தே.மு.தி.க.வும், மக்கள்நலக்கூட்டணியும் இனிமேல் ‘கேப்டன் விஜயகாந்த் அணி’ என்று அழைக்கப்படும் – வைகோ

ekuruvi-aiya8-X3

viji_koot_23மக்கள்நலக் கூட்டணியும், தே.மு.தி.க.வும் கூட்டணியை உறுதிசெய்ததைத் தொடர்ந்து தொகுதி உடன்பாடு குறித்து பேசுவதற்காக மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.
தே.மு.தி.க. கட்சி அலுவலகத்திற்கு இளைஞரணி செயலாளர் சுதீஷ், பொருளாளர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, சந்திரகுமார் ஆகியோர் காலை 9 மணிக்கே வந்தனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு காலை 9.40 மணிக்கு வந்தார்.
மக்கள்நலக் கூட்டணியில் உள்ள வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் ஒரே காரில் வைகோ வீட்டில் இருந்து புறப்பட்டு தே.மு.தி.க.வின் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.
காரில் இருந்து இறங்கிய 4 பேரையும், தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் சுதீஷ் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.
அதையடுத்து, விஜயகாந்தை மக்கள்நல கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் சந்தித்து தொகுதி உடன்பாடு குறித்து பேசி, அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த பேச்சுவார்த்தையின் போது வேறு யாரும், அந்த அலுவலக அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த், வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் பேசினார்கள். கூட்டணி அமைத்ததற்கான அச்சாரமாக விஜயகாந்துக்கு வைகோ மலர் கொத்து வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, மக்கள்நலக் கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் நிருபர்களுக்கு தனித்தனியாக பேட்டியளித்தனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:-
நடைபெற உள்ள 2016 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன், மக்கள்நலக்கூட்டணி தொகுதி உடன்பாடு செய்துள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி இந்த தேர்தலை சந்திக்கிறோம்.
தொகுதி உடன்பாட்டில் தே.மு.தி.க.வுக்கு 124 தொகுதிகளும், மக்கள்நலக் கூட்டணிக்கு 110 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும், மக்கள்நலக் கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களான நானும், தொல்.திருமாவளவனும், ஜி.ராமகிருஷ்ணனும், முத்தரசனும் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறோம்.
தே.மு.தி.க.-மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நான் இருப்பேன். விஜயகாந்த் தலைமையில் கூட்டணி ஆட்சியாக தான் அமையும். இதை விஜயகாந்தும் ஒப்புக்கொண்டுள்ளார். நாங்களும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டோம்.
மக்கள்நலக் கூட்டணி-தே.மு.தி.க. தொகுதி உடன்பாடு செய்து கொண்ட அணியை இனிமேல் ‘கேப்டன் விஜயகாந்த் அணி’ என்று அழைப்போம். மற்றவை இனி வரும் நாட்களில் தெரிவிப்போம் என்று வைகோ கூறினார்.

Share This Post

Post Comment