பெல்ஜியத்தில் சென்னை என்ஜினீயர் மாயம்

Facebook Cover V02

raga_infosysபெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் விமான நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் நேற்று முன்தினம் பயங்கர தாக்குதல் நடத்தினர். அதில், 35 பேர் பலியானார்கள். 2 இந்தியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பிரசல்சில் பணியாற்றி வரும் சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது.

அவரது பெயர் ராகவேந்திர கணேசன். அவர் பிரபல தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ‘இன்போசிஸ்’ ஊழியர் ஆவார். மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள இன்போசிஸ் கிளையில் அவர் 4 ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு, பிரசல்ஸ் நகரில் ஒரு ‘புராஜக்ட்’ பணிக்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்றார்.

ராகவேந்திர கணேசனுடைய மனைவி, சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்ப்பதற்காக, கடந்த மாதம் கணேசன், சென்னைக்கு வந்திருந்தார்.

அவருடைய தாயார் அன்னபூரணி, மும்பையில் வசித்து வருகிறார். குண்டு வெடிப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, தன் தாயாருடன் ‘ஸ்கைப்’ மூலமாக கணேசன் பேசினார். தான் பணிக்கு கிளம்பிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, ராகவேந்திர கணேசனுடனான தொடர்புகள் அனைத்தும் அறுந்தன. அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அவரது பெயர், பலியானவர்கள் பட்டியலிலோ, காயம் அடைந்தவர்கள் பட்டியலிலோ இல்லை. அதனால் அவர் எப்படி இருக்கிறார் என்பது மர்மமாக இருக்கிறது.

பிரசல்ஸ் நகரில் உள்ள இந்திய தூதரகம், ராகவேந்திர கணேசனை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரிகளுக்கு குழுக்களை அனுப்பியது. ஆனால், கணேசன் அங்கும் இல்லை.

இன்போசிஸ் நிறுவனம், இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. கணேசனுடன் பணியாற்றும் சக ஊழியர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைத்தளங்கள் மூலமாக தகவல்களை பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இன்போசிஸ் நிறுவனத்தின் புனே, பெங்களூரு மற்றும் பிரசல்ஸ் கிளைகளின் அதிகாரிகள், ராகவேந்திர கணேசனின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.

ராகவேந்திர கணேசனை தேடி கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருவதாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கணேசனின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரை கண்டுபிடிக்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-

இதுதொடர்பாக இந்திய தூதர் மஞ்சீவ் பூரியுடன் பேசினேன். கணேசனின் தாயாருடனும் பேசினேன். கணேசனை கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தேன்.

அதுபோல், குண்டு வெடிப்பு தாக்குதலில் காயம் அடைந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் இருவரும் குணம் அடைந்து வருகிறார்கள். அங்குள்ள விமான நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. அதனால் பரிதவித்து வரும் இந்திய பயணிகள், ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான மாற்று திட்டம் குறித்து ஜெட் ஏர்வேசுடன் பேசி வருகிறோம் என்று சுஷ்மா சுவராஜ் கூறினார்.

இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, எங்கள் ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்களா என்று அறிய ஒவ்வொருவரையும் தொடர்புகொண்டோம். கணேசனை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடைய குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம். அவரை கண்டுபிடிக்க இந்திய தூதரகம், பிரசல்ஸ் அதிகாரிகள் ஆகியோரின் உதவியை நாடி உள்ளோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment