கனடா மூர்த்தி எழுதும் ‘இகுருவி ஐயாவும் நானும்’ ரூஜ்ரிவரில் மண்போட்டவர்ரே’மண்’ சோ…!

ekuruvi-aiya8-X3

‘ரூஜ் ரிவர் இடைத்தேர்தல் தமிழ் மக்களுக்குச் சொல்லுற பாடம் என்ன?’ என்று கேட்டார் இகுருவி ஐயா.

‘கனக்க இருக்கு… தமிழரைத் தமிழர் ஆதரிக்க வேணும் எண்டது சோதனை செய்யப்படுகுது.கட்சி அடிப்படையிலதானே மக்கள் வாக்களிக்க வேணும் எண்டு கனபேர் சொல்லுகினம்.. அது சரிதான். கட்சி அடிப்படையில வாக்களிக்கிறதுஜனநாயகத் தேவையேதான்…!ஆனா இந்த ரூஜ்ரிவரில மட்டும்கட்சி அடிப்படையில தமிழர் வாக்களிக்க வேணுமெண்டா போட்டி போடுற மூண்டுபேரும் தமிழரா இருந்திருக்க வேணும். இதை அடுத்த 2018 ஒன்ராறியோ பொதுத்தேர்தலில நாங்க கட்டாயம்வற்புறுத்தவேணும்.’

‘அதாவதுமற்றத் தொகுதிகளில எப்பிடி இருந்தாலும் பறவாயில்லை… ரூஜ்ரிவர் கொகுதில மட்டும் எல்லா கட்சிகளும் ஒரு தமிழரைத்தான் தங்கட வேட்பாளரா நிறுத்தவேணும் எண்டு சொல்லுறாய்…’ என்ற இகுருவி ஐயாபிறகு ‘நீ சொன்ன மாயிரி அடுத்த 2018 ஒன்ராறியோ பொதுத்தேர்தலிலதான் இனி இதை வலியுறுத்தலாம்..’ என்றார் நக்கலாக.

‘ஓம்.ரூஜ்ரிவர் ஒரு தமிழ்த் தொகுதி எண்ட ஒரு நினைப்பை சகலரிடமும் விதைக்க வேணும். அதுமாதிரி இந்தத் தொகுதில ஒடுற மூண்டுபேரும் தமிழரா இருக்கவேணும் எண்டதையும் ஒரு இயற்கையான நினைப்பாக வர வைக்கவேணும்…’
‘உது அராஜகம்.. ரூஜ்ரிவரில தமிழரிற்ரை வீடுகள் அதிகமா இருக்கிறதெண்டுறதுவேற -ரூஜ்ரிவரில தமிழர் எலெக்சனுக்கு ஒடுறது எண்டுறது வேற. இரண்டையும் எப்பிடியடாப்பா ஒப்பிடுகிறது..? உனக்கென்ன விசரே’என்று அலறினார் இகுருவி ஐயா.

‘வடிவாஒரு தமிழரா இருந்து யோசிச்சுப்பாருங்கோ… நான் சொல்லுறது சரி எண்டு விளங்கும்… அப்பிடியில்லையெண்டுகொண்டு ஆராவது ஒட வந்தா கடைசிலஅவையை தங்கட வீட்டைச் சுத்திசுத்திமட்டும்தான் ஒட வைக்கவேணும்…’ என்று அவரை நான் அராஜகமாக அடக்கினேன். பிறகு,’ஐயா… கட்சிதான்‌ பெரிது என்று எப்போதுமே நினைக்கும் தமிழ்கனேடியர்கள் தமக்குப்பிடித்த கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள். அதுதான் நல்லது. அதை யாரும் எதிர்க்கக் கூடாது,மறுக்கக்கூடாது…’ என்று சொல்லி கட்சிக்கு வாக்களிப்பதை ஆதரித்த நான்இன்னும் தொடர்ந்தேன்.

