ஆபாச பாடலை பாடிவிட்டு தலைமறைலாக இருக்கும் சிம்புவை கைது செய்ய தனிப்படை அமைப்பு

சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவை கைது செய்ய தடையில்லை என நீதிமன்றம் கூறியுள்ளதால், அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராவதற்கு முன்பாக கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது கோவை, சென்னை உள்பட பல மாவட்டங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால், இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களுக்கு பதிலாக இருவரின் பெற்றோரும் விளக்கம் அளித்தனர். மேலும், நேரில் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரச்னையின் தீவிரம் அதிகரித்ததை தொடர்ந்து சென்னை சைபர் கிரைம் போலீசாரும் சிம்பு, அனிருத் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.

இது அவர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. கைது நடவடிக்கை உறுதி என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சிம்பு பாடலை வெளியிடவில்லை. தங்களுக்கு வேண்டப்படாத யாரோ இதுபோன்று மோசடி வேலைகளில் இறங்கி விட்டனர் என சிம்பு, அவரது தந்தை டி.ராஜேந்தர் உருக்கமாக பேசினர்.
இதைத் தொடர்ந்து யூடியூப்பில் பாடலை வெளியிட்டது யார் என்ற விபரத்தை தெரிந்து கொள்வதற்காக மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமார் யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார்.இதனால், குற்றவாளி விரைவில் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது, இரண்டாவது கடிதத்தை எழுதி உள்ளனர். அதில், பீப் பாடலை பதிவிறக்கம் செய்தவர்கள் பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்கையில், சிம்புவுக்கு முன் ஜாமீன் வழங்குவதற்கு அரசு தரப்பு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பெண் வக்கீல்களும் சிம்புவுக்கு எதிராக வாதாடினர். நீதிமன்றமும் முன்ஜாமீன் வழங்கவில்லை. மேலும் அவர்கள் ஜனவரி 2ம் தேதி போலீசில் நேரில் ஆஜராகும் தேதியை வேறு ஒரு நாளுக்கு மாற்றி உத்தரவிட்டார். எனினும் அவரது வக்கீல், சிம்புவை கைது செய்யக்கூடாது என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து சிம்பு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு ஏற்றாற்போல் சைபர் கிரைம் போலீசார் சிம்புவை கைது செய்ய தற்போது 3 தனிப்படை அமைத்துள்ளனர்.

தனிப்படை போலீசார் சிம்புவின் நடமாட்டத்தை தற்போது உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் சென்னையில் இல்லை. வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார் என்ற தகவலும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து சிம்பு பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரித்தபோது சாதகமான பதில் ஏதும் போலீசாருக்கு கிடைக்கவில்லையாம். எனவே, அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக சிம்பு பதுங்க அடைக்கலம் கொடுத்தால் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை பாயும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், அனிருத்தும் வெளிநாட்டில் தொடர்ந்து பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இவர் மீதும் போலீசாரின் பார்வை விழுந்துள்ளது. இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜன.8ல் ஆஜராக கோர்ட் சம்மன்

நம்ம மேட்டுப்பாளையம் அமைப்பு சார்பில் மேட்டுப்பாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த 21ம் தேதி சிம்பு,அனிருத் மீது வழக்கு தொடரப்பட்டது. இம்மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. மனுவை பரிசீலனை செய்த மாஜிஸ்திரேட் சுரேஷ்குமார், இந்த வழக்கில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் வரும் ஜனவரி 8ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக கோரி சம்மன் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, இருவருக்கும் நேற்று மாலை சம்மன் அனுப்பப்பட்டது.


Related News

 • வைரமுத்து மீதான புகாருக்கு என்ன காரணம்? – பாடகி சின்மயி
 • உலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்
 • ஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை என்கிறார் சமந்தா
 • ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் – விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
 • கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
 • சீதக்காதி சென்சார் வெளியீடு – நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்
 • ஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
 • 96, ராட்சசன் படக்குழுவை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *