அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகிக்க கிளாரியைவிட வேறு யாரும் இல்லை – ஒபாமா

பன்­னி­ரண்டு வரு­டங்­க­ளுக்கு முன் னர் இதே­போன்று இரவில் ஜன­நாயகக் கட்­சியின் தேசிய மா­நாட் டில் நான் முதற்­த­ட­வை­யாக உரை­யாற்­ றினேன். எனது இரு சிறு­மி­க­ளான மலி­யா­வையும் சாஷா­வையும் நீங்கள் சந்­தித்­தீர்கள். அவர்கள் இரு­வரும் இப்­போது இளம் பெண்­க­ளாக வளர்ந்­து­விட்­டார்கள். எனக்கு பெரு­மை­யாக இருக்­கி­றது. விவே­கி­யான எனது வாழ்க்கைத் துணை­வி­யையும் நீங்கள் நேசித்­தீர்கள். என்னை ஒரு சிறந்த தந்­தை­யா­கவும் சிறந்த மனி­த­னா­கவும் மாற்­றி­ய­வரும் அவரே. பிறகு இவர் நாட்டின் முதற்­பெண்­ம­ணி­யாக வந்து உங்கள் எல்­லோ­ருக்கும் உற்­சா­கத்தைத் தந்தார். என் மனை­விக்கு வயது முதிர்ந்து விட்­ட­தாகக் கூற­மு­டி­யாது. ஆனால் அதை எனக்குக் கூற­மு­டி­யாது. எனது மகள்மார் எப்­போதும் எனக்கு அதை நினை­வூட்­டு­கி­றார்கள். அப்பா நீங்கள் பெரு­ம­ள­வுக்கு மாறி­விட்­டீர்கள் என்று அவர்கள் கூறு­கி­றார்கள். இது ஒன்றும் தவ­றா­ன­தல்ல. கூடுதல் பக்­குவம் அடைந்து விட்­ட­தா­கவும் அர்த்­தப்­ப­டுத்திக் கொள்­ளலாம். ஜன­நா­யகக் கட்­சியின் தேசிய மா­நாட்டில் பொஸ்­டனில் நான் உரை­யாற்­றி­ய­போது மிகவும் இள­மை­யாக இருந்தேன். அத்­த­கைய பெரிய சனத்­திரள் முன்னால் உரை­யாற்­றிய போது பெரும் பதற்­ற­மாக இருந்­தது. ஆனால், நம்­பிக்கை நிறைந்­த­வ­னாக நான் இருந்தேன். அமெ­ரிக்­காவில் நம்­பிக்கை வைத்தேன். பெருந்­தன்­மை­யா­னதும் பெரு மன­து­கொண்­ட­து­மான நாடு எனது கதையை உரு­வாக்­கி­யது. எமது கதைகள் எல்­லா­வற்­றையும் சாத்­தி­ய­மாக்­கி­யது.

அமெ­ரிக்­காவின் பென்­சில்­வே­னியா மாநி­லத்தில் பில­டெல்­பியா நகரில் கடந்த புதன்­கி­ழமை நடை­பெற்றஜன­நா­யகக் கட்­சியின் தேசிய மாநாட்டில் 2016 ஜனா­தி­பதித் தேர்­தலில் கட்­சியின் வேட்­பா­ள­ராக ஹிலாரி கிளின்டன் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நிய­மிக்­கப்­பட்டார். அந்த மா­நாட்டில் ஜனா­தி­பதி பராக் ஒபாமா ஆற்­றிய உரை…

கடந்­து­விட்ட வரு­டங்­களில் பல விட­யங்கள் நடந்­தே­றி­விட்­டன. எமது தேசம் போரினால் சோத­னைக்­குள்­ளாக்­கப்­பட்­டது. பொரு­ளா­தார மந்த நிலை­யி­னாலும் சக­ல­வி­த­மான சவால்­க­ளி­னாலும் சோத­னைக்­குள்­ளாக்­கப்­பட்­டது. என்­றாலும் உங்­க­ளது ஜனா­தி­ப­தி­யாக அநே­க­மாக இரு­ப­தவிக் காலங்­க­ளுக்குப் பிறகு இன்­றி­ரவு உங்கள் முன்னால் நிற்­கின்றேன். முன்­னெப்­போ­தையும் விட அமெ­ரிக்­காவின் எதிர்­காலம் குறித்து கூடு­த­லான அள­வுக்கு நம்­பிக்­கை­யு­ணர்­வுடன் உங்கள் முன்­னி­லையில் பேசு­வ­தற்கு வந்து நிற்­கிறேன். நாம் எல்­லோரும் ஒன்­றி­ணைந்து சாதித்த சக­ல­வற்­றுக்கும் முன்னால் நம்­பிக்­கை­யு­ணர்­வுடன் தானே நிற்க முடியும். 80 வரு­டங்­களில் முன்­னொ­ரு­போதும் இல்­லாத வகை­யி­லான பொரு­ளா­தார மந்த barack-and-hillaryநிலையை சந்­தித்தோம். என்­றாலும் அதை எதிர்த்துப் போராடி மீண்டு வந்­தி­ருக்­கிறோம். செல­வி­னத்­துக்கு குறைந்த வரவின் நிலை வீழ்ச்சிகண்­டி­ருக்­கி­றது. வாகன உற்­பத்தித் தொழில்­துறை புதிய சாத­னை­களைப் படைத்­தி­ருக்­கி­றது. 8 வரு­டங்­களில் வேலை­யில்லாத் திண்­டாட்டம் மிகவும் கடு­மை­யாக வீழ்ச்சி கண்­டி­ருக்­கி­றது. எமது வர்த்­தக தொழில்­ து­றைகள் ஒரு ­கோடி 50 இலட்சம் புதிய தொழில் வாய்ப்­புக்­களை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. ஒரு நூற்­றாண்டு காலம் முயற்­சி­மேற்­கொண்ட பிறகு அமெ­ரிக்­காவில் சுகா­தாரப் பரா­ம­ரிப்பு என்­பது ஒரு குறிப்­பிட்ட சிலரின் வரப்­பி­ர­சாதம் அல்ல என்று நாம் பிர­க­டனம் செய்­தி­ருக்­கிறோம். இன்று சுகா­தாரப் பரா­ம­ரிப்பு ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் உரி­மை­யாக இருக்­கி­றது. பல தசாப்த கால பேச்­சு­வார்த்­தைக்குப் பிறகு வெளி­நாட்டு எண்­ணெய்யில் இருந்து எம்மை விலக்கிக்கொள்ள ஆரம்­பித்­தி­ருக்­கிறோம். எமது தூய்­மை­யான எரி­பொருள் உற்­பத்­தியை இரண்டு மடங்­காக்­கி­யி­ருக்­கிறோம். எமது துருப்­புக்­களில் மேலும் கூடுதல் எண்­ணிக்­கை­யா­னோரை வெளி­நா­டு­களில் இருந்து திருப்­பி­யெ­டுத்து அவர்­களின் குடும்­பத்­த­வர்­க­ளிடம் ஒப்­ப­டைத்­தி­ருக்­கின்றோம். ஒஸாமா பின்­லே­ட­னுக்கு நீதி வழங்­கி­யி­ருக்­கிறோம்.

இரா­ஜ­தந்­தி­ரத்தின் ஊடாக ஈரானின் அணு­வா­யுதத் திட்­டத்தை மூடச்செய்­தி­ருக்­கிறோம். கியூபா மக்­க­ளுடன் புதிய அத்­தி­யாயம் ஒன்றைத் திறந்­தி­ருக்­கிறோம். எமது சிறு­வர்­க­ளுக்­காக பூமியைப் பாது­காக்­கக்­கூ­டிய கால­நிலை உடன்­ப­டிக்­கை­யொன்றில் சுமார் 200 நாடு­களை ஒன்­றி­ணைத்­தி­ருக்­கின்றோம். மாண­வர்­க­ளுக்கு கட­னு­த­வி­களை வழங்­கு­கின்ற மோச­டி­களில் இருந்து பாவ­னை­யா­ளர்­களைப் பாது­காக்­கின்ற கொள்­கை­களை நாம் நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்றோம். உகந்த வீட்டு வச­தி­யின்றி வாழும் முன்னாள் படை­வீ­ரர்­களின் எண்­ணிக்­கையே அநே­க­மாக அரை­வா­சி­யாகக் குறைத்­தி­ருக்­கிறோம். முற்­றிலும் துணிச்­ச­லு­ட­னான எண்­ணற்ற நட­வ­டிக்­கை­களின் ஊடாக அன்­புக்கு மட்­டுப்­பா­டுகள் இல்­லை­யென்­பதை அமெ­ரிக்கா கற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது. அமெ­ரிக்கா பூராவும் இன்று திரு­மண சமத்­துவம் ஒரு நடை­முறை யதார்த்­த­மா­கி­யி­ருக்­கி­றது.

நாம் தொடங்­கி­ய­போது இருந்­ததை விடவும் கூடுதல் வல்­லமை கொண்­ட­தா­கவும் கூடுதல் சுபீட்சம் நிறைந்­த­தா­கவும் எமது நாட்டை பல நட­வ­டிக்­கை­களின் ஊடாக நாம் மாற்­றி­ய­மைத்­தி­ருக்­கின்றோம். மாற்றம் என்­பது ஒரு­போ­துமே சுல­ப­மா­ன­தா­கவும் ஒரு­போ­துமே விரை­வா­ன­தா­கவும் இருக்­கப்­போ­வ­தில்லை என்­பதை ஒவ்­வொரு வெற்­றியின் ஊாடா­கவும் ஒவ்­வொரு பின்­ன­டைவின் ஊடா­கவும் நாம் புரிந்­து­கொண்­டி­ருக்­கின்றோம். ஒரு பத­விக்­கா­லத்தில் அல்­லது ஒரு ஜனா­தி­ப­தியின் கீழ் அல்­லது ஒரு வாழ்­நாளில் சகல சவால்­க­ளையும் நாம் சந்­தித்­து­விடப் போவ­தில்லை என்­ப­தையும் புரிந்­து­கொண்­டி­ருக்­கின்றோம்.

எனவே, நாம் செய்­வ­தற்கு இன்­னமும் பல பணிகள் இருக்­கின்­றன என்­பதை உங்­க­ளுக்குக் கூறு­வ­தற்­காக இன்­றி­ரவு உங்கள் முன்­னி­லையில் நிற்­கிறேன். நல்­ல­தொரு தொழில்வாய்ப்பைப் பெற­வேண்­டிய தேவையைக் கொண்ட, நல்­ல­தொரு வேத­னத்தைப் பெற­வேண்­டிய தேவையைக் கொண்ட, அல்­லது கண்­ணி­ய­மான ஓய்வைப் பெற­வேண்­டிய தேவையைக் கொண்ட ஒவ்­வொரு அமெ­ரிக்­கர்­க­ளுக்­கா­கவும் நாம் மேலும் பாடு­பட வேண்­டி­யி­ருக்­கி­றது. வறு­மையில் இருந்து விடு­ப­டு­வ­தற்கு வல்­லு­றுதி வாய்ந்த ஏணி தேவைப்­ப­டு­கின்ற, உலகத் தரம் வாய்ந்த கல்­வியைப் பெற­வேண்­டிய தேவையைக் கொண்ட ஒவ்­வொரு சிறு­வ­ருக்­கா­கவும் நாம் மேலும் பாடு­ப­ட­வேண்­டி­யி­ருக்­கி­றது. கடந்த ஏழரை வரு­ட­கா­லத்தில் முன்­னேற்றம் ஏற்­பட்­டு­விட்­ட­தாக உண­ராமல் இருக்­கின்ற ஒவ்­வொ­ரு­வ­ருக்­கா­கவும் நாம் மேலும் பாடு­பட வேண்­டி­யி­ருக்­கி­றது. எமது வீதி­களை மேலும் பாகாப்­பா­ன­வை­யா­கவும் எமது குற்­ற­வியல் நீதி­மு­றையை மேலும் நேர்­மை­யா­ன­தா­கவும் வைத்­தி­ருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும்.

எமது தாய­கத்தை மேலும் பாது­காப்­பா­ன­தா­கவும் எதிர்­காலச் சந்­த­திக்­காக எமது உலகை மேலும் சமா­தா­ன­மா­ன­தா­கவும் நிலை­பே­றா­ன­தா­கவும் வைத்­தி­ருக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். நாமெல்­லோரும் சமத்­து­வ­மா­ன­வர்­க­ளாகப் படைக்­கப்­பட்­டி­ருக்­கிறோம். கட­வுளின் கண்கள் முன்னால் நாமெல்­லோரும் சுதந்­தி­ர­மா­ன­வர்­க­ளாக இருக்­கிறோம் என்ற எமது, தேசத்தின் தாபக நெறியை பேணிப்­பா­து­காக்கக் கூடி­ய­தாக நாம் கச்­சி­த­மான முறையில் செயற்­பட்­டி­ருப்­ப­தாகக் கூற­மு­டி­யாது.

அந்தப் பணிக்­காக இந்த வருடம் நவம்­பரில் எம் முன்னால் ஒரு பெரிய தெரிவு இருக்­கி­றது. இது ஒரு வகை மாதி­ரி­யான அல்­லது எடுத்­துக்­காட்­டான ஒரு தேர்தல் அல்ல என்று கூறு­வது விரும்­பத்­தக்­கது என்­றுதான் நினைக்­கிறேன். இது வெறு­மனே கட்­சி­க­ளுக்கு அல்­லது கொள்­கை­க­ளுக்கு இடை­யி­லான தெரிவு அல்ல. இட­துக்கும் வல­துக்கும் இடை­யி­லான வழ­மை­யான விவா­தங்­களும் அல்ல. இது ஒரு மக்கள் என்ற வகையில் நாம் யார் என்­ப­தையும் சுயாட்­சியில் இந்த மகத்­தான அமெ­ரிக்க பரீட்­சார்த்­தத்­துக்கு நாம் உண்­மை­யா­ன­வர்­க­ளாக இருக்­கி­றோமா என்­ப­தையும் பற்­றிய ஒரு கூடுதல் அடிப்­ப­டை­யான தெளி­வாகும்.

எனக்குத் தெரிந்த அமெ­ரிக்கா

ஜன­நா­யகக் கட்­சி­யி­ன­ரா­கிய நாம் குடி­ய­ரசு கட்­சி­யுடன் பெரு­வா­ரி­யான வேறு­பா­டு­களை எப்­போதும் கொண்­டி­ருக்­கிறோம். அதில் தவறு எதுவும் இல்லை. குறிப்­பாகச் சொல்­வ­தனால், குறிக்­கோள்­க­ளுக்கு இடை­யி­லான இந்தப் போட்­டியே எமது நாட்டை முன்­னோக்கித் தள்­ளி­யி­ருக்­கி­றது. ஆனால் கடந்த வாரம் கிளிவ்­லாண்டில் (குடி­ய­ரசுக் கட்­சியின் தேசிய மா­நாட்டில்) நாம் கேட்­டவை குறிப்­பாக குடி­ய­ரசுக் கட்­சியின் கொள்­கை­யு­மல்ல, கன்­சர்­வேட்டிவ் தன்­மை­யான கொள்­கை­யு­மல்ல. நாம் ஒரு­வ­ருக்­கெ­தி­ராக மற்­றவர் திரும்­பி­யி­ருக்­கின்ற, உலகின் ஏனைய பகு­தி­களில் இருந்து அந்­நி­யப்­ப­டு­கின்ற ஒரு நாட்டின் மிகவும் ஆழ­மான நம்­பிக்­கை­யீனத்­தையே நாம் கேட்டோம். முக்­கி­ய­மான பிரச்­சி­னை­க­ளுக்கு அக்­க­றை­யு­ட­னான தீர்வு எதுவும் அங்கு முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. வெறுப்­பு­ணர்வும் கோப­மும்தான் அங்கு தூண்­டி­வி­டப்­பட்­டது. எனக்குத் தெரிந்த அமெ­ரிக்கா அது­வல்ல.

துணிச்­சலும் நம்­பிக்­கை­யு­ணர்வும் அறி­வுக்­கூர்­மையும் நிறைந்த அமெ­ரிக்­கா­வையே நான் அறிவேன். எனக்குத் தெரிந்த அமெ­ரிக்கா கண்­ணி­யமும் பண்பும் பெருந்­தன்­மையும் கொண்­டது. நிச்­ச­ய­மாக, எமது குழந்­தை­களைப் பாது­காப்­ப­திலும் நோய்­வாய்ப்­பட்­ட­வர்­களைப் பரா­ம­ரிப்­ப­திலும் உண்­மை­யான அக்­கறை எமக்­குண்டு. அர­சியல் முட்­டுக்­கட்­டைகள் எம்மை விரக்­தி­ய­டைய வைத்­தி­ருக்­கின்­றன. இனப்­பி­ள­வுகள் எமக்கு கவலை தரு­கின்­றன. ஒர்­லண்டோ அல்­லது நீஸ் நகரில் இடம்­பெற்ற பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மான செயல்­க­ளினால் நாம் அதிர்ச்­சியும் கவ­லையும் அடைந்­தி­ருக்­கின்றோம். தொழிற்­சா­லைகள் மூடப்­பட்­டதன் விளை­வாக நெருக்­க­டி­களில் இருந்து ஒரு­போ­துமே விடு­ப­டாத நிலையில் அமெ­ரிக்­காவில் பல பகு­திகள் இருக்­கின்­றன. கடும் உழைப்பில் பெரு­மை­ய­டைந்த மனி­தர்கள் இருந்­தார்கள். தங்கள் குடும்­பங்­களை அக்­க­றை­யுடன் வளர்த்த மனி­தர்கள் இருந்­தார்கள். இன்று அவர்கள் எல்­லோரும் தாங்கள் மறக்­கப்­பட்­டு­விட்­ட­வர்­க­ளாக உண­ரு­கி­றார்கள். எமக்குக் கிடைத்த அதே வாய்ப்­புக்கள் தங்­க­ளது குழந்­தை­க­ளுக்கு கிடைக்­குமா என்று ஏங்­கு­கின்ற பெற்­றோர் இருக்­கி­றார்கள்.

சிறப்­பாக செயற்­பட வேண்­டிய கட­மையும் சவாலும் எமக்கு முன்னால் இருக்­கின்­றன. அமெ­ரிக்­காவின் 50 மாநி­லங்­க­ளூ­டா­கவும் நான் பயணம் செய்­தி­ருக்­கின்றேன். உங்­க­ளுடன் சேர்ந்து மகிழ்ந்­தி­ருக்­கின்றேன். உங்­க­ளுடன் சேர்ந்து துக்­கப்­பட்­டி­ருக்­கின்றேன். எல்­லா­வற்­றையும் விட அமெ­ரிக்­காவில் இருக்­கின்ற சரி­யா­னதை, நல்­லதை நான் கண்­டி­ருக்­கின்றேன். கடு­மை­யாக உழைக்­கின்ற மக்­க­ளையும் தொழில்­து­றை­களை தொட­ரு­கின்ற மக்­க­ளையும் நான் காண்­கிறேன். குழந்­தை­களைப் படிப்­பிக்­கின்ற மக்­க­ளையும் எமது நாட்­டுக்குச் சேவை செய்­கின்ற மக்­க­ளையும் நான் காண்­கிறேன். புதிய கண்­டு­பி­டிப்­புக்­களை மேற்கொள்­கின்ற பொறி­யி­ய­லா­ளர்­களை, பிணி நீக்கும் புதிய முறை­களை முன்­வைக்­கின்ற டாக்­டர்­களை நான் காண்­கிறேன். சக்­தியும் புதிய இலட்­சி­யங்­களும் நிறைந்த இளம் சந்­த­தியை நான் காண்­கிறேன்.