‘போட்டி போடுற மூண்டுபேரும் தமிழர்கள் எண்டாஎவருக்கு எமது வாக்கு என்பதை கட்சி அடிப்படையிலதீர்மானிப்போம்.!ஒருவேளை 2018 இல் எல்லா போட்டியாளர்களுமே தமிழர்கள்  இல்லை என்று ஒரு நிலைமை திருப்பவும் வந்துவிட்டால்,நாம் தீர்மானித்த தமிழ்க் கனேடியரைவிட போட்டியிடும் வேற்று இனத்தவர் அற்புதமானவரா… தகுதியானவரா என்றும் எதற்கும் ஒருமுறை ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு (நிச்சயமாக அப்படி இருக்காது) நாம் தேர்ந்தெடுத்த தமிழருக்கே வாக்களிப்போம்…!!!! காரணம்நம்மைப் புரிந்த நமது தமிழர் ஒருவர் இத்தொகுதியை பிரதிநிதித்துவம் செய்தால் பல்வேறு வகையிலும் தமிழ்ச்சமூகத்திற்கு அது ஏற்புடையதாக இருக்கும.; தமிழ்நிலைப்பட்ட தூ‌ரநோக்கில் சிந்தித்தால் இதுதான் சரி என்றே இந்தத் தொகுதி வாக்காளனாக எனக்குத் தெரிகிறது.இது 2018க்கு மட்டுமில்லை எப்பவுமே பொருந்தும்..ரூஜ்ரிவர் தொகுதி தமிழ் தொகுதி எண்டு எப்பவும் இருக்கவேணும்..’ என்றேன் கண்ணைச் சிமிட்டிவிட்டு.
இகுருவி ஐயா எதையோ சொல்ல வந்துவிட்டு சொல்லாமல் அடக்கிக் கொண்டார்.

‘அதைவிடவும் இன்னொரு முக்கிய விசயமும் உண்டு ஐயா… தன்ரை தொகுதியில போட்டியிடுகிற வேட்பாளரின் தகுதிகள் என்ன என்ன எண்டதை தொகுதியின்ரை வாக்காளர் தாங்களாகத் தேடித் தேடி அறிந்து கொள்ள வேணும்..!!இது வாக்காளர் அனைவரின்ரையும் கடமை..!’ என்றேன்.

‘வாக்காளர்தான் வேட்பாளரின் தகுதிகளைத் தேடி அறிந்து கொள்ள வேணும் எண்டுறியோ…?விசர்க்கதை கதைக்கிறாய்…. தங்களைப்பற்றி சரியாக பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது போட்டிபோடுற வேட்பாளர் ஒவ்வொருத்தரின்ரையும் கடமையடாப்பா… விளம்பரங்கள், துண்டுப்பிரசுரங்கள், பேட்டிகள் எண்டு அவைதான் தங்களைப்பற்றி எங்களுக்கு அறியத்தரவேணும்.’

‘ஹாஹாஹஹா’ என சிரித்தேன் நான். ‘எந்த வேட்பாளர் ஐயா தன்னைப்பற்றிய சகல உண்மைகளையும் மக்களுக்குச் சொல்லுவார்? தாங்கள் திறம் எண்டுதான் ஒவ்வொரு வேட்பாளரும் சொல்லுவினம். தங்கட கட்சிதான் தமிழ் மக்களின்ரை நண்பன் எண்டும் சேர்த்தே சொல்லுவினம்… அதைவிட்டுவிட்டு தாங்க விட்ட வரலாற்றுப் பிழைகளை மக்களுக்கு எண்டைககாவது போட்டி போடுறவை சொல்லுவினமே…?’ என்று கொக்கி போட்டேன்.

‘சொல்ல மாட்டினம்தான்..’ என ஒத்துக் கொண்டார் இகுருவி. ‘அதெல்லாத்தையும் தமிழ் மக்களுக்குஅறியத் தரவைக்க வேண்டியதுதமிழ் மீடியாவின்ரை வேலை..’

‘அட போங்கைய்யா…தமிழ் மீடியாவும் இதுகளைப்பற்றி அதிகம் பேசாது…பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும். செய்யமாட்டினம்… தமிழ் மட்டுமில்ல… உலகத்திலேயே இண்டைக்கிருக்கிற பெரிய எந்த மீடியாவாவதுஎந்த ஒரு வேட்பாளரின் நிறை குறைகளைவிருப்பு வெறுப்பின்றிப் பேசுமா எண்டதும் கேள்விதான்;!!!வேற சிலர் கடிச்சோ அல்லது நொடிபோலவோ பேஸ்புக்கில விட்டால்தான் உண்டு. இதுக்க மீடியாக்காறர் சேந்து ஒரு யூனியன்வேற துவங்கினாங்கள்.. எங்கே அந்த ஆக்கள்?’ என்றேன்.

‘சரி.. சரி… உதைப் பிறகு பார்ப்பம்… இந்த எலெக்சனில ஆர் நல்லாச் செய்ததிருக்கினம் எண்டுறாய்?’

‘டக் போர்ட்…’ என்றேன் நான் டக் என்று. ‘என்ன???’ என்று அதிர்ந்தார் இகுருவி ஐயா.

‘சும்மா சொல்லக் கூடாது.. என்ரை அவதானத்தின்படிக்கு டக் போர்ட்டின்ரை எலெச்சன்தான் இது. வேணமெண்டா பாருங்கோ… நாளைக்கு பற்றிக் பிரவுணுக்கு போட்டியா -ஒரு பலமான எதிர்ப்பலையோடு சேர்ந்த – சமன்படுத்தும் சக்தியாக கொன்சவேடிவ் கட்சிக்குள்ள டக் போர்ட் வரப்போறாரோ எண்ட சந்தேகம்தான் எனக்கு இந்த இடைத்தேர்தல் வந்துது..’ என்றேன் நான்.

‘கௌம்பீற்றாங்யைய்யா கௌம்பீற்றாங்க..’ எனச் வடிவேலு பாணியில் சொல்லி எனது அவதானத்தை கிண்டல் செய்வதுபோல கலாய்த்தார் இகுருவி ஐயா.

‘நான் பகிடி விடேல்ல… அவதானிச்சுத்தான் சொல்லுறன். அடுத்த 2018 பொதுத்தேர்தலில பற்றிக் நல்லாச் செய்யாட்டி டக் போர்ட்டுக்கும் பற்றிக் பிரவுணுக்கும் இடையில ஒரு முறுகல் வரும்..’ என்றுவிட்டு கதையை மாற்றுவதுபோல, ‘பிசி கட்சியின் தலைவரா பற்றிக் பிரவுண் வெண்டு வாறதுக்கு அவருக்கு அதிக வாக்கு தந்த தொகுதிதான் ரூஜ்ரிவர்.. அது தமிழர் அளிச்ச வாக்கு!அப்பிடி இருக்க..’ என நான் கீறல் விழுந்த ரெக்கோர்;ட் போலத் தொடர என்னை இடைமறித்தார் இகுருவி ஐயா.

‘போடா… ஒண்டு தெரிஞ்சுக்கோ… இப்ப இருக்கிற ரூஜ்ரிவரில தமிழர் தொகை அதிகமில்லை… மற்ற இனத்தவர் – குறிப்பா – சீனர்கள்தான் அதிகம்…’

‘சீனர் தொகை அதிகமோ தமிழர் தொகை அதிகமோகறுப்பர் தொகை அதிகமோ எண்ட கேள்வியோட ஆரும் இப்ப வரேல்ல ஐயா… கனடாவில தமிழர் அதிகமா இருக்கிற தொகுதிரூஜ்ரிவர் எண்டெல்லோ திருப்பித் திருப்பிச் சொல்லுறம்!!!த..மி..ழ..ர்… அ…தி…க..மா.. இ..ரு..க்..கி..ற.. தொ..கு..தி…!!’ என்றேன் நான் அழுத்தமாக. பிறகு,

‘இப்பிடி அதிகப்படியான தமிழர்கள் வாழுகின்ற தொகுதிகளில் தமிழர்கள் நினைத்தால் ஒரு தமிழ் ஆளை தன்ரை தொகுதி உறுப்பினராக வரவைக்கலாம்.அது ராதிகா.. கரி ஆனந்தசங்கரி எண்டதின்ரை தொடர்ச்சி… அதை எங்கட பலம் எண்டும் சொல்லலாம். இந்த சிம்பிள் கணக்கை விளங்கி தெரிஞ்சு எங்கட ஆக்கள் காய் நகர்த்தியிருக்க வேணும்;.மூண்டு பேரையும் தமிழாக்களா நிக்க வச்சிருக்கவேணும். ஆனா இந்த முறை ரேமன் சோவின்ரை நியமனம் அதுக்கு ஆப்பு வைச்சிட்டுது..’

‘பொருத்தமான தமிழரை தேடினோம் காணேல்ல எண்டதாலதான் கொன்சவேடிவ் கட்சி ரேமன் சோவை கொண்டந்தது எண்டுகினம்.’

‘தேடினோம் காணவில்லை என்டது நல்லகொமடி..அப்படியெண்டா(1) ரேமன்சோ அரசியலில் இருக்கும்வரை கொன்சவேட்டிவ் கட்சிக்காறர் இனி இந்தத் தொகுதிக்கு தமிழர் யாரையும் போட்டி போட வைக்க மாட்டினம் எண்டதுதானே அர்த்தம்…!? (2) அல்லது 2018 எலெக்சன் வரேக்கை கன்சவேடிவ் கட்சிக்கு ஒரு புதுத் தமிழர் பொருத்தமானவர்தான் எண்டு தெரிஞ்சிட்டா ரேமன்சோவை தூக்கி எறிஞ்சிடுவினம் எண்டதுதானே அர்த்தம்?’ என்றேன் சூடாக. இகுருவி ஐயா எதுவும் பேசவில்லை

‘பாவம் ரேமன் சோ.. அவர்பாட்டுக்கு ஒரு நல்ல கவுன்சிலராக இருந்தவரை இந்த இடைத்தேர்;தலுக்கு இழுத்துவந்தவை யார்? எண்டதை தமிழ்மீடியாக்கள், அமைப்புக்கள்கேள்விமேல கேள்வியாக் கேட்டிருக்க வேணும். ரேமன் சோ அடுத்த 2 வருசமும் எதிர்க்கட்சிக்குப் போய் என்னத்தை சாதிக்கப் போறார் எண்டு நினைச்சனியள் எண்டும் ரேமனை தெரிவு செய்தவையைத்தமிழ் மீடியாக்கள் கேட்டிருக்க வேணும்…’

‘2018 இல ஒரு ஆட்சிமாற்றம் கட்டாயம் நடக்கும். அதுக்கு பற்றிக்கை பலப்படுத்தவேணும். 2018இல பற்றிக்; அதிக தொகுதியள் தமிழருக்குகட்டாயம் தருவார் எண்டதுதான் பலருடைய கணிப்பு…’

‘ஐயா.. உது பதவி ஆசை வைச்சிருக்கிறவை சொல்லுற பேச்சு.. நான் பதவி ஆசை இல்லாதவகையில,எந்தக் கட்சிக்கும் குருட்டு ஆதரவு தராதவகையில,தமிழ் எண்ட உணர்வோட சிந்திக்கிறதால உந்த விளக்கத்தை நிராகரிக்கிறன்’ என்றேன் சிரித்துக் கொண்டே வைகோபாலசாமி பேசுவதுபோன்ற குரலில்.

‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்றார் இகுருவி ஐயா கலைஞர் கருணாநிதியின் கரகரத்த குரலில். இருவரும் சிரித்தோம்.

‘ரூஜ்ரிவரில் மண்போட்டவர் ரேமன் சோ எண்டதுதான் பெருமை எண்டா  தமிழரா நாங்க இனிமேல் அவரை ரே-மண்-சோ எண்டு அழைத்து மகிழ்வோமாகுக… ரேமன் சோ எனக்கும் நல்ல நண்;பர்தான்.அதுக்காக செத்தவீடு கல்யாணவீடு கூட்டங்களுக்கு போய் பொப்புலாரிட்டிஎடுக்கிறகதை வேண்டவே வேண்டாம்… நான் தமிழன் எண்டு சொல்லி ஒன்ராறியோ சட்டப்பேரவையில்பெருமையா நிக்கக்கூடிய திறமையான ஒருத்தன்தான் எங்களுக்கு இண்டைக்கும் முதல் தேவையா இருக்கு.’

‘அப்படி எண்டா….. இரண்டு தமிழரில ஒருத்தருக்குத்தான் உன்ரை சப்பபோர்ட் என?..’ என்று இகுருவி ஐயா என்னை மடக்கினார்.

உடனே கையை மடக்கி பச்சைத் தமிழன் சீமானின் முழக்கக் குரலில் முழங்கினேன்.’ஆம் என்கிறேன் நான்.. இந்த இடைத்தேர்தல் போட்டி:மூவருக்கு இடையில்…!ஈழத்தமிழர் மண் மீட்புக்கு உதவியவர்கள் இரண்டுபேர்…!!ஈழத்தமிழருக்கு மண் கொடுத்து உதவியவர் மூன்றாமவர்!!!இது புரிந்ததா நம் உடன்பிறப்புக்களே..?கட்சிக்காக வாக்களிப்பதை தமிழ் மக்கள் வேறு தொகுதிகளில் செய்யட்டும்.. இதுரூஜ்ரிவர்! எங்கள் கோட்டை!!’ என்றேன்.

‘இஞ்சை பார் நீ ஒரு பச்சைக் கொன்சவேடிவ் கட்சி ஆள் எண்டுடெல்லோ நினைச்சன். ஆனா நீ இப்ப மாறி நிக்கிறால உன்னை துரோகி எண்டு சொல்லப்போறாங்கள்.’

‘காலக் கொடுமைடா…’ என்றேன் சீமான்போல மறுபடியும். ‘உதுக்கு நான் என்னத்தைச் சொல்ல ஐயா… ஒரு குட்டிக்கதை வேணுமெண்டா சொல்லி முடிக்கிறன்:காலனித்துவ ஆதிக்க காலத்தில் – ‘எதிரி என்றால் தூக்கில் போடு..”துரோகி என்றால் துப்பாக்கிச்சூடு’ என அந்நியர் மிரட்டிவைத்திருந்த காலத்தில் – தன் மண்ணுக்காக போராடிய சுதந்திரப் போராளி ஒருவரை ஆக்கிரமிப்பாளரான வெள்ளையர்கள் தமது நீதிமன்றத்தில் விசாரித்துக் கொண்டிருந்தனராம். ‘நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?’ என குட்டிமணியை கேட்டதுபோல நீதிமன்றம் சுதந்திரப் போராளியிடம் கேட்டது. அதற்கு அந்த சுதந்திரப் போராட்ட வீரன் சொன்னான்: ‘நீதிபதியே… என்னை எதிரி என்று மரியாதையாகச் சொல்லித் தூக்கில் போடவேண்டாம். துரோகி என்று சொல்லி துப்பாக்கியால் சுட்டுவிடுங்கள். நான் இந்த மண்ணில் துரோகியாகவே சாக விரும்புகிறேன். ஏனென்றால் நான் சாகும்போதும் என் கால்கள் இந்த மண்ணில்தான் நிற்க வேண்டும்.’

ரூஜ்ரிவரில் மண் போட்டாயிற்று.

Share This Post

Post Comment