மாநில அரசுகள் விரும்பினால் அரசு விளம்பரங்களில் முதல் அமைச்சர் படத்தினை போடலாம் – நீதிமன்ற தீர்ப்பு

ekuruvi-aiya8-X3

மத்திய அரசின் சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களில் பிரதமர், மத்திய மந்திரிகளின் புகைப்படங்கள் இடம் பெற்று வந்தன. இதேபோல் மாநில அரசின் விளம்பரங்களில் முதல் அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் படங்கள் இடம்பெறுவது வழக்கம்.

supreme_courtஇந்த நிலையில் மத்திய, மாநில அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம் பெறுவதற்கு எதிராக ‘காமன் காஸ்’ உள்ளிட்ட தொண்டு நிறுவனங் கள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தன.

இந்த மனுக்களை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி. ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து, அதன் பரிந்துரையை ஆய்வு செய்தது.

பொதுநல மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அரசு விளம்பரங்களில் ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், மத்திய மந்திரிகள், மாநில கவர்னர்கள், முதல்-அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோரின் படங்கள் இடம்பெறக்கூடாது என்றும் கடந்த ஆண்டு மே 13-ந் தேதி தீர்ப்பு வழங்கினார்கள்.

இந்த தீர்ப்பை எதிர்த்தும், மறுஆய்வு செய்யக்கோரியும் தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “அரசு விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படத்தை வெளியிட அனுமதிக் கும் போது, மாநில முதல்- அமைச்சரின் புகைப்படம் இடம் பெறுவதையும் அனுமதிக்க வேண்டும். மாநில அரசின் விளம்பரத்தை எப்படி வெளியிட வேண்டும் என்பது மாநில அரசின் நிர்வாக கொள்கை சார்ந்த முடிவு. முதல்-அமைச்சர் மற்றும் துறை அமைச்சர்களின் புகைப்படங்களை வெளியிடுவதில் எந்த வகையான விதிமீறல்களும் இருக்க முடியாது. எனவே இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

கர்நாடகம், மேற்கு வங்காளம், அசாம், உத்தர பிரதேசம், ஒடிசா, சத்தீஷ்கார் மாநில அரசுகளும் மறுஆய்வு மனுக்களை தாக்கல் செய்தன. இதே போல் மத்திய அரசின் சார்பிலும் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பினாகி சந்திரகோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.

விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி வாதாடுகையில், அரசு விளம்பரங்களில் மத்திய மந்திரிகள், மாநில முதல்-அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோரின் படங்கள் இடம் பெறுவதற்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்தார்.

மத்திய அரசின் விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் இடம் பெற அனுமதிக்கும் பட்சத்தில், அதே உரிமை மந்திரிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார். அரசு விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படத்தை மட்டுமே வெளியிட வேண்டும் என்பது தனிநபர் துதிபாடும் முறைக்கு வழிவகுக்கும் என்றும், இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.

இதேபோல் அரசு விளம்பரங்களில் மாநில முதல்- அமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் படங்களையும் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்கள் மக்களுக்கு பதில் அளிக்க வேண்டியவர்கள் என்றும், அவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியவேண்டும் என்றும் கூறிய முகுல் ரோகத்கி, கோர்ட்டு தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை மற்றும் அனைத்து தரப்பினரின் வாதங்கள் கடந்த 9-ந் தேதி முடிவடைந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பினாகி சந்திரகோஷ் ஆகியோர் நேற்று தீர்ப்பு வழங்கினார்கள்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

கடந்த ஆண்டு மே 13-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு மறுஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த தீர்ப்பில் அரசு வெளியிடும் விளம்பரங்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஆகியோர் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதை நீட்டித்து, இப்போது மத்திய மந்திரிகள், மாநிலங்களின் கவர்னர்கள், முதல்- அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் படங்களும் விளம்பரங்களில் இடம்பெற அனுமதிக்கப்படுகிறது.

மத்திய அரசு விருப்பப்பட்டால் அரசு விளம்பரங்களில் இலாகா சம்பந்தப்பட்ட மந்திரிகளின் படங்களை வெளியிடலாம்.

இதேபோல், மாநில அரசுகள் விரும்பினால் அரசு விளம்பரங்களில் முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் படங்களை பிரசுரிக்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

Share This Post

Post Comment