உனக்கென்ன வேண்டும் சொல்லு?

அவரின் பின்புறமிருந்து இரண்டு கைகள் களுத்தை நெரிக்கிறது. அவரின் கன்னத்தை ஒரு முத்தம் ஈரம் செய்கிறது. அவரின் தோள்பட்டை, காதுமடல்கள் எல்லாவற்றையும் ஒரு மூச்சுக்காற்று மெல்லிதாய் சூடேற்றுகிறது.
ravithiranவேலைப்பளு, பொருளாதாரச்சுமை, இன்னும் சில காரணிகள் அவரை வாழ்க்கையின் விரக்தி நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. இது நாள்வரை நிமிர்ந்து நடந்த மனிதர் ஒருவர் இன்று மிகுந்த மன இறுக்கத்தோடு அமர்ந்திருக்கிறார்.
விபரீதமான முடிவெடுக்கும் முயற்சியில் இறங்கியிருந்த அவரின் மூளை இப்போது இயங்குகின்றதா? இல்லையா? என்று தெரியாத நிலையில் உறைந்துபோய் அமர்ந்திருக்கிறார்.
கழுத்தை இறுக்கிய கைகளும், தோளிலும் காதுமடல்களிலும் பரவிய மூச்சுக்காற்றும், முத்தமும், ஒன்றாய் இரண்டாய் உடைந்துவிழும் வார்த்தைகளும், அவர் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று உணர்த்துகிறது.
எல்லாமே அர்த்தமற்றதாக தெரிந்த அந்த இறுக்கமான தருணத்தை தகர்த்துப் போடுகிறது அந்தக்கைகளின் செயலும், மூச்சுக்காற்றின் வெப்பமும், முத்தத்தின் ஈரமும், மெல்ல உடைந்து விழும் வார்த்தைகளும்.
அது அவரை இருக்கையில் இருந்து கீழ் இறங்கி நிலத்தில் தவளச் செய்கிறது. ஆம் அவர் நிலத்தில் தவழ்கிறார். குழந்தை தோளில் ஏறி அமர்ந்துகொள்கிறது.
அந்த மண்டபத்தில் யானையும் பாகனுமாக அப்பாவும் பிள்ளையும் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். சிறிது நேரத்தில் களைத்துப்போய்விடுகிறார் அப்பா. மிகுதி யானை ஊர்வலம் நாளைக்கு என்ற வாக்குறுதியுடன் குளிக்கச்செல்கிறார். பின் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் தூங்கச் செல்கிறார்கள்.
அன்றிருந்த இறுக்கம் அடுத்தநாள் தளர்ந்துபோகிறது. வாழ்வதற்கான புதிய வழியொன்று வந்து சேர்கிறது.
இப்போது யோசிக்கிறார்.. ஒருவேளை நேற்று அந்த விபரீதமான முடிவை நான் எடுத்திருந்தால்? சிந்தித்துப் பார்க்கவே கடினமாக இருக்கிறது அவரிற்கு. நேற்று நான் ஏன் அந்த விபரீதமான முடிவை எடுக்கவில்லை? என்றொரு கேள்வியையும் கூடவே தனக்குள் கேட்கிறார். ஆனால் அதற்கான பதிலை அவரால் இலகுவாக கண்டுபிடிக்க முடியவில்லை.
நேற்று நிலவிய இறுக்கமான மனநிலை உடைத்து, அவரின் மனதை ஒருங்கிணைக்கும் உடற்பயிற்சிக்கூடத்திற்கு அழைத்துச்சென்று, அதன்பின் உணவருந்தச் செய்து, தூக்கத்திற்கு கொண்டு சென்றது அவரின் குழந்தை என்பது அவரின் அறிவிற்கு எட்டவில்லை.
ஆம் நேற்று யாருமே அவருக்கு உதவ முடியாச் சூழலில் அந்த அதிசயத்தைச் செய்தது அவர் குழந்தைதான்.
ஆனால் அந்தக் குழந்தைக்கு யாரும் அதைச் சொல்லிக்கொடுத்தது கிடையாது. தன்னையறியாமலேயே குழந்தை அந்த வேலையை தன் தந்தைக்காக செய்து முடித்திருக்கிறது.
பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும்? அவர்களின் உளவியலை கவனமாக கையாளுவது எப்படி? என நிறைய விடயங்களை பெற்றோர்கள் தம் குழந்தை வளர்ப்பின்போது கற்பதும் கவனிப்பதும் உண்டு.
ஆனால் தம் பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி என்றும் பெற்றோரின் உளவியலை கையாளுவது எப்படி என்பது பற்றியும் குழந்தைகளுக்கு யாரும் சொல்லிக்கொடுப்பது கிடையாது. அவர்களுக்கு எந்த ஆய்வும் வழிகாட்டுதலும் கிடையாது. ஆனால் தம்மையறியாமலேயே குழந்தைகள் அதைச் செய்துகொண்டிருக்கின்றன.
நீங்கள் குழந்தைகளை வளர்க்க குழந்தைகளின் உளவியல் பற்றிய புரிதல் உங்களுக்கு வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் குழந்தைகளிடம் நீங்கள் வாழ்வில் கடந்துபோகும் மிகுதி இருபத்தி மூன்று வகை உளவியலையும் வெல்லும் வல்லமை இருக்கிறது.
குழந்தை வளர்ப்பு என்பது பொருளீட்டும் கல்விக்கூடங்களில் ஒருவேளை பெரிய பாடமாக இருக்கலாம். அந்தப் பாடப் புத்தகங்களில் இப்படி இப்படி என்று வரையறுக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் உண்மையில் அது ஒரு வரையறையற்ற வாழ்வியல் கலை. ஒவ்வொருவரிற்கென்றும் ஒவ்வொரு தனித்துவம் பொருந்திய, பெற்றோர் என்கின்ற ஒவ்வொரு கலைஞரும் ரசித்து ரசித்து செதுக்கும் நுண்கலைகள் நிறம்பிய படைப்பு. உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் நிகர் நீங்களேதான். வேறு யாரும் முன்மாதிரியாகவோ, நிகராகவோ, பாடமாகவோ இருந்துவிடமுடியாது.
உங்கள் குழந்தைகளிடம் உங்கள் மரபணுவில் இருக்கும்  ஆர்வம் (Interest) திறன் (Skills) குணநலன் (Personality) போன்ற உள்ளார்ந்த காரணிகள் பெரிதும் மாறாமல் இருக்கும்.
அத்துடன் உணவு, வளரும் சூழல் போன்ற புறம் சார்ந்த காரணிகளைக் கொண்ட அவர்கள் உலகத்தில் நீங்கள் எங்கும் நிறைந்திருந்தால் போதும் உங்கள் குழந்தைகள் இந்த உலகத்தை வெல்லும் வல்லமையை பெற்றுவிடுவார்கள். உங்களுக்கும் குழந்தை வளர்ப்பு கோடி மகிழ்ச்சியை கொண்டுவரும்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கவேண்டும் என்று சொல்வது பொருத்தமானது அல்ல. நீங்கள் அவர்களைத் தோளில் சுமக்கும் நேரமும், அவர்கள் விரல் பிடித்து நடக்கும் நேரமும், அவர்களை முன்னே நடக்கவிட்டு நீங்கள் பின்னே செல்லும் நேரமும், நீங்கள் அவர்களுக்கு வழிகாட்டி முன்னே நடந்து செல்லும் நேரமும் என அவர்களுடன் நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு மணித்துளியும் அவர்களுக்கானது மட்டுமல்ல அவை உங்களுக்கானதும்தான்.
இதைத்தான் நம்பாட்டன் திருவள்ளுவர்
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு (குழந்தையைத் தொட்டணைக்கும் போதும் மழலை மொழியைக் கேட்கும் போதும் மனதுக்கும் உடலுக்கும் இன்பம் உண்டாகின்றது)
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை யளாவிய கூழ் (சிறுகுழந்தை கையில் தொட்டளைந்த உணவு கூழேயாயினும் பெற்றோர்க்கு அது அமுதத்தைவிட இனிதாய் இருக்கும்)
குழலினிதி யாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் (தம் பிள்ளைகளின் மழலைச் சொல் கேளாதவர்களே குழல் ஓசையும் யாழ் ஓசையும் இனிமையாய் இருக்கிறது என்பார்கள்)
எனச் சொல்கிறார்.
பாண்டியன் அறிவுடைய நம்பியும் பலவகை வளத்தையுடையோராய், நாட்டிலுள்ள பலருடன் உணவு உண்ணும் செல்வர்கட்கும் இடையே குறுகுறுவென நடந்து வந்து, கையை நீட்டி, நெய்யுடைய உணவினை இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும், மெய்பட விதிர்த்தும் உள்ளதை மயக்கும் மக்கட்செல்வம் மகத்துவமானதென புறநானூற்றில் சொல்லப்படுகிறது.
உங்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு விடயமும் உங்களுக்கானது. குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லிக்கொடுக்கும் ஒவ்வொரு விடயமும் நீங்கள் கற்றுக்கொண்டது அல்லது கற்றுக்கொள்ள வேண்டியது.
ஒரு தந்தையாவதும் தாயாவதும் இலகுவானது. ஆனால் ஒரு தந்தையாய் இருப்பதுவும் தாயாய் இருப்பதுவும் கடினமானது என்ற பேச்சு சரியானது அல்ல
ஒரு தந்தையாவதும் தாயவதும் இயல்பானது. ஆனால் ஒரு தந்தையாய் இருப்பதுவும் தாயாய் இருப்பதுவும் சுகமானது என்பதே சரியானது.
எழுதிடும் விரல்களாலும் சிரித்திடும் இதழ்களாலும் வாழ்க்கை என்னும் அழகிய கவிதையை எழுதிவிட உங்களுக்கு உங்கள் குழந்தைகளும் அவர்களுக்கு நீங்களும் இருக்க வேறு என்ன வேண்டும் இந்த உலகத்தில் சொல்லுங்கள்?

இந்திரன் ரவீந்திரன்

மார்ச் 2016 – கனடா e குருவி பத்திரிகையில் பிரசுரமாகியது


Related News

 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *