பிரேமலதா மீது போலீசார் வழக்குப்பதிவு

ekuruvi-aiya8-X3

premalathaநெல்லை டவுன் தேரடி திடலில் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவில் நடைபெற்றது. இதில் பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஓட்டுக்கு பணம் குறித்த சில கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த நிலையில், நெல்லை மாவட்ட கலெக்டர் மு.கருணாகரன் உத்தரவுப்படி, நெல்லை தொகுதி தேர்தல் அலுவலரும், உதவி கலெக்டருமான பெர்மி வித்யா, நெல்லை தாசில்தார் மரகதநாதன் உள்ளிட்டோர் அடங்கிய தேர்தல் அதிகாரிகள், பிரேமலதா பேசிய வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர்.
‘‘அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகள் ஓட்டுக்கு பணம் தந்தால் வாங்கிக்கொள்ளுங்கள். ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் தந்தால் போதாது, ஒரு லட்ச ரூபாய் வரை தாருங்கள் என்று கேட்டுக்வாங்குங்கள்’’ என அவர் பொதுக்கூட்டத்தில் பேசி இருப்பதாக கூறி நெல்லை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரை தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான மரகதநாதன் அளித்தார்.
மேலும் அந்த புகாரில், பிரேமலதா வாக்காளர்களை பணம் வாங்க தூண்டும் வகையில் பேசி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார், பிரேமலதா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே மாநகராட்சி நெல்லை மண்டல தலைவர் மோகன் தலைமையில் அ.தி.மு.க. வக்கீல்கள் பிரேமலதா மீது மேலும் ஒரு புகாரை, உதவி கலெக்டர் பெர்மி வித்யாவிடம் அளித்தனர்.
அதில் ‘‘தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வழிபாட்டு தலங்களில் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கக்கூடாது என தேர்தல் விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை மீறி பிரேமலதா நெல்லையப்பர் கோவிலில் அவரது கட்சிக்கும், மக்கள் நலக்கூட்டணி கட்சியினருக்கும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரேமலதாவின் இந்த செயல் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகும். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சில வீடியோ காட்சிகளையும் உதவி கலெக்டரிடம் அ.தி.மு.க.வினர் வழங்கினார்கள்.

Share This Post

Post Comment