எல்­லா­வற்­றுக்கும் மேலாக ஒவ்­வொரு கட்­சி­யிலும் ஒவ்­வொரு பின்­ன­ணி­யிலும் இருக்­கின்ற அமெ­ரிக்­கர்­களை நான் காண்­கிறேன். கறுப்பர், வெள்­ளையர், லத்­தினோ, ஆசியர், சுதேச அமெ­ரிக்கர், இளை­யவர், முதி­யவர், தன்­னி­னச்­சேர்ச்­கை­யாளர், ஆண், பெண், வலது குறைந்தோர் என எவ­ராக இருந்­தாலும் எல்­லோரும் நாம் நேசிக்­கின்ற வலிமை பொருந்­திய இந்த நாட்டின் பெரு­மைக்­கு­ரிய கொடியின் கீழ் ஒன்­றி­ணைந்து நிற்­போ­மே­யானால் மேலும் பலம்­பொ­ருந்­தி­ய­வர்­க­ளாக இருக்க முடியும் என்று நம்­பு­கி­ற­வர்­களைக் காண்­கிறேன். அதைத்தான் நான் காண்­கிறேன். அதுதான் எனக்குத் தெரிந்த அமெ­ரிக்கா.

ஒரே­யொரு வேட்­பாளர்

இந்த தேர்தல் போட்­டி­யிலே எதிர்­கா­லத்தில் நம்­பிக்கை கொண்ட ஒரே­யொரு வேட்­பா­ளரே இருக்­கிறார். அந்த எதிர்­கா­லத்­துக்­காக அவர் தன்னை அர்ப்­ப­ணித்­தி­ருக்­கிறார். எமது சிறார்கள் வளம்­பெற உத­வு­வ­தற்கு எதையும் செய்­யக்­கூ­டிய ஒரு தாய் அவர், ஒரு பாட்டி அவர், தடை­களைத் தகர்த்­தெ­றி­வ­தற்கும் கண்­ணாடிக் கூரை­களை உடைத்­தெ­றி­வ­தற்கும் ஒவ்­வொரு அமெ­ரிக்­க­ருக்கும் கிடைக்­கக்­கூ­டிய வாய்ப்­புக்­களை விரி­வு­ப­டுத்­து­வ­தற்கும் நிஜ­மான திட்­டங்­களைக் கொண்­டி­ருக்கும் தலைவி அவர். அவர்தான் அமெ­ரிக்­காவின் அடுத்த ஜனா­தி­பதி ஹிலாரி கிளின்டன்.

8 வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஹிலா­ரியும் நானும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜன­நா­யகக் கட்­சியின் வேட்­பாளர் நிய­ம­னத்தைப் பெறு­வ­தற்­காக போட்டி போட்­ட­வர்கள் என்­பது உங்­க­ளுக்குத் தெரியும். ஒன்­றரை வரு­ட­காலம் நாம் மல்­லுக்­கட்­டினோம். அந்­தப்­போட்டி கடு­மை­யா­ன­தாக இருந்­தது. ஏனென்றால் ஹிலாரி மிகவும் வலி­மை­யா­ன­வ­ராக இருந்தார். நான் அலுத்­துப்­போனேன். நான் செய்துகொண்­டி­ருந்த சக­ல­வற்­றையும் அவரும் செய்­து­கொண்­டி­ருந்தார். போட்­டியில் நான் வென்று விட்டேன் என்று நினைத்­துக்­கொண்­டி­ருந்த ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ஹிலாரி மிலரும் கூடுதல் வலி­மை­யு­டை­ய­வ­ராக வந்தார். அந்தப் போட்­டி­யெல்லாம் முடிந்த பிறகு எனது நிர்­வா­கத்தில் இணைந்துகொள்­ளு­மாறு நான் ஹிலா­ரியைக் கேட்டேன். அவ­ருக்கு அது சிறு அதிர்ச்­சியைக் கொடுத்­தது. எனது அதி­கா­ரி­களில் சிலரும் அதிர்ச்­சி­ய­டைந்­தார்கள். ஆனால், இறு­தியில் “ஆம்” என்று அவர் இணங்­கினார். ஏனென்றால், எங்­களில் எவ­ரையும் காட்­டிலும் முக்­கி­ய­மான பெரிய விவ­கா­ரத்தைக் கையா­ள­வேண்­டிய பொறுப்பு எமக்கு இருந்­ததை ஹிலாரி உணர்ந்து கொண்டார்.

முன்­வ­ரிசை

நான்கு வரு­டங்­க­ளாக ஹிலா­ரியின் விவே­கத்­துக்கு, அவரின் மதிப்­பீட்­டுக்கு அவரின் ஒழுங்கு கட்­டுப்­பாட்­டுக்கு நான் முன்­வ­ரி­சையைக் கொடுத்­தி­ருந்தேன். நம்­ப­மு­டி­யாத அள­வுக்கு அவரின் பணியின் நெறி­முறை இருந்­தது. மற்­ற­வர்­களின் கவ­னத்தைப் பெற­வேண்டும் என்­ப­தற்­கா­கவோ அல்­லது பாராட்டைப் பெற­வேண்­டு­மென்­ப­தற்­கா­கவோ அவர் இவ்­வாறு செயற்­ப­ட­வில்லை என்­பதை என்னால் விளங்கிக்கொள்­ளக்­ கூ­டி­ய­தாக இருந்­தது. ஆத­ரவும் வழி­காட்­டலும் தேவைப்­ப­டு­கின்ற ஒவ்­வொ­ரு­வ­ருக்­கா­க­வுமே அவர் அவ்­வாறு செயற்­பட்டார். யாருக்­காக போரா­டு­கின்றார் என்­பதை ஒரு­போதும் அவர் மறக்­க­வில்லை என்­பதை இவ்­வ­ளவு வரு­டங்­க­ளுக்குப் பிறகு நான் புரிந்­து­கொண்டேன்.

சிறுவர் பாது­காப்பு நிதி­யத்தில் ஒரு இளம்­பெண்­ணாகப் பணி­யாற்­றிய காலத்தில் ஹிலா­ரி­யிடம் இருந்த தளராத உறுதி இன்­னமும் அவ­ரிடம் இருக்­கி­றது. வீடு வீடாகச் சென்று ஊன­முற்ற குழந்­தைகள் தர­மான கல்­வியைப் பெறு­வதை இன்று அவர் உறு­தி­செய்தார். எமது முதல் பெண்­ம­ணி­யாக ஹிலாரி வெளிக்­காட்­டிய நல் இதயம் இன்­னமும் அவ­ரிடம் இருக்­கி­றது. சிறு­வர்கள் சுகா­தாரக் காப்­பு­றுதி த் திட்­ட­மொன்றை நிறை­வேற்­று­வ­தற்கு அவர் காங்­கி­ர­ஸுடன் சேர்ந்து பணி­யாற்­றினார். அத்­திட்டம் இன்­று­வரை இலட்­சக்­க­ணக்­கான சிறு­வர்­க­ளுக்கு பாது­காப்பு அளித்துக் கொண்­டி­ருக்­கி­றது. 9/11 இல் தங்­க­ளது அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இழந்த ஒவ்­வொரு அமெ­ரிக்­க­ரையும் சந்­தித்த நினைவை ஹிலாரி இன்­னமும் கொண்­டி­ருக்­கிறார். அதனால் தான் அவர் நியூ­யோர்க்கைச் சேர்ந்த செனட்டர் என்ற வகையில் நகரைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு நிதியை அளிப்­ப­தற்கு கடு­மை­யாகப் பாடு­பட்டார். வெளி­யு­றவு அமைச்சர் என்ற வகையில் வெள்­ளை­மா­ளி­கையில் என்­னுடன் அமர்ந்­தி­ருந்து ஒஸாமா பின்­லே­டனை ஒழித்துக் கட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கையை ஹிலாரி ஆத­ரித்­து ­வா­திட்டார்.

அமெ­ரிக்க ஜனா­தி­பதிப் பத­வி­யி­ட­மி­ருந்து எதிர்­பார்க்­கப்­ப­டு­ப­வற்­றுக்­காக எம்மைத் தயார்­ப­டுத்­து­வ­தென்­பது மிகவும் கஷ்­ட­மான காரி­ய­மாகும். அதைப்­பற்றி நீங்கள் வாசிக்­கலாம், படிக்­கலாம். ஆனால் அந்தக் கதி­ரையில் அமரும் வரை உலக நெருக்­க­டி­யொன்றைச் சமா­ளிப்­ப­தென்­பது எப்­ப­டிப்­பட்ட காரியம் என்­பதை யாரும் அறியார். இளை­ய­வர்­களை போருக்கு அனுப்­பு­வ­தென்­பது எப்­ப­டிப்­பட்ட காரியம் என்­பதை யாரும் அறியார். ஆனால், வெள்­ளை­மா­ளி­கையில் ஓவல் அலு­வ­ல­கத்தில் ஹிலாரி இருந்­தி­ருக்­கிறார். அந்தத் தீர்­மா­னங்­களின் ஒரு பகு­தி­யாக அவர் விளங்­கி­யி­ருக்­கிறார். எமது அர­சாங்கம் மேற்­கொள்­கின்ற தீர்­மா­னங்­க­ளினால் எத்­த­கைய விளை­வுகள் ஏற்­படும் என்­பதை அவர் அறிவார். நெருக்­க­டி­யொன்றின் மத்­தியில் கூட, அவர் மற்­ற­வர்­களின் கருத்­துக்­களை கேட்­ட­றிவார். நிதா­ன­மாக இருந்து ஒவ்­வொ­ரு­வ­ரையும் மதிப்­புடன் நடத்­துவார். சிக்­கல்கள் எந்­த­ள­வுக்கு ஆபத்­தா­ன­வை­யாக இருந்­தாலும் மற்­ற­வர்கள் தன்னை மடக்­கு­வ­தற்கு எவ்­வ­ள­வுதான் முயற்­சித்­தாலும் அவற்­றை­யெல்லாம் பொருட்­ப­டுத்­தாமல் தொடர்ந்து காரி­யத்தில் கவனம் செலுத்­துவார். ஒருபோதும் வெளி­யேறிச் செல்­ல­மாட்டார். எனக்குத் தெரிந்த ஹிலாரி அப்­ப­டிப்­பட்­டவர்.

நான் பாராட்ட விரும்­பு­கின்ற ஹிலாரி அப்­ப­டிப்­பட்­டவர். அதன் கார­ணத்­தி­னால்தான் மிகுந்த நம்­பிக்­கை­யுடன் கூறு­கின்றேன் அமெ­ரிக்­காவின் ஜனா­தி­ப­தி­யாகப் பணி­யாற்­று­வ­தற்கு ஹிலா­ரியை விடவும் கூடுதல் தகு­தி­வாய்ந்த வேறு ஒரு ஆளோ அல்­லது பெண்ணோ ஒரு­போதும் இருந்­த­தில்லை. நானோ அல்­லது பில் கிளின்­டனோ கூட ஹிலா­ரியின் தகு­திக்கு நிக­ரா­ன­வர்கள் அல்ல.

ஹிலா­ரியின் மதிப்­பீ­டு­களைப் பற்றி நீங்கள் வியப்­பா­வீர்கள். தன்­னுடன் சேர்ந்து உப ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகப் போட்­டி­யி­டு­வ­தற்கு இவர் தெரிவுசெய்­தி­ருக்கும் பிர­மு­கரைப் பாருங்கள். ரிம் கெயின் ஒரு நல்ல மனிதர். மிகவும் எளி­மை­யா­னவர். கட­மை­யு­ணர்வு கொண்ட ஒரு பொதுச் சேவை­யாளர். நான் அவ­ரது குடும்­பத்தை அறிவேன். அவரின் மனைவி ஆனை நான் நேசிக்­கிறேன். அவர்­களின் குழந்­தை­களை நான் நேசிக்­கிறேன். ரிம் கெயின் மகத்­தான ஒரு உப ஜனா­தி­ப­தி­யாக விளங்­குவார். அவர் ஹிலா­ரியை ஒரு சிறந்த ஜனா­தி­ப­தி­யாக்­குவார். என்னை ஒரு சிறந்த ஜனா­தி­ப­தி­யாக்­கிய எனதருமை நண்­பரும் சகோ­த­ர­ரு­மான ஜோ பிடெனைப் போன்று செயற்­படக் கூடி­யவர் கெயின்.

பிர­சா­ரங்­க­ளின்­போது ஹிலா­ரியால் உங்­க­ளி­ட­மி­ருந்து அறிந்துகொள்­ளக்­ கூ­டி­ய­தாக இருந்த பிரச்­சி­னைகள் மற்றும் அக்­க­றை­களை தீர்த்துவைப்­ப­தற்­கான உண்­மை­யான திட்­டங்கள் அவ­ரிடம் உண்டு. புதிய தொழில் வாய்ப்­பு­க்களில் முத­லீடு செய்­வ­தற்கு, தங்­க­ளது கம்­ப­னின் இலா­பங்­களில் தொழி­லா­ளர்கள் பங்கைப் பெற உத­வு­வ­தற்கு முன்­பள்­ளி­களில் பிள்­ளை­களைச் சேர்க்க உத­வு­வ­தற்கு, பெரு­ம­ளவில் கடனைப் பெறாமல் மாண­வர்கள் கல்­லூரிப் படிப்பை முன்­னெ­டுக்க உத­வு­வ­தற்கு பிரத்­த­ியே­க­மான யோச­னை­களை ஹிலாரி கொண்­டி­ருக்­கிறார். தலை­வர்கள் அவ்­வா­றுதான் செய்­வார்கள்.

டொனால்ட் ட்ரம்ப்

இனிமேல் நாம் டொனால்ட் ட்ரம்பைப் பற்றி பார்ப்போம். அவர் உண்­மை­யி­லேயே ஒரு திட்­டத்தைக் கொண்ட பேர்­வ­ழி­யல்ல. அக்­க­றை­யுடன் நோக்கக் கூடிய ஒரு பேர்­வ­ழி­யு­மல்ல! தன்னை ஒரு வர்த்­தகப் புள்ளி என்று ட்ரம்ப் அழைக்­கிறார். அது உண்­மையே. ஆனால் நான் ஒன்றைக் கூறவேண்டும்.

எந்­த­வி­த­மான வழக்­கு­க­ளிலும் அகப்­ப­டாமல் தொழி­லா­ளர்­க­ளுக்கு முறை­யாக வேத­னத்தைக் கொடுக்­கா­த­வர்கள் என்ற பெயரை எடுக்­காமல், ஏமாற்றுப்பேர்­வ­ழிகள் என்று மக்கள் உண­ராத பெரு வெற்றிபெற்ற பெரு­வா­ரி­யான வர்த்­தகப் புள்­ளி­க­ளான ஆண்­க­ளையும் பெண்­க­ளையும் நான் அறிவேன். தொழி­லா­ளர்­க­ளுக்கு எந்த மதிப்­பையும் கொடுக்­காமல் இவ்­வு­லகில் 70 வரு­டங்­களைச் செலவுசெய்­து­விட்ட ஒரு பேர்­வழி திடீ­ரென்று உங்கள் நலன்­க­ளுக்­காகக் குரல் கொடுக்­கின்­ற­வ­ராக திடீ­ரென்று மாறப்போகின்றார் என்று மெய்­யா­கவே எவ­ரா­வது நம்­பு­கி­றார்­களா? உங்­க­ளது குர­லாக அவர் மாறப்போகின்றார் என்று எவ­ரா­வது நம்­பு­கி­றார்­களா? அவ்­வா­றானால் நீங்கள் அவ­ருக்கு வாக்­க­ளிக்­கத்தான் வேண்டும்.

பொரு­ளா­தா­ரத்தை வளர்ச்­சி­யுறச் செய்து சக­ல­ருக்கும் கூடு­த­லான வாய்ப்­புக்கள் கிடைக்கப் பெறு­வதைக் காண விரும்­பு­கிற ஒரு­வ­ராக இருந்தால், உங்­க­ளது செல­வி­னங்­களால் வளங்­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­ப­டு­வது குறித்து கவ­லைப்­படக் கூடிய ஒரு­வ­ராக இருந்தால் நீங்கள் அவர் பற்றி நீங்கள் அக்­க­றைப்­பட வேண்டும்.

உயர்ந்த வேத­னங்­க­ளுக்­காக, சிறந்த நன்­மை­க­ளுக்­காக, நியா­ய­மான வரி அற­வீட்டு முறைக்­காக வாழ்நாள் பூரா­கவும் பேரா­டிய வர­லாற்றைக் கொண்­டவர் ஒரு­வரை நீங்கள் விரும்­பு­வ­தாக இருந்தால் தொழி­லா­ளர்­க­ளுக்­காக பெரு­ம­ளவில் குரல் கொடுத்து போல் ஸ் ரீட் மீது கடு­மை­யான ஒழுங்குவிதி­களைக் கொண்டுவர­வேண்­டு­மென்று வாதி­டு­கிற ஒரு­வரை நீங்கள் விரும்­பு­வ­தாக இருந்தால் நீங்கள் ஹிலாரி கிளின்­ட­னுக்­குத்தான் வாக்­க­ளிக்­க­வேண்டும்.

ஆபத்­தான ஒரு உலகில் உங்­க­ளையும் உங்கள் குடும்­பத்­தையும் பாது­காப்­பாக வைத்­தி­ருக்கப்போகின்­றவர் யார் என்­பதைப் பற்றி நீங்கள் அக்­க­றைப்­ப­டு­ப­வர்­க­ளாக இருந்தால் தெரிவு மேலும் தெளி­வா­வ­தாகும். ஹிலாரி கிளிண்டன் உலகம் பூரா­கவும் மதிக்­கப்­ப­டு­கிறார். நாடு­களின் தலை­வர்­க­ளினால் மாத்­தி­ர­மல்ல, அத்­த­லை­வர்கள் சேவை செய்­கின்ற மக்­க­ளி­னாலும் ஹிலாரி மதிக்­கப்­ப­டு­கின்றார். அமெ­ரிக்­கா­வுக்கு வெளியே வாழ்­கின்ற மக்கள் இந்தத் தேர்­தலில் என்ன நடக்கப்போகின்­றது என்­பதை புரிந்துகொள்­ள­வில்லை. நிச்­ச­ய­மாக புரிந்துகொள்­ள­வில்லை. ஏனென்றால் அவர்­க­ளுக்கு ஹிலா­ரியைத் தெரியும், அவ­ரது பணி­களை இவர்கள் கண்­டி­ருக்­கின்­றார்கள்.

எமது புல­னாய்வுக் குழுக்­க­ளுடன், எமது இராஜதந்­தி­ரி­க­ளுடன், எமது இரா­ணு­வத்­துடன் அவர் நெருக்­க­மாகப் பணி­யாற்­றி­யி­ருக்­கிறார். நிலை­வ­ரங்­களைப் பற்­றிய முறை­யான மதிப்­பீடும் அனு­ப­வமும் அவ­ருக்கு இருக்­கி­றது. பயங்­க­ர­வா­தத்­தி­ட­மி­ருந்து வரு­கின்ற அச்­சு­றுத்­தலைச் சந்­திப்­ப­தற்­கான உளப்­பாங்­கையும் அவர் கொண்­டி­ருக்­கிறார். இதெல்லாம் அவ­ருக்கு புதி­ய­வை­யல்ல. எமது துருப்­புக்கள் எந்­த­வித தயவு தாட்­சண்­யமும் இல்­லாமல் இஸ்­லா­மிய அரசை (ISIL) துவம்சம் செய்­தி­ருக்­கின்­றன.

அந்த அமைப்பின் தலை­வர்­களை ஒழித்துக் கட்­டி­யி­ருக்­கின்றன. பிராந்­தி­யங்­களை மீளக்­கைப்­பற்­றி­யி­ருக்­கின்­றன. இஸ்­லா­மிய அரசு நிர்­மூலம் செய்­யப்­படும் வரை ஹிலாரி ஓய­மாட்டார் என்­பது எனக்குத் தெரியும். அவர் இந்த காரி­யத்தை முடித்­து­வைப்பார். சித்­தி­ர­வ­தையை நாடாமல் அல்­லது எமது நாட்­டுக்குள் பிர­வே­சிப்­ப­தி­லி­ருந்து மதங்கள் முழு­வ­தையும் தடை செய்­யாமல் அவர் இஸ்­லா­மிய அரசை ஒழித்துக்கட்டும் பணியைச் செய்வார். ஹிலாரி தக்க திற­மை­யுடன் இருக்­கிறார். படை­களின் அடுத்த பிர­தம தள­ப­தி­யா­வ­தற்கு அவர் தயா­ரா­யி­ருக்­கிறார்.

அதே­வேளை டொனால்ட் ட்ரம்ப் எமது இரா­ணு­வத்தை ஒரு அனர்த்தம் என்று அழைக்­கிறார். உலகம் இது­கா­ல­வ­ரையில் அறிந்­தி­ருக்­கக்­கூ­டிய மிகவும் வல்­லமை பொருந்­திய போர்ப்­ப­டையில் இருக்­கின்ற ஆண்­க­ளையும் பெண்­க­ளையும் அவர் அறிந்­தி­ருக்க மாட்டார். அமெ­ரிக்கா பல­வீ­ன­மா­னது என்று அவர் கூறு­கிறார். சுதந்­தி­ரத்­தி­னதும் கௌர­வத்­தி­னதும் மனித உரி­மை­க­ளி­னதும் ஒளிவிளக்­காக அமெ­ரிக்­காவை இன்­னமும் நோக்­கு­கின்ற பால்டிக் பிராந்­தியம் தொடங்கி மியன்மார் வரை­யான கோடா­னு­கோடி ஆண்­க­ளி­னதும் பெண்­க­ளி­னதும் கருத்­துக்­களை இவர் கேட்­டி­ருக்­க­மாட்டார். அவர் புட்­டா­னுடன் சர­ச­மா­டு­கிறார். சதாம் ஹுசைனைப் பாராட்­டு­கிறார். எமது பாது­காப்புத் தேவை­யானால் எமக்கு பணம் செலுத்தவேண்­டு­மென்று 9/11க்குப் பிறகு எம்­மோடு உறு­து­ணை­யாக நின்ற எமது நோட்டோ நேச நாடு­களைப் பார்த்து அவர் கூறு­கிறார்.

அமெ­ரிக்­காவின் உறு­தி­மொ­ழிகள் விலைக்­கு­றைப்பு ஆண்­டுடன் வரு­வ­தில்லை. நாம் எமது கடப்­பா­டு­களை நிறை­வேற்­று­கிறோம். எமது பொறுப்­புக்­களை நாம் ஏற்றுக் கொள்­கிறோம். 8 வரு­டங்­க­ளுக்கு முன்னர் நான் ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்ற போது இருந்­த­தை­வி­டவும் கூடு­த­லான அள­வுக்கு வல்­ல­மையும் மதிப்பும் கொண்­ட­தாக அமெ­ரிக்கா இன்று அனே­க­மாக உலகில் உள்ள சகல நாடு­க­ளி­னாலும் நோக்­கப்­ப­டு­வ­தற்­கான கார­ணங்­களில் இது ஒன்­றாகும். அமெ­ரிக்கா ஏற்­கெ­னவே மகத்­தான தேச­மாக விளங்­கு­கி­றது. அமெ­ரிக்கா ஏற்­கெ­னவே பலம்­பொ­ருந்­தி­ய­தாக இருக்­கி­றது. எமது வல்­லமை, எமது மேன்மை நிச்­ச­ய­மாக டொனால்ட் ட்ரம்பின் மீது தங்­கி­யி­ருக்­க­வில்லை என்று கூறிக்கொள்ள விரும்­பு­கிறேன்.

உண்­மை­யி­லேயே, எமது வல்­ல­மையும் மேன்­மையும் எந்­த­வொரு நப­ரிலும் தங்­கி­யி­ருக்­க­வில்லை. அத்­துடன், இறு­தியில் ஜன­நா­ய­கத்தின் அர்த்­தமே இந்த தேர்­தலில் மிகப்­பெ­ரிய வேறு­பாட்டை வெளிக்­காட்டப் போகி­றது.

மலைக்­குன்று ஒன்றின் மீது அமைந்­தி­ருக்கும் மின்னும் நகரம் என்று றொனால்ட் றீகன் அமெ­ரிக்­காவை வர்­ணித்தார். ஆனால் டொனால்ட் ட்ரம்போ பிள­வு­பட்­டி­ருக்கும் குற்ற பிராந்­தியம் என்று அமெ­ரிக்­காவை அழைக்­கிறார். முன்­னைய தசாப்­தங்­களைப் போலன்றி, இப்­போது சட்­ட­வி­ரோத குடி­யேற்­றமும் குற்றச் செயல் வீதமும் மிகவும் குறை­வாக இருப்­பதைப் பற்றி அவ­ருக்கு அக்­க­றை­யில்லை. அது ஒரு வர­வேற்­கத்­தக்க போக்­காக அவ­ருக்குத் தெரி­ய­வில்லை.

ஏனென்றால், அந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு மெய்­யான தீர்வு எதையும் இவர் உண்­மையில் முன்­வைக்­க­வில்லை. அவர் வேறு­மனே சுலோ­கங்­க­ளையே முன்­வைக்­கிறார். அச்ச உணர்­வையே முன்­வைக்­கிறார். போது­மா­ன­ளவு எண்­ணிக்­கையில் மக்­களை அச்ச மூட்­டினால், இந்தத் தேர்­தலில் வெற்­றி­பெ­று­வ­தற்குப் போது­மான வாக்­குகள் தனக்குக் கிடைக்­கலாம் என்று அவர் பந்­தயம் பிடிக்­கிறார்.

அது டொனால்ட் ட்ரம்ப் தோல்வி காணப்­போ­கின்ற இன்­னொரு பந்­த­ய­மாகும். ஏனென்றால், அமெ­ரிக்க மக்­களை அவர் குறைத்து மதிப்­பி­டு­கிறார், நாம் ஒரு நொய்­தான மக்கள் அல்ல, பயந்­து­போ­யி­ருக்கும் மக்கள் அல்ல, தனது வழியில் காரி­யங்கள் செய்­யப்­படும் வரை தன்னால் மாத்­தி­ரமே ஒழுங்கை நிலை­நாட்டக் கூடி­ய­தாக இருக்­கு­மென்று உறுதி மொழி வழங்­கு­கின்ற மீட்பர் என்று தன்னைத் தானே பிர­க­டனம் செய்­கின்ற ஒரு­வ­ரி­ட­மி­ருந்து எமது வல்­லமை வர­வில்லை. நாம் ஆட்சி செய்­யப்­ப­டு­கின்­ற­வர்­க­ளாக தோற்­ற­ம­ளிக்­க­வில்லை. எத்­த­னையோ வரு­டங்­க­ளுக்கு முன்னர் பிலடெல்­பி­யாவில் செய்­யப்­பட்ட இறவாப் புகழ்­கொண்ட பிர­க­ட­னங்­களில் இருந்தே எமது வல்­ல­மையும் அதி­கா­ரமும் வரு­கி­றது. சகல மனி­தர்­களும் சம­மாகப் படைக்­கப்­பட்­ட­வர்கள், செம்­மை­யான ஒன்­றியம் ஒன்றை அமைக்­கக்­கூ­டிய மக்கள் நாம் என்ற உண்­மை­யி­லி­ருந்தே எமது அதி­காரம் பிறக்­கி­றது. நாம் அத்­த­கை­ய­வர்கள், அது எமது பிறப்­பு­ரிமை, எமது விதியை தீர்­மா­னிக்­கக்­கூ­டிய ஆற்றல் எமக்கு இருக்­கி­றது. இந்த ஆற்­றலே கொடுங்­கோண்­மைக்கு மேலாக புரட்­சியைத் தெரிவுசெய்­வ­தற்கு எமது தேச­பக்­தர்­களைத் தூண்­டி­யது. அதுவே வாக்­கு­ரி­மையைப் பெறு­வ­தற்­கான துணிச்­சலை எமது பெண்­க­ளுக்கு கொடுத்­தது. அதுவே தொழி­லா­ளர்கள் அணி­தி­ரண்டு கூட்டுப் பேரம் பேசி சிறந்த வேத­னங்­களைப் பெறு­வ­தற்­கான போராட்­டத்­துக்கு உத்­வே­கத்தைக் கொடுத்­தது.

எங்­க­ளுக்­காக தானே எல்­லா­வற்­றையும் செய்வார் என்று ஒரு நபர் கூறு­கின்ற ஒரு நாடாக அமெ­ரிக்கா ஒரு போதும் விளங்­கி­ய­தில்லை. நாமெல்­லோரும் ஒன்­றி­ணைந்து கடு­மை­யான உழைப்பின் ஊடாக சாதிப்­பதில் நம்­பிக்கை கொண்ட தேசமே அமெ­ரிக்கா. இறு­தியில் நாம் நிலை­பே­றான சுயாட்­சியைப் பெற்றுக் கொண்டோம். இதைத்தான் ஹிலாரி விளங்கிக் கொண்­டி­ருக்­கிறார். இது பன்­மு­கத்­தன்­மை­கொண்ட பெரி­ய­தொரு நாடு என்­பதை ஹிலாரி அறிவார்.

நாம் 100 வீதம் சரி­யா­ன­வர்­க­ளாக இருந்­தாலும் கூட காரி­யங்­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கு விட்டுக் கொடுப்­புக்கள் தேவை என்­பதை ஹிலாரி புரிந்து கொண்­டி­ருக்­கிறார். நாம் ஒரு­வரை மற்­றவர் கெடு­தி­யா­ன­வர்­க­ளாக நோக்கிக் கொண்­டி­ருப்­போ­மே­யானால் அந்த ஜன­நா­யகம் பய­ன­ளிக்க மாட்­டாது.

முன்­னேற்றம் ஏற்­ப­டு­வ­தற்கு நாம் ஒருவர் மற்­ற­வரின் கருத்­துக்­களைக் கேட்­ட­றிய வேண்­டி­யி­ருக்­கி­றது. எம்முன் ஒரு­வரை மற்­றவர் பார்க்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது. கோட்­பா­டு­க­ளுக்­காகப் போராட வேண்­டி­யி­ருக்­கி­றது என்­பதை ஹிலாரி அறிவார். ஆனால், அந்தப் போராட்டம் பொது நிலைப்­பாடு ஒன்றை எட்­டு­வ­தற்­கா­ன­தாக இருக்க வேண்டும். அந்த பொது நிலைப்­பாட்டை அடையும் முயற்­சிகள் சில சந்­தர்ப்­பங்­களில் எவ்­வ­ள­வுதான் நழுவிச் செல்­வ­தாகத் தோன்­றி­னாலும், நாம் தளர்­வ­டையக் கூடாது.

தங்­க­ளது மகன் வீட்­டை­விட்டு வெளியே செல்­கின்ற போது கறுப்­பின பெற்­றோ­ருக்கு ஏற்­ப­டு­கின்ற உணர்வு ஒரு துணிச்­ச­லான பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் தனது நீலச் சீரு­டையை அணிந்து கொண்டு கட­மைக்கு புறப்­பட்டுச் செல்­கின்ற போது அவரின் குடும்­பத்­த­வர்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்ற உணர்­வை­வி­டவும் பெரிதும் வித்­தி­யா­ச­மா­ன­தல்ல என்­பதை நாம் புரிந்து கொள்ளும் போது இந்த நாட்டில் இனப் பிள­வு­களின் ஊடாக எம்மால் பணி­யாற்ற முடியும் என்­பதை ஹிலாரி அறிவார். பொலிஸ்­கா­ரரைக் கௌர­விக்­கவும் ஒவ்­வொரு சமூ­கத்­தையும் நேர்­மை­யாக நடத்த முடியும் என்­பதை புரிந்து கொள்ளும் போது எம்மால் அதைச் செய்ய முடியும்.

பல தசாப்­தங்­க­ளாகப் புரை­யோ­டிப்­போ­யி­ருக்­கின்ற பிரச்­சினை புரிந்து ஏற்றுக் கொள்­வ­தனால் இன உற­வு­களை மோச­ம­டையச் செய்­ய­வில்லை. பதி­லாக நல்­லெண்­ண­மு­டைய மக்கள் ஒன்­றி­னைந்து நிலை­வ­ரத்தைச் சிறப்­பா­ன­தாக்­கு­வ­தற்­கான சாத்­தி­யப்­பாடு உரு­வா­கின்­றது என்­பதை ஹிலாரி அறிவார். கடு­மு­யற்­சி­யு­டைய மாண­வர்­க­ளையும் பாடு­பட்­டு­ழைக்­கின்ற அவர்­க­ளது பெற்­றோர்­க­ளையும் கிறி­மி­னல்­க­ளா­கவோ அல்­லது காமு­கர்­க­ளா­கவோ அன்றி எமது முதா­தையர் இந்த மண்­ணுக்கு வந்த அதே கார­ணத்­துக்­கா­கவே வந்­தி­ருக்கும் அன்­பான குடும்­பங்­க­ளாக இன்­னமும் பார்க்­கின்ற அதே­வேளை, சட்ட பூர்­வ­மா­னதும் ஒழுங்கு முறை­யா­ன­து­மான குடி­யேற்ற ஏற்­பாட்டை எம்மால் செய்­ய­மு­டியும் என்­பதை ஹிலாரி அறிவார். நாம் விரும்­பி­ய­வாறு பேசவும் வேலை செய்­யவும் படிக்­கவும் கூடிய இட­மொன்றில் சிறப்­பான வாழ்க்­கையை உரு­வாக்கிக் கொள்­வ­தற்­கா­கவே அவர்கள் வரு­கி­றார்கள் என்­பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்­க­ளது கனவும் அடிப்­ப­டையில் அமெ­ரிக்­க­னா­கவே என்­ப­தையும் அந்த அமெ­ரிக்கக் கனவு எந்த தலை­வ­ரி­னாலும் ஒரு போதும் மட்­டுப்­ப­டுத்த முடி­யா­தது என்­ப­தையும் ஹிலாரி அறிவார்.

இவைதான் ஹிலா­ரிக்கு தெரிந்த விட­யங்கள். இந்த ஜன­நா­யக அலு­வல்கள் மலைப்பைத் தரு­வ­தாக இருக்­கலாம். ஹிலா­ரியும் இதை அறிவார். எனக்குத் தெரியும். மறு­த­ரப்பு விட்டுக் கொடுப்பைச் செய்ய மறுக்கும் போது முன்­னேற்றம் தடைப்­ப­டு­கி­றது. செய­லின்­மை­களால் மக்கள் பாதிக்­கப்­ப­டு­கி­றார்கள். நாம் கடு­மை­யாக பாடு­ப­ட­வில்லை என்று ஆத­ர­வா­ளர்கள் பொறுமை இழந்து கவ­லைப்­ப­டவும் கூடும்.

ஆனால் நாம் செயலில் குறி­யாக இருப்­போ­மே­யானால் பொறு­மை­யா­ள­ருக்கு மனங்­களை மாற்றும் போது, போது­மான வாக்­கு­களை அளிக்கும் போது முன்­னேற்றம் இடம்­பெறும் என்று உங்­க­ளுக்கு நான் உறு­தி­ய­ளிக்­கிறேன். உங்­க­ளுக்கு சந்­தேகம் இருக்­கு­மானால் இன்று சுகா­தாரப் பரா­ம­ரிப்பைக் கொண்­டி­ருக்கும் மேல­தி­க­மான 2 கோடி மக்­க­ளிடம் போய்க் கேட்டுப் பாருங்கள்.

அமெ­ரிக்­காவில் ஜன­நா­யகம் தேர்தல் வரு­ட­மொன்றில் மாத்­தி­ர­மல்ல, அதற்கு இடைப்­பட்ட சகல நாட்­க­ளிலும் செயற்­ப­டு­கி­றது. எமது பொரு­ளா­தா­ரத்தில் அதிகப் பெரு­ம­ள­வுக்கு ஏற்றத் தாழ்வு இருக்­கி­ற­தென்று நீங்கள் இணங்கிக் கொண்டால், எமது அர­சி­யலில் பெரு­ம­ளவு பணம் சம்­பந்­தப்­ப­டு­கி­ற­தென்று கரு­து­வ­தானால், இந்தத் தேர்­தலின் போது பேர்ணி காண்­டோர்ஸின் ஆத­ர­வா­ளர்கள் செய்து வந்­தி­ருப்­பதைப் போன்று வெளிப்­ப­டை­யாகக் கருத்­துக்­களைக் கூறி உறு­தி­யான நிலைப்­பாட்டை வெளிக்­காட்ட வேண்டும். நாமெல்­லோரும் வெளியே வந்து ஜன­நா­யகக் கட்­சிக்­கா­ரர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அவ்­வாறு செய்தால் காரி­யங்கள் நிறை­வேற்­றப்­படும் வரை அவர்­களை பொறுப்­புக்­கூற வேண்­டிய கடப்­பாட்­டுக்கு உட்­ப­டுத்த முடியும்.

நீதி முறை­மையில் கூடு­த­லான அள­வுக்கு நீதி வேண்­டு­மென்று நீங்கள் விரும்­பினால் எல்­லோரும் வாக்­க­ளிக்க வேண்டும். வாக்கு வெறு­மனே ஒரு ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­வ­தற்­கல்ல, மேயர்­களை, ஷெரிவ்­களை மாநில அட்­டோர்­னி­களை, மாநில சட்­ட­சபை உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்­வ­தற்­கா­ன­தா­கவும் இருக்க வேண்டும். மாநில சட்­ட­ச­பை­களில் தான் கிறி­மினல் சட்­டங்கள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன. சட்­டமும் நடை­மு­றை­களும் மாற்­றப்­படும் வரை நாம் பொலி­ஸா­ரு­டனும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளு­டனும் சேர்ந்து பணி­யாற்ற வேண்­டி­ருக்­கி­றது. அவ்­வாறு தான் ஜன­நா­யகம் செயற்­ப­டு­கி­றது. கால நிலை­மாற்­றத்தை எதிர்த்துப் போராட நீங்கள் விரும்­பினால், கல்­லூரி வளா­கங்­களில் உள்ள இளைஞர் யுவ­தி­க­ளுடன் மாத்­தி­ர­மல்ல, தனது குடும்­பத்தைப் பரா­ம­ரிப்­பதைப் பற்றி கவ­லைப்­ப­டு­கின்ற நிலக்­கரி சுரங்கத் தொழி­லா­ளி­யு­டனும் எரி­வாயு விலை குறித்து காவ­லைப்­ப­டு­கின்ற ஒவ்­வொரு தாய்­மா­ரு­டனும் சேர்ந்து பணி­யாற்ற வேண்­டி­யி­ருக்கும்.

எங்­க­ளது குழந்­தை­க­ளையும் எமது பொலிஸ்­கா­ரர்­க­ளையும் துப்­பாக்கி வன்­மு­றையில் இருந்து பாது­காக்க நீங்கள் விரும்­பினால் , துப்­பாக்கி உரி­மை­யா­ளர்கள் மற்றும் துப்­பாக்கி ஆத­ர­வுக்­கு­ழுக்கள் உட்­பட பரந்த பெரும் பான்­மை­யான அமெ­ரிக்­கர்­க­ளுடன் சேர்ந்து பணி­யாற்ற வேண்டும். அவ்­வாறு தான் மாற்­றங்கள் நிகழ்­கின்­றன.

ஹிலாரி மீதான விமர்­சனம்

ஹிலா­ரியை விமர்­சனம் செய்­ப­வர்கள் பலர் இருக்­கி­றார்கள். வல­து­சா­ரி­க­ளி­னாலும் இட­து­சா­ரி­களில் சில­ரி­னாலும் அவர் கேலிக்­குள்­ளாக்­கப்­ப­டு­கிறார். கற்­பனை செய்­து­பார்க்­கப்­ப­டு­கின்ற ஒவ்­வொன்­றுக்­கா­கவும் கற்­பனை செய்து பார்க்க முடி­யாத சில­வற்­றுக்­கா­கவும் அவர் மீது குற்றம் சாட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. 40 வரு­டங்­க­ளாக உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­படும் போது என்ன நேரு­கி­றது என்­பதை ஹிலாரி அறிவார். நான் செய்­ததைப் போன்று நாமெல்­லோரும் செய்­ததைப் போன்று இந்த 40 வரு­ட­கால கட்­டத்தில் சில சந்­தர்ப்­பங்­களில் தான் தவ­று­களை இழைத்­ததை அவர் அறிவார். நாம் செயலில் இறங்கும் போது, முயற்­சி­களை முன்­னெ­டுக்கும் போது நேரு­வது இதுவே ரெடி ருஸ்வெல்ற் ஒரு தடவை வர்­ணித்­ததைப் போன்று ஓர­மாக நின்று கண்­டன விமர்­சனம் செய்­கின்ற பயந்­தாங்­கொள்­ளி­யாக இல்­லாமல், களத்தில் நின்று துணிச்­ச­லுடன் செயற்­ப­டு­கின்­ற­போது தவ­றி­ழைக்­கின்ற அதே­வேளை, இறு­தியில் பெரு­பேற்­றினைச் சாதிப்­பதில் நம்­பிக்­கையைக் கொண்ட பிர­ஜை­யாக நீங்கள் இருப்­பீர்­க­ளானால், அவ்­வாறு நேரவே செய்யும்.

களத்தில் அவ்­வாறு நிற்­கின்ற ஒரு பெண்­ம­ணிதான் ஹிலாரி, எல்லா வேளை­க­ளிலும் நாம் கவ­னிக்­கா­விட்­டாலும் கூட, அவர் எமக்­கா­கவே குரல் கொடுத்து பாடு­பட்டு வந்­தி­ருக்­கிறார். எமது ஜன­நா­ய­கத்தைப் பற்றி நீங்கள் அக்­க­றை­யு­டை­ய­வர்­க­ளாக இருக்­கின்­றீர்கள் என்றால், ஒவ்­வொரு பிரச்­சி­னை­யிலும் உங்­க­ளு­டை­ய­தை­யொத்த நிலைப்­பா­டு­களைக் கொண்­ட­வ­ராக இவர் இல்­லா­ம­லி­ருக்­கலாம் என்­ப­தற்­காக நீங்கள் வீட்­டுக்­குள்­ளேயே முடங்­கி­யி­ருந்­து­விட முடி­யாது. அவ­ருடன் நீங்­களும் களத்தில் இறங்க வேண்டும். ஏனென்றால் ஜன­நா­யகம் என்­பது பார்­வை­யா­ளர்­களின் ஒரு விளை­யாட்டு அல்ல. ‘ஆம் அவர் செய்வார்’ என்­பதைப் பற்­றி­ய­தல்ல அமெ­ரிக்கா. ‘ஆம் எம்மால் முடியும்’ என்­பதைப் பற்­றி­யதே அமெ­ரிக்கா. இந்த வருட இலை­யு­திர்­கா­லத்தில் ஹிலா­ரியை நாம் வெற்­றிக்கு அழைத்துச் செல்லப் போகிறோம். ஏனென்றால் எம்­மி­ட­மி­ருந்து அத்­த­கைய பணி­யையே இன்­றைய தருணம் வேண்டி நிற்­கி­றது.

தற்­போ­தைய பிர­சா­ரங்­களின் போது அமெ­ரிக்கா இழந்­த­வைப்­பற்றி பெரு­ம­ள­வுக்கு பேசப்­பட்­டி­ருக்­கி­றது. பொல்­லாத மாற்­றங்­க­ளி­னாலும் எமது கட்­டுப்­பாட்­டுக்கு அப்­பாற்­பட்ட இருண்ட சக்­தி­க­ளி­னாலும் எமது வாழ்க்கை முறை மலி­னப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்று எமக்கு ஆட்கள் கூறு­கி­றார்கள். ‘உண்­மை­யான அமெ­ரிக்கா ஒன்று இருக்­கி­றது. அதை மீள நிலை­நி­றுத்த வேண்டும் என்று அவர்கள் வாக்­கா­ளர்­க­ளுக்குக் கூறு­கி­றார்கள்.

சொல்­லப்­போனால் இது டொனால்ட் ட்ரம்ப்­புடன் ஆரம்­பித்த சிந்­த­னை­யல்ல. மிகவும் நீண்­ட­கா­ல­மா­கவே எமது குடி­ய­ரசின் தொடக்­கத்தில் இருந்­தது என்று கூடச் சொல்­லலாம். இந்தச் சிந்­தனை அர­சி­யல்­வா­திகள் வெளிக்­காட்டி வந்­தி­ருக்­கி­றார்கள். இது 12 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இத்­த­கை­ய­தொரு இரவில் உங்­க­ளுக்கு நான் கூறிய கதையை எனக்கு நினை­வு­ப­டுத்­து­கி­றது. அது எனது தன்சாஸ் பாட்டன் பாட்­டியைப் பற்­றியும் நான் வளர்ந்து கொண்­டி­ருந்­த­போது அவர்கள் எனக்கு போதித்த விட­யங்­க­ளையும் பற்­றி­யது.

எனது பாட்­டனும் பாட்­டியும் நாட்டின் முக்­கி­ய­மான பகு­தியில் இருந்து வந்­த­வர்கள். அவர்­க­ளது மூதா­தை­யர்கள் சுமார் 200 வரு­டங்­க­ளுக்கு முன்னர் அங்கு குடி­யேற ஆரம்­பித்­தார்கள். இவர்­க­ளிடம் அவர்­களின் பிறப்பு அத்­தாட்சிப் பத்­தி­ரங்கள் இருந்­த­னவா என்று எனக்குத் தெரி­யாது. ஆனால் அவர்கள் அங்கே வாழ்ந்­தார்கள். அவர்கள் பெரும்­பாலும் ஸ்கொட் ஐரிஷ் வம்­சா­வ­ளியைச் சேர்ந்­த­வர்கள். விவ­சா­யிகள், ஆசி­ரி­யர்கள், மருந்­தா­ளர்கள், எண்ணெய் அகழ்வுத் தொழி­லா­ளர்கள், கால்­நடைப் பண்­ணை­யா­ளர்கள், கஷ்­ட­மான சூழ்­நி­லை­களில் வாழ்ந்த சிறு நக­ர­வா­சிகள், அவர்­களில் சிலர் ஜன­நா­யகக் கட்­சி­யினர். அவர்­களில் பலர் பெரும்­பா­லா­ன­வர்கள் என்றும் கூடச் சொல்­லலாம் குடி­ய­ரசுக் கட்­சிக்­கா­ரர்கள். லிங்­கனின் கட்­சியைச் சேர்ந்­த­வர்கள் அந்தப் பகு­தி­களில் வாழ்ந்த மக்கள் பகடு காட்­டு­வதை விரும்­பா­த­வர்கள். பூம்பம் ஜம்பம் அடிப்­ப­வர்­களை அல்­லது அடா­வ­டித்­த­ன­மா­ன­வர்­களை விரும்­பா­த­வர்கள் என்று எனது பாட்­டனும் பாட்­டியும் எனக்கு கூறி­னார்கள். அற்ப புத்­தி­யு­டை­ய­வர்­களை அல்­லது வாழ்வில் எப்­போ­துமே குறுக்கு வழியை நாடி­ய­வர்­களை அவர்கள் மதிக்­க­வில்லை. பதி­லாக நேர்மை, கடும் உழைப்பு, இரக்கம், கண்­ணியம், எளிமை, தன்­ன­டக்கம், பொறுப்­பு­ணர்வு போன்ற குணா­தி­ச­யங்­க­ளையே அவர்கள் பெரி­தாக மதித்­தார்கள். மற்­ற­வர்­க­ளுக்கு தாங்­க­ளா­கவே முன்­வந்து உத­வு­ப­வர்­க­ளாக இருந்­தார்கள்.

அத்­த­கைய குணா­தி­ச­யங்­களில் தான் இவர்கள் நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளாக வாழ்ந்­தார்கள். எமது குழந்­தை­க­ளுக்கு இவற்றை போதிக்­கவே நாம் முயற்­சிக்­கின்றோம்.

இந்தக் குணா­தி­ச­யங்­களும் விழு­மி­யங்­களும் கன்­சா­ஸுக்கு மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக இருக்­க­வில்லை என்­பதை எனது பாட்டன், பாட்டி விளங்கிக் கொண்­டார்கள். அந்தப் பழக்க வழக்­கங்கள் சிறிய நக­ரங்­க­ளுக்கு மாத்­திரம் மட்­டுப்­பட்­டி­ருக்­க­வில்லை. இவை ஹவா­னாயும் சென்­ற­டைய முடியும். உலகின் ஏனைய பகு­தி­க­ளுக்கும் கூட இவை சென்­ற­டைய முடியும். சென்­ற­டை­யக்­கூ­டி­ய­தாக இருந்­தது. இந்தப் பண்­பு­க­ளை­யெல்லாம் பிர­யோ­கித்­துத்தான் எனது தாயார் அமெ­ரிக்­கா­வுக்கு வெளியே வறிய பெண்­களின் வாழ்வை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக தன்னை அர்ப்­ப­ணித்தார். ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­ப­தையும் கென்ய தந்­தைக்குப் பிறந்த தங்கள் பேரன் ஒரு­வ­னுக்கும் ஆசி­ரியர் ஒரு­வ­ருக்கும் பிறந்த தங்­க­ளது பேத்தி ஒரு­வ­ருக்கும் கொடுக்­கப்­படக் கூடி­யவை என்­ப­தையும் எனது பாட்­டனும் பாட்­டியும் தெரிந்­தி­ருந்­தார்கள். இதே பண்­பு­களைத் தான் அடி­மை­களின் வழித்­தோன்­றல்­க­ளான மிச்­சேலின் (மனைவி) பெற்­றோரும் சிக்­கா­கோவின் தென்­ப­கு­தியில் பங்­களா ஒன்றில் வாழ்ந்த தங்கள் சொந்தக் குழந்­தை­க­ளுக்கும் போதித்­தார்கள். இந்தப் பண்­புகள் தான் குடி­யேற்­ற­வா­சி­களை இங்கு வரச் செய்­தது என்­பதை அவர்கள் அறிந்­தி­ருந்­தார்கள். அந்தக் குடி­யேற்­ற­வா­சி­களின் பிள்­ளைகள் கௌபோய் தொப்­பியை, பேஸ்போல் தொப்­பியை அல்­லது முக்­காடை அணிந்­தி­ருந்­தாலும் தங்­க­ளது சொந்தப் பிள்­ளைகள் போன்று அமெ­ரிக்­கர்­களே என்று அவர்கள் நம்­பி­னார்கள்.

காலப்­போக்கில் அமெ­ரிக்கா மாற்­ற­ம­டைந்­து­விட்­டது. ஆனால் எனது பாட்­டனும் பாட்­டியும் எனக்குப் போதித்த இந்தப் பண்பு விழு­மி­யங்கள் எங்­குமே போய்­வி­ட­வில்லை. அவை என்றும் போலவே வலி­மை­யு­டை­ய­வை­யாக இருக்­கின்­றன. ஒவ்­வொரு கட்­சி­யையும் ஒவ்­வொரு இனத்­தையும் ஒவ்­வொரு மதத்­தையும் சேர்ந்த மக்­க­ளினால் அவை இன்­னமும் போற்­றப்­ப­டு­கின்­றன. எங்கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­குள்ளும் இவை வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. எங்­களை அமெ­ரிக்­கர்­க­ளாக்­கி­யது எதுவோ? எம்மைத் தேச பக்­தர்­க­ளாக்­கி­யது எதுவோ? அதுவே முக்­கி­ய­மா­ன­தாகும். அதன் கார­ணத்­தி­னால்தான் ஏனைய நாடு­களின் உணவு வகை­க­ளையும் இசை­யையும் வாழ்க்கை முறை­க­ளையும் எடுத்துக் கலந்து எமக்­கான தனித்­து­வ­மு­டை­ய­வை­யாக ஆக்கக் கூடி­ய­தாக இருக்­கி­றது. அதன் கார­ணத்­தி­னால்தான் இங்கு புதிய தொழிற்­சா­லை­களை நிர்­மா­ணிப்­ப­தற்கும் புதிய தொழில்­து­றை­களை உரு­வாக்­கு­வ­தற்கும் உலகம் பூரா­வு­மி­ருந்து தொழில் முயற்­சி­யுள்­ள­வர்­களை எம்மால் கவர்ந்­தி­ழுக்கக் கூடி­ய­தாக இருக்­கி­றது. அதன் கார­ணத்­தி­னால்தான் எமது பண்பு விழு­மி­யங்­களை அச்­சு­றுத்­து­கி­ற­வர்கள் பாசி­ஸ­வா­தி­க­ளாக அல்­லது கம்­யூ­னிஸ்­க­ளாக அல்­லது ஜிஹா­தி­க­ளாக அல்­லது மக்­களின் உணர்­வினைத் தூண்­டி­வி­டு­கிற உள்­நாட்டு அர­சி­யல்­வா­தி­க­ளாக இருந்­து­மென்ன இறு­தியில் எப்­போ­துமே தோல்­வியைத் தழு­வு­வார்கள்.

அதுதான் அமெ­ரிக்கா. அதுதான் அமெ­ரிக்கா. அந்த நேசப் பிணைப்­புகள், பொது நம்­பிக்­கைகள் என்றும் எம்­முடன் உள்­ளன. எதிர்­கா­லத்­துக்­காக நாம் அஞ்­ச­வில்லை. ஒரு மக்­க­ளாக இன்­றி­ருப்­ப­தைக்­காட்­டிலும் ஒன்­றி­ணைந்து மேலும் பலர் பொருந்­தி­ய­வர்­க­ளாக எதிர்­கா­லத்தை செம்­மை­யாக கட்­ட­மைப்போம். அதையே ஹிலாரி விளங்கிக் கொண்­டுள்ளார். ஹிலாரி என்ற இந்தப் போராளி, இந்த அர­சி­யல்­ஞானி, இந்தத் தாய், இந்த பாட்டி, இந்தக் குடி­ய­ரசின் சேவகி, இந்த தேசபக்தை அத்தகைய அமெரிக்கா ஒன்றுக்காகவே போராடிக் கொண்டிருக்கிறார்.

அதன் காரணத்தினால்தான் இன்றிரவு இந்த மேடையை விட்டு இறங்கும் போது ஜனநாயகக் கட்சி நல்ல கைகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறேன். இந்தப் பதவியில் எனது காலத்தில் எல்லாவற்றையும் நாம் நிறைவேற்றி முடிக்கவில்லை. நான் ஏற்கனவே செய்ததைப் போன்று இன்னும் பல காரியங்களைச் செய்ய விரும்புகிறேன். நான் கடுமையான பாடங்களைப் படிக்க வேண்டியிருந்த வேளைகளில் எல்லாம், தவறுகளை நான் இழைத்த இடங்களில் எல்லாம் எனக்கு தெம்பூட்டியவர்கள் அமெரிக்க மக்களாகிய நீங்களே. அதை நான் ஹிலாரிக்கு கூறியிருக்கின்றேன்.

புற்றுநோயினால் இரு தடவைகள் சகலதையும் இழந்து உயிர் தப்பிய ஒஹியோ வாசியிடமிருந்து எனக்கு வந்த கடிதம் ஒன்று எனது சுவரில் தொங்கிக் கொண்டிருக்கிறது. முயற்சி தோல்வியடைவதாகத் தோன்றினாலும் கூட சுகாதாரப் பராமரிப்பு சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று அக்கடிதமே என்னை வலியுறுத்தியது.

நியூ டவுனில் எம்மிடமிருந்து பறிக்கப்பட்ட 7 வயதுச் சிறுமியினால் வரையப்பட்ட ஓவியம் இன்று எனது தனிப்பட்ட அலுவலகத்தின் சுவரில் தொங்கிக் கொண்டிக்கிறது. பெரிய கண்களையும் நீலச் சிரசினையும் கொண்ட பச்சை நிற ஆந்தையொன்றின் அந்த ஓவியத்தை அந்தச் சிறுமியின் பெற்றோரே எனக்குத் தந்தனர். அந்த ஓவியமே நான் எனது கடமையை மறந்துவிடக் கூடாது என்று நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. தங்களது சோகத்தை செயலாக மாற்றிய சகல பெற்றோர்களையும் எனக்கு அந்த ஓவியம் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

பொருளாதார மந்த நிலைக்காலத்தில் தனது தொழிலாளர்களில் எவரையுமே வேலை நீக்கம் செய்யக்கூடாது என்பதற்காக தனது சொந்த சம்பளத்தின் பெரும் பகுதியையே குறைப்புச் செய்த சிறிய ரக தொழிற்சாலை உரிமையாளர் ஒருவர் கொலராடோவில் இருந்தார். தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வது அமெரிக்காவின் உணர்வுக்கு ஏற்புடையதாக இருக்காது என்று அவர் கூறினார். என்னுடன் எந்த விவகாரத்திலும் இணங்கிப் போகாத டக்சாஸ் பழமைவாதியொருவர் நான் நல்லதொரு தந்தையாக இருப்பதற்கு முயற்சி செய்வதற்காக என்னைப் பாராட்டினார்.

ஆப்கானிஸ்தான் போர்க்களத்தில் அனேகமாக இறந்து போய்விட்டதாகக் கருதப்பட்ட அரிசோனாவைச் சேர்ந்த இளம் படை வீரர் ஒருவர் மீண்டும் பேசவும் நடக்கவும் கற்றுக்கொண்டு வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தின் கதவின் ஊடாக என்னுடன் கைலாகு கொடுத்து வணக்கம் செலுத்துவதற்காக வந்தபோது வெளிக்காட்டிய துணிச்சல் எண்ணில் மறக்க முடியாதது.

சிறப்பானதொரு எதிர்காலத்துக்காக இந்த நாட்டை மாற்றியமைக்க முடியுமென்று நம்பிய ஒவ்வொரு அமெரிக்கருமே மாற்றத்தை சாத்தியமாக்கினார்கள். அரசியலில் ஒருபோதுமே ஈடுபடாத உங்களில் பலர் தொலைபேசிகளை எடுத்துக்கொண்டு வீதிகளில் பிரமிக்கத்தக்க முறைகளில் (அவை எனக்கு உண்மையில் விளங்கவில்லை) இன்டர்நெட்டைப் பாவித்தீர்கள். நீங்கள் தான் இந்தக் கிரகத்திலே சிறந்த அமைப்பாளர்கள். நீங்கள் சாத்தியமாக்கிய மாற்றங்கள் சகலதையும் குறித்து நான் பெருமைப்படுகின்றேன்.

அடிக்கடி நீங்கள் எனக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறீர்கள். சில வேளைகளில் நானும் உங்களுக்கு உற்சாகத்தைத் தந்திருப்பதாக நம்புகிறேன்.

எனக்காக முன்னர் நீங்கள் செய்ததை இப்போது ஹிலாரிக்காகச் செய்யுங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். என்னை அழைத்துச் சென்றதைப் போன்று அவரையும் அழைத்துச் செல்லுமாறு உங்களைக் கேட்கிறேன். ஏனென்றால் 12 வருடங்களுக்கு முன்னர் நம்பிக்கையைப் பற்றி நான் பேசியபோது உங்களைப் பற்றித்தான் பேசினேன். நெருக்கடிகள், பெரியவையாக இருந்த போதிலும்கூட, பாதை நீண்டதாக இருந்தபோதிலும் கூட எமது எதிர்காலத்தின் மீது அசையாத நம்பிக்கையை வைப்பதற்கு எனக்கு உந்துசக்தியாக இருந்தவர்கள் நீங்களே! கஷ்டத்துக்கு முன்னால் நம்பிக்கை. நிச்சயமற்ற தன்மைக்கு முன்னால் நம்பிக்கை. துணிச்சலுடனான நம்பிக்கை.

அமெரிக்கர்களே கடந்த 8 வருடங்களிலும் வெளிக்காட்டப்பட்ட நம்பிக்கையை நீங்கள் நிரூபித்துக்காட்டியிருக்கிறீர்கள்.

பொறுப்பைக் கையளித்து விட்டு தனிப்பட்ட பிரஜை என்ற வகையில் எனது பங்கைச் செய்வதற்கு இப்போது நான் தயாராகிறேன். எனவே இந்த வருடத்தில் இந்தத் தேர்தலில் என்னுடன் இணைந்து கொள்ளுமாறு உங்களைக் கேட்கிறேன். அவ நம்பிக்கையை பீதியை நிராகரித்து ஹிலாரி கிளிண்டனை அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதற்கு எங்களுக்குள் இருக்கக்கூடிய சிறப்பான குணாதிசயங்கள் சகலதையும் வரவழைத்துக் கொள்ளுங்கள் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன். இந்த மகத்தான தேசத்தின் உள்ளார்ந்த ஆற்றல் மீது நாம் இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம் என்பதை உலகிற்குக் காட்டுவோம். வியப்பான இந்த பயணத்துக்காக உங்களுக்கு நன்றி. தொடர்ந்து முன்செல்வோம். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக! அமெரிக்காவை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக


Related News

 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும்
 • நான்கு தமிழர்கள் டொரோண்டோ ,மார்க்கம் கல்விச்சபைகளில் வெற்றி
 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *