராக இலங்கை திரும்பியதும், பின்னர் சந்திரிகா தலைகீழாக நிலைமைகளை மாற்றியதும் வரலாறு. கருணா குழப்பம், வன்னியில் ஊடுருவித் தாக்குதல் என்று தொடர்ந்தது சிறீலங்காவின் இரகசிய இராணுவ நடவடிக்கைகள். விடுதலைப் புலிகளே பேச்சுக்களைக் குழப்பினார்கள் என்ற ஒரு சூழ்நிலை வரும்வரை முக்கலும் முனகலுமாக நகர்ந்தது பயணங்களும் பேச்சுக்களும். அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு, கதிர்காமரின் மரணம் போன்றனவும் யுத்தநிறுத்தத்தை ஆட்டம்காண வைத்தன. பிரதமர் கதிரைக்குக் குறிவைத்திருந்த மகிந்த ராஜபக்சவின் நகர்வுகள், கதிர்காமரை அப்புறப்படுத்தியிருக்கலாம் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. இருந்தும் தமிழர் தரப்பை பலவீனப்படுத்த எண்ணியிருந்த மேற்குலகம், கதிர்காமரைக் காரணம் காட்டி, உலகளாவிய ரீதியில் தடைகளை உந்தித் தள்ளியது.

HGHGJGJ455பிரதமர் கதிரையில் அமர்ந்த மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கதிரைக்குக் குறிவைத்து காய்நகர்த்தினார். தான் பதவியேற்றால், நேரடியாக பிரபாகரனுடன் பேசி வேகமான தீர்வு ஒன்றை வழங்குவதாக வாக்களித்து, தனக்கு சார்பாக தேர்தல் முடிவு வரவேண்டும் என்பதற்காக எதிரிகளுடனும் இரகசிய ஒப்பந்தங்கள் உருவாக்கி, தேர்தலில் வெற்றி பெற்றார். வெற்றிபெற்றதும், தனது கதிரையைப் பலப்படுத்தி, குடும்ப உறுப்பினர்களை வேகமாக உள்வாங்கினார். அதுவரை அணிந்திருந்த தனது ‘சமாதான தேவதை அங்கியை’ உதறியெறிந்து, சிகப்பு கழுத்துப்பட்டி அணிந்து, சிங்கள நாட்டின் புதிய மீட்பராக தன்னைக் காட்ட ஆரம்பித்தார். சர்வதேச விதிகளையெல்லாம் மீறி, முள்ளிவாய்க்கால்வரை மனித அவலமும் இன அழிப்பும் தொடர்ந்தது. நேரில் பேசி தீர்வு தர முயற்சித்த மேற்குலகம், துருவ கோளப்பாதையிலிருந்து செய்மதியும் செயற்கைக்கோளும் வழங்கிய துல்லியமான படங்களையும் நிகழ்வுளையும் பார்த்த மேற்குலகம், தன்னிலையில் அசையாப் பொருளாக, இழப்பது தமிழர்களின் உயிர் மட்டும்தானே என்ற மமதையில் பேசாமடந்தைகளாயின.

2002களில் நோர்வே ஆரம்பித்த யுத்தநிறுத்த ஒப்பந்தமும், அதன் பின்னதான பேச்சுக்களும், 2009ல் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலங்களுடன் முடிவுக்கு வந்தது. புலம்பெயர் தமிழர்களின் கூச்சலும் எரிச்சலும் எதிர்ப்பும் மேற்குலகை அசைக்க மறுத்தன. முள்ளிவாய்க்காலில் தான் நினைத்த களேபரத்தை நடத்திமுடித்து விட்டதாக சிறீலங்கா அறிவித்து கொண்டாட்டம் நடத்தியது. அதுவரை பேசாதிருந்த மேற்குலகம், அதற்குப்பின் பேச ஆரம்பித்தது. மனிதஉரிமை என்ற புதிய தளத்தில் மேற்குலகம் அழுத்தம் கொடுத்து, தமிழரிடம் தனக்கான நன்மதிப்பை திரும்பவும் பெற முயன்றது.

நல்லாட்சி கொடுப்பதாகச் சொல்லிக்கொண்டு தற்போது சிறிசேனா நகர்வுகளைத் தொடர்கிறார். சிறையில் இருக்கும் எவரையும் விடாமல், தன்னைக் கொல்ல வந்த ஒருவரை மட்டும் மன்னித்து, மகாத்மா என்று பெயரெடுத்தபடி மேற்குலக சாயலில் பயணிக்கிறார் அவர். ஏழையின் வீட்டுக்குள் சென்று, சொதிச் சட்டியைத் திறந்து காட்டும்படி பணித்து, ஏழைகளின் தலைவன் என்று பெயரெடுத்தாலும், அந்த ஏழ்மையைப் போக்க எந்தப் பணமும் இதுவரை செலவுசெய்யாது, பாக்கிஸ்தானிலிருந்து இராணுவ விமானங்களைச் கொள்வனவு செய்வதற்கு ஒப்பமிட்டபடி அவரது பயணம் தொடர்கிறது.

பறிகொடுத்த பண்டா ஆட்சியை மீளப்பெற்றெத்த மகிழ்வில் அமைதி காக்கிறார் அம்மையார். எப்போதுமே தோல்விகண்டவர் என்று நகைச்சுவையாகச் சுட்டப்பட்ட ரணில், தற்போது நம்பிக்கை மிக்கவராக, மேற்குலகின் நாயகனாகத் தோன்றுகிறார். ரணிலும் சந்திரிகாவும் மட்டுமே துடுப்பைக் கையில் வைத்திருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது, சிறிசேனா கரைசேர்வாரா என்பதற்கான எந்த சமிக்ஞையும் இதுவரை தெரியவில்லை. தமிழர்கள் தொடர்ந்தும் நம்பிக்கையோடு அமைதி காக்க வேண்டுமென்று, அவர்கள் நம்பிய தமிழர் தலைமைகள் இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

குயின்ரஸ் துரைசிங்கம்
ரொறன்ரோ – கனடா.


Related News

 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *