லக்சுமி: நான்கு படைப்புகளும் ஒரு கேள்வியும்!

காக்கைச் சிறகினிலே Kaakkai Cirakinile இதழில் வெளியான எனது கட்டுரை ஒன்று. லக்சுமி குறும்படத்துடன் சேர்த்து நான்கு திரைப்படங்களை வைத்து ஒரு ஒப்புநோக்கு. இந்த கட்டுரை பற்றி தியடோர் பாஸ்கரன் அவர்கள் ”கவிதா லட்சுமி எழுதிய கட்டுரை படித்தேன். இந்தக்குறும்படம் பற்றி நான் படித்த கட்டுரைகளிலெல்லாம் சிறந்தது இது. கருத்துக்களும் எழுத்தும் தீர்க்கமாக இருக்கின்றன படத்தை சினிமா ரீதியாக அலசியுள்ளார்.”என காக்கை இதழுக்கு எழுதியுள்ளார். ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எச்சரிக்கை: மிகநீண்ட கட்டுரை)

Kavitha Laxmi

 

The Bridges of madison county (1995) என்ற முழுநீளத்திரைப்படம் (நாவல் 1992) அவசரமாகக் குறும்படமாக்கப்பட்டு இருப்பதுதான் லக்சுமி. இரு படங்களுமே ஒரு விடயத்தைத்தான் பேசுகின்றன. இவ்விரு படங்களுக்கும் கால இடைவெளி 22- 25 வருடங்கள். வேண்டுமானால் Roman Holiday (1953) என்ற நகைச்சுவைப்படத்தையும் பார்த்துவிடுங்கள். Roman Holiday பேசுவதும் இதே விடயம்தான். அதுவும் போதவில்லை என்றால் இப்சனின் பொம்மைவீடு அரங்கநாடக எழுத்தையாவது படித்துப்பாருங்கள். மேற்குறிப்பிட்ட படைப்புகளையும் லக்சுமியையும் வைத்து நான் புரிந்துகொண்டவற்றின் ஒரு பதிவுதான் இது.

நாளாந்த வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து விடுபட்டு புதியதொன்றை அனுபவித்துவிடும் மனோநிலை, இதுதான் இவற்றின் உட்பொருள். ஆனால் இவைகளைக் காட்சிபூர்வமாக வெளிப்படுத்தும் விதத்தில்தான் இந்த நான்கு படைப்புகளும் தம்மளவில் வேறுபடுகின்றன.

மேற்கூறிய படைப்புகளின் பேசுபொருள் சாதாரணமாக எல்லாத் தரப்பினரிடமும் யதார்த்தமாக இருக்கக்கூடிய ஒரு உள இயல்புதான். எல்லா தரப்பும் என்று நான் சொல்வது, பால், வர்க்க, சமூக, பொருளாதார, புவியியல் வேறுபாடுகளைத் தாண்டி, இன்னும் சொல்லப்போனால் காலவேறுபாடு தாண்டி இருந்த, இருக்கப்போகிற சமூக வாழ்வியல் மற்றும் மனித உளவியல் சார்ந்த யதார்த்தம்.

எமது சமூகத்திடம் ‘லட்சுமி” இத்தனை பரபரப்பாகப் பேசப்படுவதற்கும், விவாதிக்க, கேலி செய்ய, விமர்சிக்க, ஆதரிக்க என் பல தரப்புகளின் கருத்துக்கள் வருவதற்கும் காரணம் இத்தனை காலமும் தமிழ் திரையுலகு எடுத்துக்கொண்டு வராத ஒரு விடயத்தை லக்சுமி பேசியிருப்பதுதான். எமது கலைமரபில் எதுவாகினும் இலட்சியப்படுத்திச் செய்வதுதான் ஆழப்பதிந்த மரபாக இருந்திருக்கிறது. இந்த மரபை எடுத்துக்கொள்ளாமல் இது தன்னளவில் வேறுபடுகின்றமை இது சர்ச்சைக்கரியதாகியிருப்பதற்கான காரணமாய் அமைகிறது.

காதல் உணர்வோ, காம உணர்வோ காலத்தால் வெறும் தூக்கம் வரவழைக்கும் மாத்திரையாக மாறிப்போவது ஒருதுணை மணவாழ்க்கையின் துயரம். அந்தத்துயரை அதே சலிப்போடு காட்டியிருப்பதும், நடித்திருப்பதும், இசையமைத்திப்பதும் நன்று. ‘புனித மற்றும் ஒழுக்க’ அடையங்களைக் கொடுத்துவைத்திருக்கும், பெண்ணுடலும் பெண்மையும் எதிர்வினையாற்றிவிடும் நிகழ்வு யதார்த்தமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது, காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மற்றபடி எந்த வகையில் பார்த்தாலும் மேலோட்டமாகவே கதை நகர்ந்து முடிகிறது. எந்த ஒரு பாத்திரமும் காத்திரமாகவோ, ஒரு இலட்சியப் பாத்திரமாகவோ இங்கு காட்டப்படவில்லை (காட்டப்பட வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ன?). சாதாரண மனிதர்களின் வாழ்வை மேலோட்டமாகப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்தப் படத்தையும் பார்க்கமுடிகிறது.

முதலில் இந்தக் கதையில் கணவன், காதலன், கதாநாயகி என அனைவரது குணாதிசயங்களையும் சற்றுத்தள்ளிவிட்டுப் பார்ப்போம். மிகநல்லவர்களாகக் காட்டப்படாத இவர்கள் அனைவரும் நல்லவர் என்ற கோணத்தில் வைத்துக்கொண்டு நாம் பார்த்தாலும், இந்தப்படத்தின் மையக்கரு எங்கே போகிறதென்றால் தனது உடலை ஒருநேரத்தில் வேறொருவனுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதாகிவிடுகிறது. அதைப்பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்பதையே லட்சுமி சொல்கிறதாக உணர்கிறேன். இந்தக் கண்ணோட்டத்தில்; பார்க்கப்போனால் லட்சுமி படத்தைக் குறைத்துமதிப்பிடவோ, திட்டவோ என்ன இருக்கிறது? முக்கியமான ஒரு விடயத்தை வெகுயதார்த்தமாக இந்தச் சமூகத்திற்கு சொல்லிவிட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஆனால் வேறு சில விடயங்களில் எனக்குச் சில ஒவ்வாமைகள் இருக்கின்றன.

திரைக்கதையில் வழமைக்கு மாறாக நிகழ்காலத்தை, அவர்களுடைய மணவாழ்வை கறுப்புவெள்ளையிலும், முன்கதையையும், புதுஉறவையும் நிறம்பூசியும் காட்டியிருக்கின்றனர் என்பதைக் கவனிக்க. இதை கவனித்தால் ஒரு பெண்ணிடம் இருந்து கணவனுக்கு வரும் தொலைபேசி அழைப்பு கதிர் என்ற நபரைச் சந்தித்த பின்பே நடக்கும் சம்பவம் என்பதையும் அறிந்து கொள்ளவேண்டும். ”தினமும் வேலைக்குப் போயிட்டு….. வீட்டுக்கு வந்து ஆயிரம் தடவை சுத்திற ஒரு கிரைன்டர் மாதிரி ஒரு அலுப்பான வாழ்க்கையை வாழ்ந்தா யாருக்குத்தான் தப்பு பண்ணனும் என்று தோன்றாது…” என்று தமக்கு நடந்ததை ஒரு மீள்ப்பார்வையாக வைக்கிறார் லக்சுமி.

திரைப்படங்களில் யார் எதைப் பார்க்கிறார்களோ இல்லையோ, திரையில் பாவிக்கப்படும் சொற்கள் சரியான முறையில் பாவிக்கப்படவில்லை என்று தோன்றினால் அது என்னை தொந்தரவு செய்யத் தொடங்கிவிடும். இங்கு என்னைத் தொந்தரவு செய்வது ”தப்பு” என்ற சொல். அதை அப்படித்தான் நாம் பார்க்கிறோம் என்றாலும், இந்த சொல்லை வேறு ஒரு சொல்லால் மாற்றியிருக்கலாமோ என்றே தோன்றுகிறது.

தப்பு என்பது என்ன? சொந்தமில்லாதவனோடு காமம் தேடுவதா? அல்லது காதல்வயப்படுவதா? இங்கே இந்தப் பெண்ணுக்குக் கிடைத்தது காதலா? காமமா? நடுத்தர வர்க்கத்தின் உணர்வுகளும் இன்றைய நியதிகளும் பற்றிச் சிந்திக்கும் ஆற்றல் உள்ள பெண்ணிடமிருந்து ”யாருக்குத்தான் கொஞ்சமாவது வாழணும் என்று தோன்றாது” என்ற சிந்தனை எழுவதற்குரிய வாய்ப்புகள் இல்லையா? வாழ்தல் என்பதை காமம் என்ற அர்த்தத்தில் நான் பேசவில்லை. இந்த வித்தியாசத்தை உணர மேற்குறிப்பிட்ட மூன்று படைப்புகளையும் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். ஒருவேளை ஆழமான நேசத்தைக் கொண்டிராத அந்த ஒருநாள் நிகழ்வு என்பதுதான் ”தப்பு” என்ற வார்த்தைப்பிரயோகத்தை பாவிக்கத் துண்டியதா? ஆனாலும் இந்த வார்த்தையை கீழே போடப்பட்ட ஆங்கில மொழியாக்கம் ”who wouldn’t want a break from it” ஓரளவு சரியாகவே கையாண்டிருக்கிறது.

இதை மற்றைய படங்கள் எப்படிக்கையாண்டிருக்கின்றன என்பதில் மலையளவு வேறுபாடு உண்டு. அதனால் என் கருத்தின்படி லக்சுமி ஆழமற்ற திரைப்படைப்பே. ஒரு நிகழ்வை அதன் யதார்தத்தோடு புரிந்துகொண்டு, எந்த ஆர்பாட்டமுமில்லாமல் கடந்து போகும் வாழ்வியல் எம்மிடம் இருக்கிறது அதில் தவறில்லை மனித இயல்பு என்பதை அறிந்துகொள்ளுங்கள் என்பதையே காட்டுகிறது. முற்போக்குத்தனம், பிற்போக்குத்தனம் என்ற விடயங்கள் இங்கே அடிபட்டுப்போகின்றன.

லட்சுமி என்பது ஒரு கணப்பொழுதில் தோன்றிய ஒரு உணர்வின் வெளிப்பாடு. ஒரு எதிர்விளைவு. கதிரோ, லக்சுமியோ, கணவனோ எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் அவரவர் தங்களுக்குத் தேவையானதை பயன்படுத்திக்கொண்டார்கள் அவ்வளவே. அந்த ஒருநாள் நிகழ்வில் ஆழமான நேசம் எதுவுமில்லையென்பதும், இது தொடர்ந்தால் தனது பாதுகாப்புநிலைக்கும் குடும்பஅமைப்பிற்கும் அது கேடு தரும் என்றும், இயல்பாகவே ஒரு பெண் உணர்ந்து கொள்கிறாள். அடுத்த நாளில் இருந்து தொடர்பை தூண்டித்துக்கொள்ளும் முடிவைத் தான் மட்டுமாய் எடுத்துக்கொண்டு வாழ்வைக் கடந்து செல்கிறாள். இந்த நிகழ்வைப் பற்றிய ஏக்கமோ, தவிப்போ, குற்ற உணர்வோ காட்டாமல் இருப்பதென்பது, தமிழ் திரையுலகுக்கு மட்டுமல்ல எமது சமூகத்திற்கும் ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும் என்பதில் ஆச்சரியமல்ல.

இதே விடயம் The Bridges of Madison County திரைப்படத்தில் எப்படிக் கையாளப் பட்டிருக்கிறது? அது ஏன் லட்சுமி திரைக்கதையைக ;காட்டிலும் வலுவுள்ளதாய் இருக்கிறது? இங்கும் கதாநாயகி ஒரு குடும்பவாழ்விலிருக்கும் பெண்தான், லட்சுமியின் கணவன் போலல்லாமல், இங்கே காட்டப்படும் கணவர் நேர்மையானவர், உழைப்பாளி, மென்மையானவர், பொருள்வளமும் உண்டு, நல்லதொரு தகப்பன் என்றே காட்டப்படுகிறது. கணவரை ஒரு கெட்ட மனிதராக காட்டிக்கொண்டு, பிறவினைகளுக்கு நியாயம் கொடுத்தபடி கதை நகர்த்தப்படவில்லை. காதலுனும் எந்தவகையிலும் ஏமாற்றுக்காரனாகக் காட்டவில்லை. ஆனால், காலத்தால் சுவையிழந்து போன மணவாழ்வையும், சலிப்பையும் ஒரு சிறு உணவறைக் காட்சியின் மூலம் இயக்குனர் உணர்த்திவிடுகிறார். இதுதான் விடயம்.

இக்கதையில் இருவர் சந்தித்தார்கள், காதல் வயப்பட்டார்கள் என்று படத்தின் கதை ஆரம்பித்தாலும்,27749877_10215648020384145_2342304221384669518_n திரைக்கதை சொல்வது காதல் பற்றியோ காமம் பற்றியோ அல்ல. இருவரும் சேர்ந்து வாழத் தகுதியானவர்கள் என்பதையும், தம்மிடையே பகிர்ந்துகொள்ளப் பல விடயங்கள் இருப்பதையும், அதையும் தாண்டி இருவருக்குமிடையே இலகுத்தன்மையும், நேசமும் வெகு இயல்பாக் இழையோடுவதையும் உணர்ந்து கொள்கிறார்கள். கண்மூடித்தனமாக தாம் காதலில் விழுந்துவிடவில்லை என்பதை இவர்கள் அறிந்தபின்னும், சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, புதிய உறவாக அதைத் தொடர்ந்து ஏற்படுத்திக்கொள்ளவில்லை. அப்படி சேர்ந்து வாழத் தேவையில்லை என்ற முடிவை இருவரும் சேர்ந்தே எடுத்துக்கொண்டு பிரிந்து விடுகின்றனர். ஆனாலும் இங்கே காட்டப்படுகின்ற நேசம் மிகஆழமானதாக இருக்கிறது.

பிரிவு என்ற முடிவை அவர்கள் அந்த இடத்தில் எடுக்காமற் போயிருந்தால், ஒரு அழமான காதல்நிலையை அவர்கள் பெற்றிருக்கமுடியாமல் போயிருக்கும். இந்த அவஸ்தைநிலையை பார்வையாளரிடமும் உண்டாக்கிவிடுவதே இந்தப் படத்தின் வெற்றி. இந்தக்கதையின் ஒவ்வொரு பாகமும் அழகியலோடும், ஆழத்தோடும் நகர்வது படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. இறுதிக் காட்சிவரை காதலின் ஆழத்தை காட்சிகள் விதைத்துக்கொண்டே செல்கிறன. இந்தக் காதலும், இவர்கள் அனுபவித்த காலமும் இருவரது வாழ்விலும் மிகஉயர்ந்த இடத்தில் நிலைத்திருக்கப்போகும் நேசம் என்பதை பார்வையாளர்களும் உணர்ந்துகொண்டே இருக்கின்றனர். யார்மீதும் குற்றத்தைச் சுமத்தாம27750661_10215648020464147_8893184344445190144_nல், வாழ்வின் யதார்த்தத்தை, காதலை, மனிதாபிமானத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறது The Bridges of Madison County.

Roman Holiday, இதே விடயத்தை நகைச்சுவையோடு சொல்கிறது. மனஅழுத்தம், சலிப்பு என்பது மேல்மட்டத்திலும் இருக்கிறது. அதை ஒரு மணவாழ்க்கை மட்டும் கொடுக்கும் விடயமில்லை என்பதையும், எமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் எத்தனை இனிமையுடையவை என்றாலும் நாம் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதையும்தான் இந்தப்படமும் சொல்கிறது. அதையும் தாண்டி படம் எடுத்துச் செல்லும் மனிதநேயமும் அன்பும் அழகியலும், வேறு பரிமாணத்தைத் இங்கே கொண்டிருக்கிறது.

27857820_10215648020424146_3027275994204398095_nஇப்சனின் ”பொம்மைவீடு” எழுதப்பட்ட காலத்தில் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்த ஒரு அரங்க நாடகம். பார்த்தோமானால், இங்கு சித்தரிக்கப்பட்ட ஆண் பாத்திரமானது மிகத்தெளிவான, அன்பினை வெளிபடுத்தத்தெரிந்த, தனது பெண்ணைப் பாதுகாத்து வைத்திருக்கக்கூடிய, எப்போதும் தன் மனைவியை வர்ணித்துக்கொண்டும் கொஞ்சிக்கொண்டும் இருக்கக்கூடிய, சமூகத்தின் கனவு நாயகனாக விளங்கும் ஒரு முன்மாதிரி வடிவமாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு ஆண்மகனை எதற்காக ஒரு பெண் முற்றுமுழுதாக நிராகரித்துச் செல்லவேண்டும்? அப்படியானால் நூரா என்ற பெண்ணுக்கு இவைகளைத் தாண்டி என்ன தேவை ஏற்படுகிறது? இப்சன் சொல்ல வருகின்ற சலிப்பும் அதன் பின்னணியும் லட்சுமி பேசும் பின்னணியும் பாத்திரச்சித்தரிப்பும் இந்த இடத்தில் முற்றிலும் வேறுபடுகிறது. இப்சனின் நூரா இன்னொரு ஆண்மகனையோ காதலையோ தேடிச்செல்லவில்லை. இப்சனின் இந்தக்கதை எடுத்துவருவது பெண்ணின் சுயதேடலும், பெண் இருப்பும், உளவியலும் சார்ந்த ஆழமான விடயங்கள்.

ஒரு அலுப்பான வாழ்க்கையைக் கொண்ட சமூகமுறைக்குள்தான் உலமே இயங்கிக் கொண்டிருக்கிறது. மனஅழுத்தத்தையும், இயந்திர வாழ்க்கைமுறை கொடுக்கும் பாதிப்பையும் எப்ப27752611_10215648021024161_2897951770556052693_nடிச் சரிவரச் சொல்லவில்லையோ, அதைப்போலவே காதலை நேசத்தை ஒரு மனிதனுக்குத் தேவையான வாழ்தலையும் லக்சுமியில் சரியாகச் சொல்லவில்லை. ஆழமற்ற பாத்திரப்படைப்புகளைக்கொண்டது லக்சுமி என்பதால், நாமும் ஆழமாக இதைப்பற்றி பேச ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது.

இங்கு குறிப்பிட்ட அனைத்து திரைப்படங்களையும் ஒப்புநோக்கிப் பார்க்கையில், இதில் தனியான ஒரு ஆணையோ பெண்ணையோ அல்லது சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துபவர்களையோ குற்றம்சொல்லிவிட்டுப் போகமுடியாது. அல்லது அலட்சியப்போக்கையோ, உதாசீனங்களையோ, ஆண் பெண் குணவேறுபாடுகளையோ கூட காரணியாக்க முடியாது.

அடிப்படையான கேள்வி ஒன்று இருக்கிறது. ஒருதுணைமணம் (Monogamy – ஒரு ஆணும் ஒரு பெண்ணும்). நமது சமூகம் வைத்திருந்த பல மாதிரியான மணவாழ்வியல் முறைகளில், ஒருதுணைமணம் தான் நாம் இப்போது வைத்திருக்கும் சமூக மணவாழ்வியல் மரபு. இப்படியாக நாம் எடுத்துவைத்திருக்கும் ஒருதுணைமணம் மற்றும் அதுசாந்த வாழ்வு தரும் சலிப்பு என்பவைதான் இங்கே சொல்லப்பட்ட கதைகள் அனைத்திலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறதா?

மனித ஒழுங்குகள் பலதும் இயற்கைக்கு மாறானதாகவே இருக்கின்றன போலும், அதனால்தான் அவை கடைப்பிடிக்கவேண்டிக் கட்டாயப்படுத்தப்படுகின்றன. இயற்கையான ஒன்றை மனிதகுலம் அமைப்பிற்குள் கொண்டுவரத் தேவையில்லைத்தானே. ஒழுங்குகளும், கட்டமைப்புகளும் மனித இயற்கைக்குப் புறப்பானதாக இருப்பதால்தானே மீறுதல்களும் நடக்கின்றன. செயற்கைத்தனமான எமது அமைப்புமுறைகள் பழக்கப்படுத்தப்படுகிறதே தவிர அதுதான் சரியென்று சொல்லமுடியுமா என்ன?

ஒவ்வவொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு விதிமுறைகள், வெவ்வேறு பழக்கவழக்கங்கள், வாழ்வுமுறைகள். இதில் எந்தச்சமூகத்தினதை சரி என்று நாம் வாதிட முடியும்? எல்லாம் மனிதக் கண்டுபிடிப்புகள். இந்தக் கண்டுபிடிப்புகளில் இருந்து விலகுதல் என்பது குற்றவுணர்வை தருகிறதே, அதுசரிதானா? அமைப்புகளும் ஒழுங்குகளும் இயற்கைக்கு மாறான மனித தேவையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. அதனால்தான் இயற்கை எப்போதும் வென்றுகொண்டே இருக்கிறது. நாம் தோற்றுக்கொண்டே இருக்கிறோம் என்பதே மேற்கூறிய அத்தனை படைப்புகளினதும் சாரம்.


Related News

 • ஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை என்கிறார் சமந்தா
 • ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் – விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
 • கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
 • சீதக்காதி சென்சார் வெளியீடு – நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்
 • ஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
 • 96, ராட்சசன் படக்குழுவை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
 • விஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்
 • சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் – வைரமுத்து
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *